பல கட்டங்கள் ஒன்றிணைந்த பல்வேறு வடிவங்கள், பல பல வண்ணங்களில் மேலிருந்து விழ, அதை கட்டடத்தைப் போல வடிவமைக்க வேண்டும். முறையாக அடுக்காவிட்டால் மேலே இருக்கும் கோட்டை கட்டடம் தொட்டுவிடும். அப்படி நடந்துவிட்டால், மேலிருந்து விழும் வடிவங்களுக்கு கீழே விழ முடியாத நிலை ஏற்படும். இப்படியாக அந்த ஆட்டம் முடிவுபெறும். இதற்குப் பெயர் டெட்ரிஸ்.
கையடக்க வீடியோ கேம்களில் தொடங்கி, தொலைக்காட்சிகள், செல்போன்கள் என இருக்கும் பலருக்கும் பரிட்சயமான இந்த வீடியோ கேம், வயது வரம்பின்றி யார் வேண்டுமானாலும் விளையாடும் அளவுக்கு எளிமையானது. வெறும் பொழுதுபோக்கு அம்சமாகவே கடந்துபோகும் இதுபோன்ற கேம்களின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்ற தகவலை முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள்.
கலிஃபோர்னியாவின் ரிவர்சைட் பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பாக ஆய்வொன்றை நடத்தினர். அதில், மருத்துவப் பரிசோதனைக்கான முடிவுக்காக காத்திருப்பவர், நேர்காணல் முடிந்துவிட்டு காத்திருப்பவர் போன்றவர்களுக்கு டெட்ரிஸ் கேம் விளையாடக் கொடுத்துள்ளனர். அவர்கள் அதை விளையாடத் தொடங்கிய சில நிமிடங்களில் எல்லா பிரச்சனைகளையும் மறந்து உற்சாக மனநிலைக்குத் திரும்பியுள்ளனர். இதன்மூலம், நேரத்தையும் எளிமையாகக் கடத்த முடிந்திருக்கிறது. அதாவது, தேவையான ரிசல்ட்டை போதுமான அளவுக்கு அடைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த விளையாட்டு மட்டுமின்றி உடல்சார்ந்த பல விளையாட்டுகளின் மூலம் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம் என்றாலும், அந்த நேரத்தில் உடலை வருத்திக்கொள்ள யாரும் விரும்ப மாட்டார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். ‘ஏம்பா.. எனக்கிருக்க டென்ஷன்ல இதை வேற பண்ணனுமா’ என்று கேட்காதீர்கள். வாய்ப்பிருந்தால் ஒருமுறை முயன்று பாருங்கள்.