'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் சி.கே.நந்தகோபாலன் சிறப்பு நேர்காணல் அளித்தார். அதில், உணவு சாப்பிடுவது, வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாகப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "வாழை இலையில் போரான் இருக்கிறது. நமது உடலுக்குத் தேவையான செலினியம், காப்பர், அயர்ன் போன்றவை வாழை இலையில் இருக்கிறது. ஒரு வாழை இலையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் நூறு வீடியோவை எடுக்க வேண்டும். அதில் அவ்வளவு அறிவியல் உள்ளது. நாம் எல்லாத்தையும் வேணாம் என்று எட்டி உதைத்துவிட்டோம். நமது பாரம்பரியத்தை இழந்துவிட்டோம். நீ பிறந்து வளர்ந்த உன் நிலப்பகுதியையும், உன் சமுதாயத்தையும், மதிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நம்முடைய விஞ்ஞானத்தில் ஒரு துளி எடுத்தால், இந்த உலகத்தை ஆள முடியும். அகில உலகமும் உன்னிடம் மண்டியிட்டு இருக்கும். 'எந்த வளம் இல்லை இந்த திருநாட்டில்' என்று கவிதையை, பாட்டை மிக அழகாக எழுதுகிறீர்கள். ஆனால் எந்த வளத்தையும் நீங்கள் பார்க்கவில்லை. நமது உடல் ஆரோக்கியம் அனைத்தும் சமையல் கலையில்தான் இருக்கிறது. ஒரு உணவுப் பொருட்களை எப்படி பதப்படுத்தி வைக்க வேண்டும், எந்த காலத்தில் எந்த உணவைச் சமைக்க வேண்டும், எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பன போன்றவை சமையல் கலையில்தான் இருக்கிறது.
சரியான நேரத்தில் உணவை எடுக்க வேண்டும். காலை உணவு 08.30 மணிக்கு எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், அப்படியே சாப்பிட வேண்டும், மதிய உணவு 01.00 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால் அப்படியே அதை தொடர வேண்டும். இரவில் 07.00 மணிக்கெல்லாம் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் மூன்று மணி நேரம் இடைவெளி கொடுக்க வேண்டும். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். பால், அரிசி, மாவு போன்றவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தலாம். சமைத்த உணவை அதில் வைக்க வேண்டாம்.
சமையல் கலை என்பது மிகப்பெரிய கலை. இரவு 12.00 மணி முதல் 02.00 மணி வரை சாப்பிடவே கூடாது. அதுபோல், மதியம் 12.00 மணி முதல் 02.00 மணி வரை சாப்பிடக்கூடாது. எல்லாமே சமையல் கலை. உங்கள் நேரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சமையல் கலை என்பது உணவை எப்படி சமைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. உணவை எப்பொழுது சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும், ஏன் சாப்பிடக் கூடாது உள்ளிட்டவை அடங்கியது. இது படிக்க வேண்டும் என்றால் போய் கொண்டே இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட வகை மாங்காவை மட்டும் தேர்ந்தெடுத்து, அதை சிறிது சிறிதாக நறுக்குவார்கள். பின்னர், ஐந்து லிட்டர் தண்ணீரில் இரண்டு கிலோ அல்லது மூன்று கிலோ ராக் சால்ட்டைப் போட்டு, நறுக்கி வைக்கப்பட்ட மாங்காவைக் கொட்டிவிடுவார்கள். மூன்று நாட்களுக்கு ஊறல் போடுவார்கள். நான்காவது நாள் பனை ஓலையில் மாங்காவை கொட்டி காய வைப்பார்கள். ஓரளவுக்கு மாங்காய் பதமானதுடன், அதை எடுத்து பானையில் போட்டு மூடி விடுவார்கள். மூன்று வருடங்கள் ஆனாலும், அது ஒன்றும் ஆகாது. அந்த ஊறுகாய் கெட்டுப் போகவே போகாது. ஊறலில் நிறைய வகை இருக்கிறது. அதில், பொறித்தல், பொரியல், வறுத்தல், வருவல், கடையல், மசியல், வடகம், ஊறல், ஆவீடல், அவித்தல் ஆகியவை அடங்கும். ஆரோக்கியம் தான் முக்கியம்" எனக் கூறியுள்ளார்.