அமரப்பள்ளி தனியார் கட்டுமான நிறுவனம் தங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு வீடு கட்டித்தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த சிலர், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்வதற்காக இரண்டு ஆடிட்டர்களைக் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை அமைத்தது. இது தொடர்பான விசாரணை பல மாதங்களாக தொடர்ந்த நிலையில், தற்போது அந்த குழுவினர் தங்களின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஆடிட்டர் குழுவின் அறிக்கையில், அமரப்பள்ளி குழுமத்தின் கீழ் இயங்கும் அமரப்பள்ளி மகி என்ற நிறுவனமும் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தோனியின் மனைவி ஷாக்ஷி அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தோனியும் சில மாதங்களுக்கு முன்பு, 'நானும் வீடு கட்ட அந்த நிறுவனத்திடம் முதலீடு செய்துள்ளேன், ஆனால் எனக்கு வீடு கட்டித் தரவில்லை' என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு நிதி நிறுவன முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளான கிரிக்கெட் வீரர் ஒருவர் தற்போது பாஜகவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கும். அவர் வேறுயாருமல்ல, தில்லியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம் கம்பீர்தான் . அவர் மீதும் இதே மாதிரியான குற்றச்சாட்டுகள் எழுந்தது. அடுத்த சில மாதங்களில் அவர் பாஜக வசம் சென்றார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போதும் அதே போன்றதொரு சூழ்நிலைக்கு தோனி தள்ளப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. விரைவில் ஜார்க்கண்ட மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் போட்டியிட வலுவான தலைமையை பாஜக தேடி வருவதாக ஒரு தகவல்கள் பல மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. 5 மாநில தேர்தல் போல, தேர்தல் முடிவு தங்களுக்கு எதிராக போய்விட கூடாது என்பதில் பாஜக தரப்பு தெளிவாக உள்ளது. அதற்காக பாஜக மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் 'இதுவும்' ஒன்று என தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் தோனியை சேர்ப்பதற்காக அவருக்கு கடும் நெருக்கடி தரப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. உண்மை நிலை என்ன என்று தோனி வெளிப்படுத்தினால் தான் உண்டு.