உடலுக்கு நல்ல ஆற்றலையும், சத்துக்களையும் வழங்குவதில் கீரைகள் மிக முக்கிய இடம் வகிக்கிறது. முருங்கை கீரை, அவுத்தி கீரை, பொன்னாங்கன்னி கீரை, பாலை கீரை என அந்த வரிசையில் மிக முக்கிய இடத்தினை பெற்றுள்ள கீரை புளிச்சை. இந்தக் கீரை ஆண்டி ஆகிஸிடன் செயல்பட்டு இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. புளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால் சரும பாதுகாப்பிற்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பை நீக்கும் ஆற்றல் புளிச்ச கீரைக்கு அதிகம் உள்ளது. உடலில் பித்தம் அதிகமாகி, நாவில் சுவை பிரச்சனை ஏற்படும்போது தொடர்ந்து புளிச்ச கீரை சாப்பிட்டுவர பித்தம் விரைவாக குறையும்.
உடல் உஷ்ணத்தைப் போக்குவதற்கும், காச நோயைக் குணப்படுத்துவதற்கும் புளிச்ச கீரை மிகச் சிறந்த உணவுப் பொருளாக இருக்கிறது. வாதநோய் வந்தவர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் புளிச்சை கீரை சாப்பிட்டு வர வாதப் பிரச்சனை நீங்கும். மஞ்சள் காமாலை நோய்க்கு ஆளானவர்கள் புளிச்ச கீரையைச் சிறிதளவு எடுத்துக்கொண்டு நன்கு அரைத்து சாறு பிழிந்து மோருடன் கலக்கி தொடர்ந்து ஒருவாரம் பருகி வர அதன் பாதிப்புகள் படிப்படியாகக் குறையும். போலிக் அமிலம் இந்தக் கீரையில் அதிகம் இருப்பதால் உடல் வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக இருக்கிறது. உடல் வெப்பத்தைக் குறைத்து சமப்படுத்துவதில் புளிச்ச கீரைக்கு நிகர் வேறு எதுவுமில்லை.