Skip to main content

வறட்சியான சருமம் உள்ளவரா ….

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

அழகு என்றாலே அதில் ஒரு ஈர்ப்பு இருக்க தான் செய்கிறது அழகு என்பது மிகவும் அழகான விஷயம். ஒவ்வொருவரும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதை மிக முக்கியமான வேலை என்று கருதக்கூடிய காலமிது. ஏனெனில் மாறிவரும் நாகரிகச் சூழல், அழகைப் பற்றிய விரிவான ஆய்வு, மற்றும் அதன் தேவைக்காக cosmetology  என்ற தனித்துறையே செயல்பட்டுவருகிறது. மூலைமுடுக்கெல்லாம் காணப்படும் அழகு நிலையங்கள், தனிமனித அழகைப் பேண முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன.

 

dry skin image

 

மேலைநாடுகளில் அழகினைப் பேண, இராசயனப்பூச்சுக்களை மிகவும் அதிகமாக உபயோகிக்கின்றனர். இந்தியா போன்ற கீழைநாடுகளில் மூலிகைகள் மற்றும் இயற்கை உணவுகள் மூலம் அழகைப் பேணும் முறை பரவலாக உள்ளது. இராசயன அழகுப் பூச்சுகள் பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.  ஆனால் மூலிகைகள் தரும் அழகு நிரந்தரமானது. பக்கவிளைவுகளற்றது.  பொதுவாக உடலின் தோலை மூன்று விதமாகப் பிரிக்கலாம்  வறட்சியான தோல் (dry skin ), எண்ணெய்ப்பிசுப்புள்ளதோல் (oil skin ),சாதாரண தோல்  (normal skin ). வறட்சியான தோல் அமைப்பைக் கொண்டவர்களின் முகம் கறுத்து களையிழந்து காணப்படும்.  இவர்களுக்கு வழவழப்புத் தன்மையுள்ள சில மூலிகைகளை, முகப்பூச்சு செய்வதன் மூலம் குறைகளை நீக்கலாம். 

பின்வரும் குறிப்புகள் வறட்சியான தோல் அமைப்பைப் கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 1.பிஞ்சு வெண்டைக்காய், கேரட் இரண்டையும் சமமாய் எடுத்து, தேங்காய்ப் பால்விட்டு அரைத்து, முகப்பூச்சு செய்ய, முக வறட்சி நீங்கும்.  இதேபோல் உடல் முழுமைக்கும் பூசிக் குளிக்க, உடல் வறட்சி நீங்கி மேனி அழகாகும். 2.அகத்திக்கீரையைத் தேங்காய்ப்பால் விட்டரைத்து, முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க, முகம் வசீகரம் ஆகும். கண் கருவளையங்கள் நீங்கும். தோல் சார்ந்த படை, அரிப்பு போன்ற வியாதிகள் மறையும். 3) செம்பருத்தியிலை, பச்சைப்பயிறு சமமாய் எடுத்து விழுதாய் அரைத்து, முகப்பூச்சு செய்ய முகம் ஜொலிக்கும். 4) துத்தி இலையைப் பசும்பால் விட்டரைத்து முகப்பூச்சு செய்ய வறண்ட தோல் மாறும். 5) சீமைஅகத்தியிலையைப் பச்சைப்பயிறு சேர்த்து விழுதாய் அரைத்துப் பூச முகம் பளபளக்கும். வறட்சியான தோல் அமைப்பைக் கொண்டவர்கள் புளிப்புச்சுவையுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, எலுமிச்சை, தக்காளி, புளி இவற்றை உணவில் குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரி இரண்டு டம்ளர் பால் அருந்துதல் வேண்டும். பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற பருப்பினங்களை உணவில் மிதமான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரியான உணவு வகைகளை  வறட்சியான சருமம் உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால் உடல் அழகை பெற முடியும் .