இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஆஞ்சலோ மேத்யூஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
துபாயில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆறு அணிகள் களமிறங்கின. அதில், இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளே பலமான அணிகளாக இருந்தன. குரூப் பி பிரிவில் களமிறங்கிய இலங்கை அணி, எதிர்பார்ப்புக்கு மாறாக, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய சிறிய அணிகளிடம் தோற்றது.
இந்தத் தோல்வியின் மூலம் அந்த அணி தொடரில் இருந்து வெளியேறியது. மிக மோசமான இந்தத் தோல்வியால், இலங்கை அணி கடுமையான விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. இந்த விமர்சனங்களின் எதிரொலியாக, அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பொறுப்பு தினேஷ் சண்டிமாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பொருட்டு, ஏஞ்சலோ மேத்யூஸ் உடனடியாக ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், டெஸ்ட் அணியின் கேப்டனான தினேஷ் சண்டிமால் கூடுதல் பொறுப்பு பெற்றுள்ளார்.