இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா ஐ.பி.எல். தொடரின்போது காயமடைந்தார். அதன்பிறகு சில போட்டிகளில் விளையாடாத ரோகித் சர்மா, ப்ளே-ஆப் மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடினார்.
இருப்பினும் காயம் முழுமையாக குணமடையாததால் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஆனால், முழு உடல்தகுதியை விரைவில் எட்டினால், ரோகித் சர்மா டெஸ்ட் தொடரில் ஆடுவார் என இந்திய அணி நிர்வாகம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, ரோகித் சர்மா, முழு உடல்தகுதியினை எட்டுவதற்காக தேசிய கிரிக்கெட் அகடாமியில் பயிற்சி பெற்றுவந்தார். இந்தநிலையில், நேற்று ரோகித் சர்மாவுக்கு உடல் தகுதி சோதனை நடைபெற்றது. அச்சோதனையில் ரோகித் சர்மா, தனது முழு உடல் தகுதியை நிருபித்தார்.
இதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா, உடல் தகுதியை நிரூபித்ததை உறுதிப்படுத்தி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஆஸ்திரேலியாவிற்கு சென்ற பின் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்படும் ரோகித் சர்மாவிற்கு, இந்திய அணியின் மருத்துவ குழு, மீண்டும் உடல் தகுதி சோதனை நடத்தும். அதன்முடிவைப் பொறுத்தே, ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் ஆடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.