உலகையே உயிர் அச்சத்திலும் நடுக்கத்திலும், பதற்றத்திலும் வைத்திருக்கிறது மனிதப் படுகொலைகளை நடத்தும் சராஸ்- கரோனா எனப்படும் கோவிட்-19. கண்ணுக்குப் புலப்படாத நீக்கமற நிறைந்திருக்கும் அந்த ஆட்கொல்லி வைரஸை நினைத்து உறக்கத்தையும் பறிகொடுத்துத் தவிக்கும் பொதுமக்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு யுகமாகக் கழிக்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காரணம் இந்தக் கொடிய வைரஸ் என்று இந்தப் பிரபஞ்சத்தைவிட்டு எப்போது அகலுமோ என்று விடை தெரியாததே.
இருப்பினும் தற்காத்துக் கொள்வதற்கு அரசும், மருத்துவ உலகமும், தனித்திரு, விலகியிரு, விழித்திரு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி மக்களைக் கடைபிடிக்க வைத்ததுடன் வெளியயே செல்லும் போது முகக்கவசம் எனும் மாஸ்க் அணிந்து கொண்டு செல்வது தற்காப்பு கவசம் என்றும் அறிவித்ததால் தற்போது வெகு ஜனங்கள் மாஸ்க் அணிந்தபடியே தேவையின் பொருட்டு வெளியே வருகின்றனர்.
ஆனாலும் மாஸ்க் தேவை அதிகரிப்பதால் அதன் விலையும் தாறுமாறாகப் போய்விட்டது. நகரத்தாருக்குச் சாத்தியமாகும் இந்த மாஸ்க், சாமான்ய மக்களான கிராமத்து மக்களுக்கு அது ஆகாயத்தில் பறக்கும் பொருளானதால், தங்களைத் தற்காத்துக் கொள்ள மாற்று வழியை மேற்கொண்டிருப்பது புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.
அந்த அதிசயம் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகேயுள்ள கு.சுப்பிரமணியபுரம் எனும் கிராமத்தில் தான் அரங்கேறியிருக்கிறது. அங்கேயுள்ள பனைத்தொழிலாளியான குணசேகரனும், அவர் மனைவி முருகலட்சுமியும் தான் அந்த ஏழைகளின் காப்பானைக் கண்டு பிடித்துள்ளனர். வல்லவனுக்கு கொரோனாவைத் துரத்தியடிக்க புல்லும் ஆயுதம் என்று உணர்த்தியிருக்கிறார்கள்.
உரமேறிய உடம்பு. காய்த்துப் போன நெஞ்சும் கைகளும். உடம்பு சட்டையைப் பார்த்து பல காலமாகும் போல. எந்நேரமும் காந்தியைப் போன்று உடலில் சட்டையே இல்லாமல் பனைத் தொழிலைச் செய்து வருபவர் குணசேகரன். உறுதுணையாக அவர் மனைவி.
தற்போது கோடைகாலம். பனைத் தொழில் ஆரம்பகட்டம். இந்தத் தொழிலைக் கொண்டு தான் தம்பதியரின் வண்டிச் சக்கரம் சுற்றுகிறது. இன்னும் நான்கு மாதங்கள் தான் பனைத் தொழிலுக்கு ஏற்ற காலம். இப்போதே பனை ஏறி பக்குவப்படுத்தி பாளையைச் சீவிவிட்டால்தான் பதநீர் இறக்கி அதைக் கொண்டு கருப்பட்டி தயாரிக்க முடியும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டால் அது காய்த்து தூர்ந்து விடும். பிறகு பிழைப்பில் கரையான் ஏறிவிடுமே. அதற்காகத்தான் பரபரத்தார் பனைத் தொழிலாளி குணசேகரன்.
இந்தத் தொழிலைச் செய்து முடிக்கப் பல மணிநேரம் ஆகலாம். உலகமே கரோனா பயத்திலிருக்க முக கவசத்திற்காக வேறு எங்கும் அலையவில்லை. ஈரம் தாங்கும் அந்தப் பணை ஓலையை முக கவசமாக வளைத்துப் பின்னி மாட்டிக்கொண்டு துணிச்சலோடு தம்பதியர் கருப்பட்டி காய்ச்ச ஆரம்பித்துவிட்டார்கள்.
எங்களுக்கெல்லாம் முகக்கவசம் பத்தி தெரியாது. அது இருக்குற எடமும் புரியாது. அதுக்கு வசதியுமில்ல. வேற வழி யோசிச்சப்ப, பனை ஓலையை பதநீர் குடிக்க மடக்குறாப்புல முகத்துக்கு ஏத்ததா வளைச்சிப் பின்னி மாட்டிக்கிட்டு வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டோம். ஒரு வாரமா யிப்படித்தேன் வேலை ஓடுது. ஆனா பாருங்க இயற்கைத் தயாரிப்பு. பனங்குறுத்து வாசனை இதமாயிருக்கும். எந்தக் கிருமியும் அண்டாது ஒட்டாது. சரியான பாதுகாப்பு. போட்டதயே மறுபடியும் போட வேண்டாம். தினமும் ஓலைய மடிச்சி கவசமாக்கிறலாம். சர்வ சாதாரணமாகச் சொன்னார் பனைத் தொழிலாளியான குணசேகரன்.
ஒரு சாமான்யன் கற்றுத்தந்த பாடம் இது.