Skip to main content

டெங்கு காய்ச்சல் ஏழுநாள் தான் இருக்கும்; ஆனால் இப்படி ஆகிடும் - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

 DrRajendran | Dengue fever |

 

டெங்கு காய்ச்சல் பற்றி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விரிவாக விளக்குகிறார்

 

டெங்கு காய்ச்சலுக்கு காரணமானவை கொசு மற்றும் வைரஸ். இதில் பாதிக்கப்பட்டவருக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். முதல் இரண்டு நாட்கள் காய்ச்சல் அதிகமாக இருக்கும். அதன் பிறகு காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும். ரத்தம் இறுகிப் போவதால், ரத்த அழுத்தம் குறையும், பல்ஸ் ரேட் அதிகமாகும். இதனால் மற்ற உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க ஆரம்பிக்கும். இதனால் ரத்தக் கசிவு நிச்சயம் இருக்கும். நோயாளியை கவனமாக நாம் கவனித்துக்கொண்டால் விரைவாக குணமாக வாய்ப்பு இருக்கிறது. 

 

இந்த நோயை விரைவில் கண்டறிவது மிகவும் முக்கியமானது. சாதாரண காய்ச்சலாக இருந்தாலும், பரிசோதனை செய்துகொள்வது முக்கியம். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால், உடனடியாக சந்தேகப்பட்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம் நோயாளிக்கு வேறு ஏதேனும் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதையும் நாங்கள் கண்டறிவோம். இதன் மூலம் மற்ற நோய்கள் இருந்தால் அவையும் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்படும். இதனால் மற்ற நோய்களும் களையப்படும். 

 

அதிகமான பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலின் உறுப்புகள் பாதிக்கப்படுவதை முடிந்தவரை நாம் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் ஏழு நாட்கள் வரை நன்றாக பாதுகாக்கப்பட்டால், அதன் பிறகு அவருக்கான பிரச்சனை என்பது குறைவாகவே இருக்கும். டெங்கு நோயை ஏழு நாள் காய்ச்சல் என்று கூட சொல்வார்கள். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் டெங்கு நோய் ஏற்பட்டால் அதிகமான உதிரப்போக்கு ஏற்படும். இதை நாம் கவனமாக அணுக வேண்டும். 

 

சொத்தைப் பற்களில் இருந்தும் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சரியான பரிசோதனை மேற்கொண்டு, நன்றாக தண்ணீர் அருந்தி, சரியான மருந்துகளை நாம் எடுத்து வந்தால் நிச்சயம் டெங்கு நோயை நம்மால் குணப்படுத்த முடியும். சரியான சிகிச்சையின் மூலம், பாதிப்புக்கு உள்ளான நோயாளி மீண்டும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.