ரோகித் ஷர்மாவின் தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால்தான் அவர் அமீரகத்திலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா புறப்பட்டுச் செல்லவில்லை என பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரோகித் ஷர்மா, விராட் கோலி, பிசிசிஐ-யை மையப்படுத்தி சர்ச்சைகள் வலம்வந்த வண்ணம் உள்ளன. இந்திய அணி வீரர் ரோகித் ஷர்மாவின் பெயர் இந்திய அணியில் இடம்பெறாததையடுத்து எழுந்த சர்ச்சை, டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அவர் பெயரை சேர்த்த பின்னும் ஓய்ந்தபாடில்லை. இந்த விவகாரம் குறித்து சில தினங்களுக்கு முன்னர் ரோகித் ஷர்மா விளக்கமளித்தநிலையில், இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி நேற்று விளக்கம் அளித்தார்.
அதில் அவர் பேசும்போது, "ரோகித் ஷர்மா விவகாரத்தில் தெளிவின்மை நிறைந்துள்ளது. அவர் ஏன் எங்களுடன் ஆஸ்திரேலியா புறப்படவில்லை என்பதற்கான காரணம் தெரியவில்லை" எனக் கூறினார். விராட் கோலியின் இந்தக் கருத்திற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், "ரோகித் ஷர்மாவின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், அவர் ஐபிஎல் போட்டியை முடித்துவிட்டு மும்பை திரும்ப வேண்டியிருந்தது. தற்போது அவரது உடல்நிலை மேம்பட்டள்ளது.ஆகையால், அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய உடற்தகுதியை நிரூபிக்கும் வேலையில் உள்ளார். டிசம்பர் 11-ம் தேதி உடற்தகுதி சோதனை அவருக்கு நடக்க இருக்கிறது. அதன்பிறகு டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது குறித்து தெளிவு ஏற்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
ரோகித் ஷர்மா, விராட் கோலி, பிசிசிஐ மூவரும் தனித்தனி துருவமாக நின்று மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தி வருவது கிரிக்கெட் ரசிகர்களை குழப்பமடையச் செய்துள்ளது.