ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சிட்னியில் தனிமைப்படுத்தல் முகாமில் உள்ள இந்திய வீரர்கள், தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த பின்னர் வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான மார்க் டெய்லர் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "விராட் கோலி உலக கிரிக்கெட்டில் மிகவும் வலிமையான வீரர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரராகவும், ராஜதந்திரியாகவும் நிலைநிறுத்திக்கொண்டார். தன்னுடைய பொறுப்பு என்ன என்பதை தெளிவாக உணர்ந்துள்ளார் என்று நினைக்கிறேன். அவர் கிரிக்கெட் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதை அவருடன் பேசிய சமயங்களில் கண்டேன். சம காலத்து வீரர்கள், முன்னாள் வீரர்கள் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதையும் பார்த்துள்ளேன்" எனக் கூறினார்.