இரத்த அழுத்தம் குறித்த புரிதல் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், கண் நீர் அழுத்தம் என்றால் என்னவென்று பலருக்கும் அது குறித்த புரிதல் இல்லை. அதைப் பற்றிய விளக்கம் அளியுங்கள் என்று பிரபல கண் மருத்துவர் கல்பனா சுரேஷ் அவர்களிடம் நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
கண்களுக்குள் ஒரு திரவம் இருக்கிறது. அதன் பெயர் அக்வஸ் ஹியூமர். அந்த திரவமானது கண்ணுக்குள் ஒரு சுற்று வந்து கண்ணிலிருந்து வெளியேறி விடும். அப்படி வெளியே போகும் இடம் தான் ஆங்கிள். அது எப்போதுமே திறந்த நிலையில் இருக்கும். சிலருக்கு குறுகலாக இருக்கும் அல்லது அடைப்பு ஏற்பட்டு இருக்கும். அப்போது அக்வஸ் ஹியூமர் திரவம் வெளியேறாமல் கண்ணிலேயே தேங்கி விடும். அப்படியானால் கண்ணுக்கு அழுத்தம் ஏற்படும். அது கண்ணில் உள்ள நரம்புகளைப் பாதுகாக்கும். நரம்புகள் பாதிக்கப்பட்டால் அந்த கண்ணில் பார்வை திறன் குறைபாடு வரும்.
இது நேரடியாகப் பார்ப்பவற்றை தெளிவாகக் காண்பிக்கும். பக்கவாட்டில் உள்ளவற்றை மங்கலாகக் காண்பிக்கும். நாட்கள் ஆக ஆக பக்கவாட்டில் தெளிவாகத் தெரியும் பிம்பத்தின் அளவு குறைந்து கொண்டே வந்து பார்வை ஒரு குறிப்பிட்ட சுருங்கிய கோணத்தில் குறுகலாக மட்டுமே தெரியும். இதன் பெயர் டனல் விஷன், டியூபிலர் விசன்.
இது பரம்பரையாக வரக்கூடிய கண் பிரச்சனையாகும். பெற்றோருக்கு இப்படியான பிரச்சனையிருந்தால் பிள்ளைகள் கண்டிப்பாகப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கண்ணின் விழித்திரை, கண்ணின் அழுத்தம் ஆகியவற்றை பரிசோதித்து பக்கப்பார்வை எவ்வாறு உள்ளது, கண் நீர் அழுத்த நோய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியும். ஸ்டிராய்டு சம்பந்தப்பட்ட மாத்திரைகள், ஸ்பிரே, லோசன் போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்வதால் கண் நீர் அழுத்தம் வர வாய்ப்பு உள்ளது.