உலகமெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கவுள்ளது. ஸ்டார் நெட்வொர்க்கின் விருப்பப்படி மார்ச் 26 ஆம் தேதி ஐபிஎல் தொடரைத் தொடங்குவதா அல்லது தங்கள் திட்டப்படி 27 ஆம் தேதி தொடங்குவதா என பிசிசிஐ விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐபிஎல் தொடரின் 55 போட்டிகள் மும்பையில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் மைதானம் மற்றும் டி.ஓய் பாட்டீல் மைதானம் ஆகிய மூன்று மைதானங்களிலும் மொத்தமாக 55 லீக் போட்டிகள் நடக்கவுள்ளதாகவும், புனேவில் உள்ள எம்சிஏ சர்வதேச மைதானத்தில் மேலும் 15 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் கிரிக்பஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் வான்கடேவிலும், டி.ஓய் பாட்டீல் மைதானத்திலும் நான்கு போட்டிகளில் விளையாடவிருப்பதாகவும், , பிரபோர்ன் மைதானத்திலும் எம்சிஏ சர்வதேச மைதானத்திலும் தலா மூன்று போட்டிகளில் விளையாடவிருப்பதாகவும் கிரிக்பஸ் கூறியுள்ளது.
மேலும் ஐபிஎல் இறுதிப்போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ள கிரிக்பஸ், ப்ளேஆஃப்ஸ் போட்டிகளுக்கான இடங்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை எனவும், ஐபிஎல் தொடர்பான இறுதி முடிவுகள் நாளை நடைபெறவிருக்கும் ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் எனவும் கிரிக்பஸ் தெரிவித்துள்ளது.