முதுகு வலியைப் போல் கழுத்து வலியால் அவதிப்படுவோர் ஏராளம். கழுத்து வலி எதனால் ஏற்படுகின்றன; இவற்றுக்கு என்னதான் தீர்வு என்பதை நம் நடைமுறை வாழ்வோடு இணைத்து விளக்குகிறார் முதுகுத்தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மரியானோ புருனோ.
பெரும்பாலானோருக்கு முதுகு வலி என்பது அடி முதுகிலோ, கழுத்துப் பகுதியிலோ இருக்கும். குனிந்து வேலை பார்ப்பவர்களுக்கு கழுத்து வலி அதிகமாக இருக்கும். உலகம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருந்தாலும், இங்கு விவசாயம் தோன்றிய பிறகே கணக்கு வழக்குகளை ஊருக்கு ஒருவரோ இருவரோ எழுத ஆரம்பித்தார்கள். ஆனால் கடந்த 50 வருடங்களில் புத்தகங்கள் படிப்பதும், அலைபேசியைப் பயன்படுத்துவதும் அனைவரும் செய்யும் செயலாகி விட்டது.
உலகம் தோன்றி பெரும்பாலான ஆண்டுகள் நிமிர்ந்தே வேலைகளைச் செய்து வந்த மனிதன், பின்பு குனிந்து வேலை செய்யத் தொடங்கினான். பெரும்பாலான பாலூட்டிகள் மற்றும் மனிதனின் கழுத்தில் ஏழு எலும்புகள் உள்ளன. விலங்குகள் நிமிர்ந்தே தங்களுடைய வேலைகளைச் செய்யும்போது, மனிதன் மட்டும் குனிந்து வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. பல லட்சம் ஆண்டுகளாக நிமிர்ந்தே பழக்கப்படுத்தப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக திடீரென்று குனிந்து வேலை செய்ய வேண்டி வந்ததால் எலும்புகள், தசைகள் ஆகியவற்றுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதன் விளைவாகத் தேய்மானம் நிகழ்கிறது.
உதாரணமாக உங்கள் காரை எடுத்துக் கொள்ளுங்கள். நான்கு வீல்களின் அலைன்மெண்ட் சரியாக இருந்தால் சரியாக இயங்கும். ஏதோ ஒரு வீலில் அலைன்மெண்ட் மாறி இருந்தால் சிக்கல் ஏற்படும். அதைப் போலவே எந்த ஒரு உறுப்பையும், கருவியையும் அதை வழக்கமாகப் பயன்படுத்தும் முறையிலேயே பயன்படுத்தினால் தேய்மானம் குறைவாக இருக்கும். முறையை மாற்றினால் தேய்மானம் அதிகரிக்கும். தற்போது நாம் அதிகமாகப் படிக்கிறோம்; எழுதுகிறோம்; அலைபேசியைப் பார்க்கிறோம்; இதனால் கழுத்து எலும்பில் தேய்மானம் ஏற்படுகிறது.