Skip to main content

பள்ளிக்கூடம் மழைக்காகவும் ஒதுங்கியது கிடையாது ஏன்?

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

அனுபவம் என்பதற்கும் கல்வியை விடவும் மிக உயர்ந்தது. அதற்கு சக்தி அதிகம்.  கொலைகாரனுக்கும் அனுபவம் இருக்கும். முற்றும் துறந்த முனிவருக்கும் அனுபவம் இருக்கும்.இரண்டுமே அனுபவங்கள்தான் என்றாலும் அவற்றுக்கு இடையேயான வித்தியாசம் மிக அதிகம். வயதில் மூத்த பெரியவர்கள் சில நேரம் மனம் விட்டுப் பேசுவார்கள். நாமும் கேட்டுக் கொண்டிருப்போம்.  அதே நேரத்தில் பெரியவரைப் போன்று ஏதாவது சாதிக்க நினைக்கும்போது, ‘உனக்கு அனுபவம் போதாது. அதனால் உன்னால் இதைச் செய்ய முடியாது’ என்று அறிவுரை வழங்குவார்கள். அதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அந்த அறிவுரைக்குள் வாழ்க்கைத் தத்துவம் ஆயிரமாயிரம் புதைந்து கிடப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.நாம் பெரியவர்களின் அனுபவங்களைக் கேட்கும்போது, பணிவுடன் கேட்டுப் பெற வேண்டும். அதில் ஈகோ பார்ப்பது தவறு.ஆனால் அனுபவத்தைக் கூறுவோரும் பணிவுடன் சொல்ல வேண்டும். அனுபவசாலி என்ற கர்வத்துடன் செயல்பட்டால் அவரது அனுபவத்திற்கு அங்கே மதிப்பு இல்லாமல் போய்விடும்.
 

horse riding

ஒரு மனிதனை முழுமையடையச் செய்வது அவன் பெற்றுக் கொள்ளும் அனுபவங்களாகவே இருக்கும். ஆனால் அத்தகைய அனுபவம் நல்லவையாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை அது கெட்டவையாக இருந்தால் மறந்துவிட வேண்டும்.அனுபவத்திற்கு வயது மட்டுமே தேவை என்று கூறமுடியாது. சிறிய வயதாக இருந்தாலும் அவர்களுக்கும் ஏதோ ஒரு துறையில் அனுபவம் இருக்கும். படிக்காத பாமரருக்கும் நிச்சயமாக ஏதோ ஒரு வகையான அனுபவம் இருக்கும்.எனவே அனுபவத்திற்கு வயது வித்தியாசம் கிடையாது. நிற வேறுபாடு கிடையாது. கல்வி என்னும் இலக்கு கிடையாது. ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத் தாழ்வு கிடையாது.கதாகாலட்சேபம் செய்வதில் புகழ்பெற்ற துறவி ஒருவர் இருந்தார். பிரசங்கம் செய்வதற்காக பல ஊர்களிலும் அவரை அழைப்பது வழக்கம்.இப்படித்தான் ஒரு ஊரில் கதாகாலட்சேபம் செய்வதற்காக அவரை அழைத்தனர். அது சற்று பெரிய ஊர் என்பதால் கூட்டம் நிறைய வரும் என்ற நம்பிக்கையை விழா அமைப்பாளர்கள் அவரிடம் கூறினர்.துறவிக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பிட்ட நாளன்று அவரை அழைத்துச் செல்ல ஒரு குதிரை வண்டி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த வண்டியில் அவரும் ஏறி கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றார்.அப்போது திடீரென்று பயங்கர காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கவே இவரது பேச்சைக் கேட்க யாருமே வரவில்லை. விழா அமைப்பாளர்கள் மட்டும் இவருடன் மேடையில் இருந்தனர். கீழே மைதானத்தில் இவரை மீண்டும் அழைத்துச் செல்வதற்காகக் குதிரை வண்டிக்காரன் மட்டும் இருந்தான்.துறவிக்கு ஏமாற்றமாக இருந்தது. குதிரை வண்டிக்காரன் ஒருவனுக்காக கதாகாலட்சேபம் நடத்த அவருக்கு மனமில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்.இவரது தயக்கத்தை நன்றாகப் புரிந்து கொண்ட குதிரை வண்டிக்காரன், ‘‘சுவாமி, நான் முட்டாள்தான். பள்ளிக்கூடம் பக்கம் மழைக்காகவும் ஒதுங்கியது கிடையாது. ஆனால் நான் முப்பது குதிரைகளை வளர்க்கிறேன். அவைகளுக்கு புல் வைக்கப் போகும் போது அங்கே எல்லாக் குதிரையும் வெளியே போய், ஒரேயரு குதிரை மட்டும்தான் நிற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு குதிரைக்கும் புல்லை வைத்துவிட்டுத்தான் திரும்புவேன். அதைப் பட்டினி போட மாட்டேன்’’ என்றான்.

தனது தயக்கத்தைத் தெரிந்து கொண்டுதான் அவன் இவ்வாறு சொல்வதைப் புரிந்து கொண்டார் துறவி. குதிரை வண்டிக்காரனின் அர்த்தமுள்ள பேச்சு அவர் கன்னத்தில் ‘பளார்... பளார்’ என்று அறைந்த மாதிரி இருந்தது.‘இனிமேலும் யோசிப்பது தவறு’ என்று நினைத்து அவன் ஒருவனுக்காக காலட்சேபம் நிகழ்த்தத் தொடங்கினார். மிகப் பெரிய கூட்டம் கூடியிருக்கும் இடத்தில் தத்துவம், மந்திரம், குட்டிக்கதைகள், சொர்க்கம், நரகம் என்று எப்படியெல்லாம் விரிவாக உரை நிகழ்த்து வாரோ அப்படியே அப்போதும் உரையாற்றினார். பிரசங்கம் முடிந்ததும் வண்டிக்காரனிடம், ‘‘காலட்சேபம் எப்படி இருந்தது?’’ என்று ரொம்ப ஆர்வமாகக் கேட்டார். அவன் மகிழ்ந்து பாராட்டுவான் என்ற எதிர்பார்ப்புடன்தான் அப்படிக் கேட்டார்.ஆனால் அவனோ, ‘‘நான் சாதாரண குதிரை வண்டியோட்டி. எனக்கு புராணம், தத்துவம் எல்லாம் தெரியாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் புல் வைக்கப் போகும் இடத்தில் ஒரேயொரு  குதிரை மட்டுமே இருந்தது என்றால் அதற்கு மட்டுமே புல் வைப்பேன். முப்பது குதிரைக்கும் சேர்த்து புல்லை அங்கே கொட்டிவிட்டு வர மாட்டேன்’’ என்றான் அமைதியாக.முதுகில் ‘சொளேர்’ என்று அடி விழுந்ததைப்போல உணர்ந்தார். படிப்பறிவு இல்லாவிட்டாலும் அனுபவ அறிவு அவனுக்கு இருக்கிறது. ஆனால் துறவிக்கோ நிறைய கல்வி ஞானம் உள்ளது. ஆனால் அனுபவம்?நிறைய படித்து விட்டோம் என்ற இறுமாப்பு அடையாமல்  பிறரின் அனுபவங்களை செவிமடுத்துக் கேட்க வேண்டும்.