![The all-rounder of the Chennai team returned to the country](http://image.nakkheeran.in/cdn/farfuture/8lOLSpNXfH490v1GyASPQqpkSCjMsB_JB-YnVAnl_rM/1684670806/sites/default/files/inline-images/03_60.jpg)
சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்பியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை அணியால் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அவரது இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் பாதியில் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துவார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ரஹானே முதல் போட்டியில் இருந்து அதிரடியாக ஆட சென்னை அணியின் நிர்வாகம் மற்றும் மக்களின் பார்வை ரஹானே பக்கம் திரும்பியது. இதனிடையே அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரஹானே ஃபார்ம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் 2 போட்டிகளில் மட்டும் களமிறக்கப்பட்டு எஞ்சிய போட்டிகளில் களமிறக்கப்படாமல் வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதால் அதற்கு தயாராவதற்காக பென் ஸ்டோக்ஸ் தாயகம் திரும்பியுள்ளார். அயர்லாந்து உடனான டெஸ்ட் போட்டி முடிந்ததும் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா உடன் ஆஸிஸ் போட்டியில் விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.