ரஹானே விராட் கோலி மாதிரி இருக்க முயற்சிக்கக்கூடாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜான் புக்கனன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
தனக்கு முதல் குழந்தை பிறக்கவுள்ள காரணத்தால், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை முடித்துவிட்டு விராட் கோலி இந்தியா திரும்பவுள்ளார். இதனால் எஞ்சியுள்ள போட்டிகளில் துணைக்கேப்டனான ரஹானே அணியை வழிநடத்த இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜான் புக்கனன் ரஹானே குறித்துப் பேசுகையில், "விராட் கோலி இல்லாதது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு. விராட் கோலியின் உற்சாகம், ஒரு அணியாக என்ன செய்ய முடியும் என்ற அவரது நம்பிக்கை என அனைத்தையும் அவர்கள் தவறவிடுவார்கள். இவையெல்லாவற்றையும் விட உலகின் தலை சிறந்த ஒரு பேட்ஸ்மேனை அவர்கள் தவறவிடுவார்கள். கேப்டனாக ரஹானே குறித்து எனக்கு எந்த உள்ளார்ந்த பார்வையும் இல்லை. அவர் விராட் கோலியாக முடியாது. அவர் மாதிரி இருக்க முயற்சிக்கவும் கூடாது. அவரது முதல்வேலை ரன்கள் குவித்து, அதன்மூலம் முன்மாதிரியாக செயல்பட்டு அணியை வழிநடத்துவது" எனக் கூறினார்.