இந்திய பந்துவீச்சாளர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தின் தொடக்கப்போட்டியாக, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கிறது. தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துள்ள இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித்தொடரில் மட்டுமே விராட்கோலி முழுமையாக விளையாட இருப்பதால், அவர் அணியை பலப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான தொடரை ஒளிபரப்பு செய்ய இருக்கிற சோனி நிறுவனம் நடத்திய இணையவழி பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேசுகையில், "பும்ரா உலகத்தரமான பௌலர். முகமது ஷமி சிறந்த வீரர். இருவரும் இணைந்து இந்திய அணிக்கு சிறந்த தொடக்க ஜோடியாக உள்ளனர். ஐபிஎல் மற்றும் சமீபத்திய தொடர்கள் மூலம் அவர்கள் விளையாட்டை எங்கள் வீரர்கள் பார்த்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிற்கு எதிராக 14 போட்டிகள் விளையாடியுள்ளோம். இரு அணிகளும் 7 போட்டிகளில் வென்றுள்ளோம். ஒவ்வொருவருக்கு எதிராகவும் சில போட்டிகளில் விளையாடியுள்ளோம். சுழற்பந்துவீச்சளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என அனைவர் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். எங்கள் வீரர்கள் கடினமாக உழைத்து வருகிறார்கள். இந்திய வீரர்கள் பந்துவீச்சை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருப்பார்கள்" எனக் கூறினார்.