2000-ஆம் ஆண்டுகளில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்தது. பல அதிர்ச்சியான நிகழ்வுகளால் சில கிரிக்கெட் அணிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதில் இந்திய அணியும் ஒன்று. பல மாற்றங்களை செய்ய வேண்டிய நிலையில் இருந்தது இந்திய கிரிக்கெட் அணி.
புதிதாக அணியை கட்டமைக்க வேண்டிய சூழ்நிலையிலும், பல கடினமான தொடர்களை சந்திக்க வேண்டிய நிலையிலும் இந்திய அணிக்கு தலைமையேற்க கங்குலி என்னும் அசாத்திய திறமை கொண்ட ஒரு லீடர் கிடைத்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அது மிகப்பெரிய திருப்புமுனை.
“வீட்டுல புலி; வெளில எலி” என்பதைப் போல சொந்த மண்ணில் வெளுத்துக் கட்டும் பல கிரிக்கெட் அணிகள், வெளிநாடுகளில் மண்ணைக்கவ்வி கொண்டு திரும்பி வரும். இந்த லிஸ்டில் இந்திய அணியும் விதிவிலக்கு இல்லை. 1990-களில் வெளிநாடுகளில் இந்திய அணியின் செயல்பாடு ஒரு சில தொடர்களில் ஓரளவு இருந்தாலும், பெரும்பாலான தொடர்களில் மிகவும் மோசமாகவே இருந்துவந்தது. அந்த மோசமான வரலாற்றை கங்குலி தலைமையின்கீழ் மாறத் துவங்கியது.
பல திறமையான வீரர்களைக் கொண்டிருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணி, 1990-2000 காலகட்டங்களில் பல தொடர்களில் மிகவும் மோசமான தோல்விகளை அடைந்துவந்தது. அதற்கு பிறகு பொறுப்பேற்ற கங்குலி பல மாற்றங்களை கொண்டுவந்தார். போராடும் குணத்தையும், எந்த நாட்டிலும் எந்த போட்டியிலும் நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார். வீரர்களின் தனிப்பட்ட திறமையை அறிந்து அதற்கேற்ப அவர்களை பயன்படுத்தினார். வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் போன்ற பல உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கிரிக்கெட்டிற்கு அடையாளப்படுத்தினார்.
பின்னர் கேப்டன் தோனி இந்தியாவை ஒரு பெரும் சக்தியாக உருவாக்கினார். கங்குலியின் வேலையை சிறப்பாக தொடர்ந்து செய்தார். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முடியும் என்ற அணுகுமுறையுடன் அனைத்து போட்டிகளிலும் களம் கண்டார். பல கோப்பைகளை வென்று சிறந்த கேப்டனாக உருவெடுத்தார். பின்னர் வந்த கோலி தோனியின் வேலைகளை தொடர்ந்த போதிலும் பல இடங்களில் ஆக்ரோஷமாக இந்திய அணியை வழிநடத்தினார்.
கோலியின் அணி எந்த போட்டியையும் இழக்க விரும்புவில்லை. ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் களம் கண்டு வருகிறது. விராட் கோலி பதவியேற்று சிறிது காலம்தான் ஆகியுள்ளது என்றாலும், அவரின் ஆக்ரோஷமான அணுகுமுறையும், அவரது அணி வீரர்களின் விடாமுயற்சியும் முன்னாள் இருந்த இந்திய அணிகளுக்கு ஈடு செய்யும் வகையில் உள்ளது.
அனைத்து கேப்டன்களுமே அந்தந்த காலகட்டங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர் என்பதே உண்மை. இந்த நிலையில் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய போது கங்குலி, தோனி என்ற வரிசையில் சேவாக் கூறியுள்ளார். சவுரவ் கங்குலி தான் நம்பர் 1 கேப்டன். தனது அணி வீரர்களிடமிருந்து 100% திறமையை வெளிக்கொண்டு வருவது மற்றும் அவர்களின் திறமையை அறிந்து செயல்படுபவரே சிறந்த தலைவர் என சேவாக் கூறியுள்ளார்.
ஒரு சிறந்த இந்திய அணியை கட்டமைக்க கங்குலி கேப்டனாக பெரிதும் உதவியுள்ளார். கங்குலி தலைமையில் இந்தியாவில் மட்டுமல்லாது; வெளிநாடுகளிலும் இந்திய அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது. பல கேப்டன்களை ஒப்பிடுகையில், தனிப்பட்ட பாணியில் கங்குலி மிகவும் சிறந்தவர் என்று சேவாக் கூறினார்.
கங்குலி மற்றும் தோனி ஆகியோரின் தலைமையில் இரண்டு உலகக் கோப்பை தொடரில் சேவாக் விளையாடியுள்ளார். தோனி தலைமையில் இறுதிப்போட்டியில் வென்ற அணியிலும், கங்குலி தலைமையில் இறுதிப்போட்டியில் விளையாடிய அணியிலும் இடம்பெற்றவர் சேவாக்.