'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே. நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இரண்டு வாரங்களுக்கு முன்பு உலகத்தில் உள்ள சில நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதன் புள்ளிவிவரம் இரண்டு வாரத்திற்கு முன் வெளி வந்தது. அந்த புள்ளி விவரத்தின்படி, நாம் வாழும் இந்த பூலோகத்தில் நான்கு வினாடிகளுக்கு ஒருவன் பட்டினியால் உயிரிழக்கின்றான். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 21,600 பேர் உணவின்றி பட்டினியால் இறக்கும் நிலையில் இருக்கிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு உலகத் தலைவர்கள் அனைவரும், உணவுப் பாதுகாப்பு பற்றி ஒரு பெரிய மாநாட்டை நடத்தினர். அப்போது, இனி இந்த உலகத்தில் பட்டினியால் எவரும் உயிரிழக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனைத்து தலைவர்களும் அதில் கையெழுத்திட்டனர். ஆனால் அதற்கு நேர் மாறாக, இன்று நடந்து கொண்டிருக்கிறது. உணவின்றி பட்டினியால் உயிரிழக்கும் 45 நாடுகளுக்கு மேல் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். அந்த நாடுகளின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை.
1882- ஆம் ஆண்டு மகாகவி என்று முடிசூடிய ஒரு தமிழ்க் கவிஞன் பிறந்தான். அதுதான் மகாகவி சுப்பிரமணியன் பாரதியார். 1921- ஆம் ஆண்டு செப்டம்பர் 11- ஆம் தேதி அன்று உயிர் நீத்தார். அவர் எப்படி இறந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? தன் வாழ்நாளில் பசி என்னும் கொடுமையில் பாதிக்கப்பட்டு பசியை அனுபவித்தார். அவர் உயிரில் இருந்து வெளி வந்த வார்த்தைகள் தெரியுமா? 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால், ஜகத்தினை அழித்திடுவோம்' என்றார்.
மகாகவி கடைசி காலத்தில் வாழ்ந்த இடம் சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ளது. அதை அவரது நினைவில்லமாக பத்திரமாக வைத்திருக்கிறார்கள். அந்த இல்லத்தில் இருந்து 100 அடி தூரத்தில் பார்த்தசாரதி கோயிலின் நுழைவு வாயில் இருக்கிறது. தினமும் மாலை அங்கே சென்று அந்தக் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டு தனது பசியைப் போக்கிக் கொள்வார். அவ்வாறு அங்கே ஒருநாள் சென்றபோது, பிரசாதம் வழங்கப்படவில்லை. கோயிலின் யானைக்கு அங்கு விஷேசம் நடக்கிறது. அப்போது யானைக்கு பழங்கள், தேங்காய்களை பக்தர்கள் வழங்கியுள்ளனர்.
யானையானது பக்தர்கள் கொடுக்கும் வாழைப்பழம் மற்றும் தேங்காய்களை சாப்பிட்டுவிட்டு, மீதத்தை தனது காலில் வைத்திருந்தது. அருகில் சென்ற மகாகவி ஒரு தேங்காய் மூடியை அந்த யானையிடமிருந்து எடுத்தார். கோபம் கொண்ட யானை அவரை துதிக்கையால் தள்ளி மிதித்துவிட்டது. அங்கிருந்த பக்தர்கள் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் மகாகவி பாரதியார்.அதைவிட துயரம் என்னவென்றால், அந்த மகாகவியின் பூத உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றபோது, அதன் பின்னால் சென்றவர்கள் வெறும் ஏழு பேர் மட்டுமே" இவ்வாறு மருத்துவர் கூறினார்.