ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீர் சிக்கலை சரி செய்துகொள்வதற்கு சில டிப்ஸ் வழங்குகிறார் டாக்டர் அருணாச்சலம்.
நோய் எதுவும் இல்லாத சாதாரண ஒரு மனிதருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை வந்தால், அதிகமாகத் தண்ணீர் குடிப்பது அதற்கான காரணமாக இருக்கலாம். பகல் நேரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிப்பதே போதுமானது. அதோடு இன்னும் 500 மில்லி லிட்டர் சேர்த்துக்கொள்ளலாம். அதிகமாக வியர்வை வெளியேறும் வகையில் வேலை செய்பவர்கள் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். கோடை காலத்தில் அனைவருமே அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை ஏற்படும். எல்லோருக்குமே தினமும் சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது சரியாக இருக்கும்.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த இரண்டு லிட்டர் தண்ணீரை நாம் குடிக்க வேண்டும். குளிர்பானங்கள் குடிக்கும்போது 20 நிமிடத்திற்குள் தேவையற்ற நீர் சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு விடும். இரவு நேரத்தில் அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீர் வெளியேற்றுவதற்காக உங்களுடைய தூக்கம் தடைபடாது. உணவுக்கு ஏற்றவாறு சிறுநீரின் துர்நாற்றம் இருக்கும்.
இரவு நேரத்தில் நீர் வெளியேற்றும் பாதையில் எரிச்சல் ஏற்பட்டால் பகலில் நீங்கள் ஒழுங்காகத் தண்ணீர் குடிக்கவில்லை என்று அர்த்தம். சிறுநீர்ப்பாதை எப்போதும் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. உடலுறவுக்குப் பின் ஆண், பெண் இருவரும் உறுப்புகளை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பலருடன் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கும் இந்தத் தொற்று ஏற்படும். சரியான அளவில் தண்ணீர் குடித்து, மருத்துவர் பரிந்துரையின் பேரில் சரியான மருந்துகளை எடுத்துக்கொண்டால் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.