2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டி ஒன்றில் சச்சின் தனது நூறாவது சதத்தை எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த போது, அவரை 91 ரன்களில் அவுட்டாக்கியதால் தனக்குக் கொலை மிரட்டல்கள் கூட வந்ததாக இங்கிலாந்து பந்துவீச்சாளர் டிம் பிரெஸ்னன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு தனது 99 ஆவது சதத்தை அடித்த சச்சின் எப்போது தனது நூறாவது சத்தத்தை நிறைவு செய்வார் என ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக்கொண்டிருந்தனர். அந்தச் சூழலில், இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில், சச்சின் 91 ரன்கள் எடுத்திருந்த போது ப்ரெஸ்னன் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அன்றைய தினம் சச்சினின் நூறாவது சதத்தைப் பார்ப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. மேலும், அந்தப் போட்டியில் நடுவர் ராட் டக்கெர் சச்சினுக்குத் தவறாக அவுட் கொடுத்துவிட்டார் என சர்ச்சையும் எழுந்தது.
இதனால் ரசிகர்களின் ஏமாற்றம் கோபமாக மாறி, ப்ரெஸ்னன் பக்கமும், நடுவர் பக்கமும் திரும்பியது. அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து தற்போது பேசியுள்ள ப்ரெஸ்னன், "2011-ஆம் சச்சினை அவுட் செய்த பின்னர் எனக்குத் தொடர்ந்து நிறைய மிரட்டல்கள் வந்தன. அதில் கொலை மிரட்டலும் உண்டு. உங்களுக்கு என்ன தைரியம் இருந்தால் சச்சின் விக்கெட்டை வீழ்த்தி இருப்பீர்கள் என்று ரசிகர்கள் திட்டினார்கள். அதேபோல, சச்சினுக்கு அவுட் கொடுத்த ராட் டக்கெருக்கும் இதுபோன்ற கொலை மிரட்டல் வந்துள்ளது. சில மாதங்கள் கழித்து நான் அவரிடம் பேசிய போது, வீட்டிற்கு போலீஸ் காவல் கொடுக்குமளவு பிரச்னையாகிவிட்டது என்றார்" எனத் தெரிவித்துள்ளார்.