16 ஆவது ஐபிஎல் சீசனின் 24 ஆவது போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 226 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கான்வே 83 ரன்களைக் குவித்தார். ஷிவம் துபே 52 ரன்களும் ரஹானே 37 ரன்களையும் குவித்தனர். சென்னை அணியில் நேற்று மட்டும் 17 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.
பின் களமிறங்கிய பெங்களூர் அணி அதிரடியாக ஆடி 12 ஓவர்களில் 140 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் டுப்ளசிஸ் வெளியேற ஆட்டம் சென்னை அணியின் பக்கம் திரும்பியது. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 8 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 76 ரன்களையும் டுப்ளசிஸ் 62 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக கான்வே தேர்வு செய்யப்பட்டார்.
ஷிவம் துபே ஆர்சிபி அணிக்கெதிராக கடந்த மூன்று ஆண்டுகளில் அபாரமாக ஆடியுள்ளார். 2021 ஆம் ஆண்டு 32 பந்துகளில் 46 ரன்களும், 2022 ஆம் ஆண்டு 46 பந்துகளில் 95 ரன்களும், 2023 ஆம் ஆண்டு (நேற்றைய போட்டி) 25 பந்துகளில் 52 ரன்களையும் குவித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 226 ரன்களைக் குவித்தது. ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்ய இந்த போட்டி அமைந்தது. முன்னதாக 2010 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 246 ரன்களைக் குவித்தது. 2008 ஆம் ஆண்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை இழந்து 240 ரன்களைக் குவித்தது.
நேற்றைய போட்டியில் இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்த 40 ஓவர்களில் இரு அணிகளும் சேர்ந்து 444 ரன்களைக் குவித்துள்ளது. இதில் இரு அணிகளும் அடித்த 33 சிக்ஸர்கள் அடக்கம். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி 5ல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 3 ஆவது இடத்திற்கு முன்னேறியது. பெங்களூர் அணி 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வென்று 7 இடத்தில் உள்ளது.
சென்னை மற்றும் பெங்களூரு அணி இதுவரை 31 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அதில் 20 முறை சென்னை அணியும் 10 முறை பெங்களூர் அணியும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி ஏப்ரல் 21 ஆம் தேதி ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. மறுபுறம் பெங்களூர் அணி ஏப்ரல் 20 ஆம் தேதி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.