சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்திகளில் கூறப்படும் கருத்துக்களும், படங்களும் ஒன்றுக்கொன்று பொருந்துகின்றனவா? என்பதைப் பற்றிய புதிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அவற்றில் பெரும்பாலும் அந்தக் கருத்துக்களும், அவற்றின் படங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்துவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து ‘ஜர்னல் ஆஃப் ஹெல்த் கம்யூனிகேஷன்’ இல் இடம்பெற்ற இந்த ஆய்வில், சமூக வலைதளங்களில் வெளிவரும் போஸ்டுகளில் பதிவிடப்படும் புகைப்படங்களுக்கும் அது தொடர்பான செய்திகளுக்கும் உள்ள ஒற்றுமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும், இந்தப் புகைப்படங்களுக்கும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது கண்டறியப்பட்டது. மேலும், இவை ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
உதாரணமாக, குழந்தைகளுக்கான பாதுகாப்பான சைக்கிள் ஓட்டும் முறை பற்றிய செய்தியில், தலையில் அடிபடுவதைத் தடுக்க 'ஹெல்மெட்' உபயோகப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தச் செய்தியில் உள்ள புகைப்படத்தில் 'ஹெல்மெட்' அணியாத குழந்தையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
மற்றொரு 'பம்பர் ஃப்ரீ கிரிப்களை' (bumper-free crib) ஆதரிக்கும் செய்தியானது, பம்பர் உடன் கூடிய குழந்தைகளுக்கான புகைப்படத்தைக் கொண்டிருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறாகப் புகைப்படங்களும் அதற்கான செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாது உபயோகப்படுத்தப்படுவது முரண்பாடுகளை மட்டுமல்ல, பல்வேறு சமயங்களில் தவறான புரிதல்களையும் உருவாக்குவதால் பெரும் ஆபத்தையும் விளைவிக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இந்த ஆய்வில், புகைப்படங்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாத நிலையிலும் இவை சரியான கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிறதா? என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. 150 பெற்றோர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மூன்று பொருத்தமான செய்திகளும், மூன்று பொருத்தமில்லாத செய்திகளும் இடம் பெற்றிருந்தன.
இந்த இரண்டு பதிவுகளை ஒப்பிடும்போது, அவர்கள் பொருந்திய புகைப்படத்தினை கண்டறிய 3.3 வினாடிகள் எடுத்துக்கொண்டனர். அதேசமயம், பொருந்தாத புகைப்படத்திற்கு 5.3 வினாடிகள் செலவிட்டனர்.
மேற்கூறியவற்றில், இந்தப் பொருத்தமான செய்திகள் வாசிப்பாளர்களிடம் அதிக தாக்குதலையும், அதிக புரிதலையும் உருவாக்குகின்றன. மேலும், பொருத்தமான செய்திகள் புரிந்துகொள்வதற்கும், நினைவு கூறுவதற்கும் உதவுகிறது.
70% அதிகமான மக்கள் சமூக வலைதளங்களை உபயோகப்படுத்துவதால் பாதுகாப்பு முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சமூக வலைதளம் பெரும்பங்கு வகிக்கிறது.
இதுபற்றி, லாரா மெக்கென்சி (Lara McKenzie) என்பவரின் ஆராய்ச்சியின் படி, பொதுவாக, குறிப்பிட்ட செய்திகளை வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தைப் புகைப்படங்கள் தூண்டுகின்றன. ஆகையால், புகைப்படங்களும் அது தொடர்பான செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருப்பது இன்றியமையாததாகும் என்கிறார்.
எனவே, உடல் நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை அதிக கவனத்துடன் வெளியிடுவது காலத்தின் கட்டாயம்!