மான்செஸ்டரில் புதன்கிழமை நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
7 ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தோனி களத்தில் இருந்தபோது எப்படியும் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது அவரின் ரன் அவுட். இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி இந்த மூலம் பல சர்ச்சைகள் வெடித்துள்ளன.
அந்த வகையில் இந்திய அணியின் தோல்வி குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் கேப்டன் கவாஸ்கர், "கடந்த 2 ஆண்டுகளாக கேப்டன் விராட் கோலி, ரவிசாஸ்திரி உள்ளிட்ட அணி நிர்வாகம் எடுக்கும் பல முடிவுகளும் திகைப்பூட்டுபவையாக உள்ளன. அதேபோல தான் அரையிறுதி போட்டியிலும். 4 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், பந்து நன்றாக ஸ்விங் ஆகிக்கொண்டிருந்தது. அப்போது போய் பாண்டியா, பந்த் என இரு அதிரடி வீரர்களை களத்தில் இறக்கியது சரியல்ல.
தோனி இறங்கி ரிஷப் பந்தை வழிநடத்தியிருக்க வேண்டும். பந்துகள் ஸ்விங் ஆகும்போது அனுபவமில்லாத அதிரடி வீரர்கள் இருவரை அங்கு இறக்கியது அதிர்ச்சிகரமாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக என்னதான் செய்தீர்கள் என்பதை மக்களுக்கு கூறுங்கள். இங்கு நடந்த அனைத்து தவறுகளுக்கும் அணி நிர்வாகம்தான் பொறுப்பு. அம்பதி ராயுடு விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
ராயுடுவை ஒதுக்கி மாயங்க் அகர்வாலை அணையில் சேர்த்து ஏன்?மாயங்க் இன்னும் ஒரு ஒருநாள் போட்டியில் கூட ஆடவில்லை. அவரைக் கொண்டு போய் உலகக்கோப்பை அரையிறுதி, இறுதிப் போட்டியில் அறிமுகம் செய்வார்களா? கோலி, ரவி சாஸ்திரி இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறியே ஆக வேண்டும்” என கூறினார்.
இந்நிலையில் தற்போது பிசிசிஐ அமைப்பும் ரவி சாஸ்திரியிடம் விளக்கம் கேட்டுள்ளது. எதற்காக தோனி 7 ஆம் இடத்தில் இறக்கப்பட்டார் என்பது குறித்து ரவி சாஸ்திரி உடனடியாக விளக்கம் தர வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.