Skip to main content

"அவரை சோர்வடையச் செய்வதே வெற்றிக்கான வழி..." இந்திய பந்துவீச்சாளர் குறித்து ஹேசில்வுட் பேச்சு!

Published on 19/11/2020 | Edited on 19/11/2020

 

josh hazlewood

 

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரையடுத்து, இருபது ஓவர் போட்டித் தொடரும், அதனையடுத்து டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.

 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனால், எதிர்வரவிருக்கும் தொடர் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளாரான ஹேசில்வுட் இந்தியாவிற்கு எதிரான தொடர் குறித்துப் பேசுகையில், "இந்திய அணி கடந்த முறை தொடரை கைப்பற்றிவிட்டது. அது எங்களை அதிகம் பாதித்தது. அந்தத் தொடர் மிகவும் நெருக்கடியான தொடராக அமைந்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. இம்முறை இஷாந்த் ஷர்மாவும் அணியில் இணைந்துவிட்டால் இந்திய அணி கூடுதல் வலிமை பெறும். கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு மாறியுள்ளது. அதை எதிர்கொள்ள எங்கள் வீரர்கள் தயாராக இருக்கவேண்டும்" எனக் கூறினார்.

 

மேலும், இந்திய வீரர் பும்ரா குறித்துப் பேசுகையில், "பும்ரா தனித்துவம் வாய்ந்த வீரர். நாள் முழுவதும் ஒரே மாதிரியான வேகத்தை தக்கவைக்கிறார். புதிய பந்து, பழைய பந்து என இரண்டிலும் அவரால் விக்கெட் வீழ்த்த முடியும். பும்ராவின் நிறைய ஓவர்களை எதிர்கொண்டு, அவரை சோர்வடைய வைக்க வேண்டும். இதுவே ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய வழிவகுக்கும்" எனக் கூறினார்.

 

 

Next Story

பும்ரா மீது அதிருப்தி; ஹர்திக் பாண்டியா குறித்து விளக்கம் கேட்கத் தயாராகும் பிசிசிஐ!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

hardhik pandya and jasprit bumrah

 

2021 ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலககோப்பை போட்டியில், கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி, அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி,ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

 

இந்தநிலையில் இந்த தோல்வியால் பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் முழு உடல் தகுதி இல்லாததால் ஐபிஎல்-லில் பந்து வீசாமல் இருந்த ஹர்திக் பாண்டியா, தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்படாமல் இந்திய உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்தும், இந்திய அணியில் அவர் தொடர்ந்து இடம்பெற்றது குறித்தும் தேர்வு குழுவிடமும், அணி நிர்வாகத்திடமும் பிசிசிஐ விளக்கம் கேட்கவுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா நீக்கப்படவுள்ளார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே பும்ரா மீதும் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு அணி வீரர்களுக்கு ஓய்வு தேவை என பும்ரா கூறியது பிசிசிஐக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர், "பயோ-பபிள் சோர்வைப் பொறுத்தவரை, ஐபிஎல்லில் விளையாடுமாறு வீரர்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை. விராட் அல்லது ஜஸ்பிரிட் உலகக் கோப்பை மிகவும் முக்கியமானது என்று நினைத்திருந்தால், அவர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகியிருக்கலாம். பிசிசிஐ அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது. குடும்பத்தினர் அவர்களுடன் இருக்கவும் அனுமதித்துள்ளது" என கூறியுள்ளார்.

 

 

Next Story

"ஐபிஎல்-க்கு பிறகு அணி சோர்வாக இருக்கிறது" - தோல்விக்கு பிறகு உண்மையை உடைத்த பும்ரா!

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

bumrah

 

2021ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டிகள், நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் படுதோல்வியடைந்து, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் கட்டத்தில் உள்ளது.

 

இந்தநிலையில், தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, இந்திய அணி சோர்வாக இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணி சோர்வாக இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த பும்ரா கூறியதாவது, "நிச்சயமாக. சில நேரங்களில் நமக்கு ஓய்வு தேவை. குடும்பத்தைப் பிரிந்து இருந்துவருகிறோம். ஆறுமாதங்களாக தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருக்கிறோம். இவை அனைத்தும் சில சமயங்களில் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் களத்தில் இருக்கும்போது, அதையெல்லாம் நாங்கள் நினைப்பதில்லை. கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதும், குடும்பத்தை நீண்ட நாட்கள் பிரிந்திருப்பதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 

பிசிசிஐயும் எங்களை சௌகரியமாக வைத்துக்கொள்ள தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தது. இது கடினமான நேரம். ஒரு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்களை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் ஏற்படும் சோர்வு, மன சோர்வு போன்றவை ஊடுருவுகிறது." இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.

 

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலிருந்து, இந்திய வீரர்கள் கரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.