சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று, உலகமெல்லாம் பரவி இந்தியாவையும் பதம்பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் தொற்று நாம் நினைத்ததை விடவும் அதிவேகமாக இருப்பதால், 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவித்திருக்கிறது, இந்திய அரசு. கரோனா வைரஸ் உள்ளூர் வரை வந்திருந்தாலும், நம்மிடம் வருவதற்கு முன் காத்துக் கொள்வது மிக அவசியம். வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் இந்த நாட்களில் தொடர்ந்து உடலை வலுவாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்வது நம் கடமை. அதற்கான சில வழிமுறைகளை ஊட்டச்சத்து ஆலோசகர் மினாஜ் சரானியா கூறியதாவது;
வழிபாடும் தியானமும்
கடவுளையோ, இயற்கையையோ மனதிற்கு நிறைவாக தொடர்ந்து வழிபடுவதும், சுற்றத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டு தினமும் தியானம் செய்வதும் நம்மை அமைதியாகவும், மனதளவில் வலிமையாகவும் இருக்க உதவுகிறது. இதனால், நுரையீரல் தூய்மை அடைந்து, திடமாக இருக்கலாம்.
சத்தான நீராகாரங்கள்
இஞ்சி, எலுமிச்சை, துளசி, புதினா ஆகியவற்றை நீரில் கலந்து தொடர்ந்து பருகுவதால், உடல் நீர்ச்சத்து பெற்று ஆரோக்கியமாக இருக்கும். அதேநேரம், கொய்யா, வாழை, குளிர்ந்த பால், தயிர், மோர், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், குளிரூட்டிய உணவுகள் போன்ற எளிதில் சளித்தொல்லையை ஏற்படுத்தக்கூடிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
நன்கு சமைத்த உணவுகள்
தற்சமயம் உணவு டெலிவரி போன்ற வசதிகள் இல்லாத நிலையில், வீட்டு உணவே நமக்கு பிரதானம். ஆனால், சமைப்பதற்கு சளைத்துவிட்டு பச்சைக் காய்கறிகளை உட்கொள்வது இந்த நேரத்தில் ஆரோக்கியமாக இருக்காது. நீண்டதூரம் பயணித்து வருவதாலும், குளிர்பதனத்தில் இருப்பதாலும் இயல்பாகவே அவை அசுத்தம் நிறைந்ததாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே, வீட்டில் நன்கு சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். நன்கு சமைப்பதால், நச்சுக் கிருமிகளின் தொல்லையும் இருக்காது.
கூடுதல் அக்கறை
முழுக்க முழுக்க வீட்டிலேயே இருப்பதால், நொறுக்குத் தீனிகளின் மீது கவனம் திரும்பலாம். ஆனால், நமக்குக் கிடைத்திருக்கும் இந்த நேரம் மிகமுக்கியமானது. அதனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். உலகிலேயே இந்தியாவில் கிடைக்கும் துளசி, மஞ்சள், மிளகு, இஞ்சி, அமுக்கிரா போன்ற மூலிகைப் பொருட்கள் அதிக மருத்துவ குணம் வாய்ந்தவை. அவற்றை உணவிலும், நீரில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், மாதுளை சாறு, வெல்லம் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
அரசு காட்டும் கெடுபிடியால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இறைச்சி மூலம் கிடைக்கக்கூடிய புரதம் கிடைக்காமல் போகலாம். அதற்கு பதிலாக, தினந்தோறும் பருப்பு வகைகளை 25 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். முடியாதவர்கள் வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் வேர்கடலையை எடுத்துக் கொள்ளலாம்.
வாய் சுத்தம்
ஏற்கனவே அறிவுறுத்தப் பட்டிருப்பதைப் போல, வாயையும் கைகளையும் தொடர்ந்து சுத்தம் செய்யவேண்டும். உப்பு கலந்த நீரை தினமும் இரண்டு வேளை கொப்பளித்துத் துப்புவது தொண்டையில் ஏற்படும் தொற்றிலிருந்து விடுதலை தருகிறது. சுடுநீரில் ஆவி பிடிப்பதன் மூலம் நுரையீரலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம். தினந்தோறும் வெந்நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து பருகுவதன் மூலம், உடலுக்குத் தேவையான காரத்தன்மை சீராகிறது.
உடல் தூய்மை
வீட்டில்தானே இருக்கிறோம் என்று அசட்டையாக இருக்காமல், உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வதால், வீட்டில் இருப்பவர்களுக்கும் நாம் நல்லது செய்கிறோம். அதேபோல், உறங்கும்போது உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது வேசலினை தேய்த்துக் கொள்வதால், தொடுதலில் ஏற்படும் தீங்குகள் குறையும்.
விடுமுறை கிடைத்துவிட்டது என்பதற்காக நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் என்று இரவெல்லாம் தூங்காமல் இருந்து உடலைக் கெடுக்காதீர்கள். பொழுதுபோக்கு ஒருபுறம் என்றாலும் உறக்கம் முக்கியம். நல்ல தூக்கம் மட்டுமே போதுமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தைரியமாக இருங்கள். வீட்டிலேயே இருங்கள்.