களத்தில் அசாதாரண சூழலையும் அசால்ட்டாக கையாளுவதில் கைதேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் தோனி. பல சமயங்களில் அவரது கூல் பாணி நீடித்தாலும், சில சமயங்களில் அவரது கோபத்துக்கு ஆளாகுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்தவகையில், தோனியின் கோபத்துக்கு தான் ஆளானதாக குல்தீப் யாதவ் தகவலை வெளியிட்டிருக்கிறார். வாட் தி டக் என்ற நிகழ்ச்சியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் யஷ்வேந்திர சகால் கலந்துகொண்டனர். அப்போது இந்திய அணியில் தங்களுக்கு நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து அவர்கள் பேசினர். ஸ்டம்புக்குப் பின்னால் இருந்து வரும் தோனியின் அறிவுரைகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த குல்தீப் யாதவ், இலங்கைக்கு எதிரான போட்டி பற்றி குறிப்பிட்டார்.
இந்தூர் மைதானத்தில் இந்தியா இலங்கை இடையே டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 260 ரன்களைப் பதிவு செய்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். தவறாக அடிக்கப்பட்ட ஷாட்கள் கூட சிக்ஸர்களாக பறக்க, கடுப்பான தோனி என்னை அழைத்து பீல்டிங்கில் சில மாற்றங்களை ஏற்படுத்துமாறு சொன்னார். ஆனால், குழப்பத்திலிருந்த நான் அதை ஏற்க மறுத்தேன். கோபமடைந்த தோனி, ‘நான் என்ன முட்டாளா? இதற்கு முன் 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன்’ எனச்சொல்ல பதறிப்போய் அவர் பேச்சைக் கேட்டேன். அதற்கு பலனாக விக்கெட்டும் வீழ்ந்தது. அப்போது என்னிடம் வந்த தோனி, இதைத்தான் செய்யச் சொன்னேன் என சொல்லிவிட்டுச் சென்றார் என குல்தீப் தெரிவித்துள்ளார்.