Skip to main content

அறிந்துக்கொள்வோம் தினம் ஒரு வரலாறு பிப்.16 – ரசிகமணி டி.கே.சிதம்பரத்தை அறிவோம்

Published on 17/02/2018 | Edited on 17/02/2018
tkc


வட்டத்தொட்டி என்கிற இலக்கிய அமைப்பின் பிதாமகர் இவர், தமிழ்நாடு அரசின் முத்திரைகளில் வீற்றிருக்கும் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தினை லட்சணையாக வைக்க சிபாரிசு செய்தவர் டி.கே.சிதம்பரம். ரசிகமணி டி.கே.சி என்றால் எளிதில் இவரை அறிந்துக்கொள்வார்கள் தமிழகத்தில்.

தமிழகத்தின், தென்காசி அடுத்துள்ள களங்காடு என்கிற ஊரை பூர்வீகமாக கொண்ட பின்னர் திருநெல்வேலியில் உள்ள வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த தீத்தாரப்பன் – மீனா தம்பதிகளின் மகனாக 1882 செப்டம்பர் 22ந்தேதி பிறந்தார் சிதம்பரநாதன் அரசு குறிப்புகள். அவரது பெற்றோரின் குறிப்புகள் 1881 ஆகஸ்ட் 18ந்தேதி பிறந்தார் என்கிறது. அவரது பெற்றோர் குறிப்புகளே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பள்ளிக்கல்வியை தென்காசி திண்ணைப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை திருச்சி கிருஸ்த்துவ பள்ளியிலும் படித்தவர் 1905ல் சென்னை கிருஸ்த்துவ கல்லூரியில் இணைந்து படித்து பட்டம் பெற்றார். திருக்குறள், பெரியபுராணம் போன்றவற்றை கல்லூரி காலத்திலேயே கரைத்துகுடித்திருந்தார். அவர் படித்த கல்லூரியிலேயே தமிழ்த்துறை தலைவராக சில ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1915ல் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் படித்து வழக்கறிஞர் ஆனார். ஆனால் வழக்கறிஞராக பணியாற்றவில்லை.

இவரது மனைவி பிச்சையம்மாள். ஸ்ரீவில்லிபுத்தூர் அவரது சொந்தவூர். ரசிகமணி டி.கே.சியின் அம்மாவின் பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர். இதனால் அவருக்கு அந்த ஊரோடு நெருங்கிய தொடர்பு இருந்தது. வேலை நிமித்தமாக குறைந்த ஆண்டுகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும், பின்னர் குற்றாலத்திலும் தங்கி இருந்தார்.

1924ல் இலக்கிய சங்கம் என்கிற அமைப்பை தொடங்கினார். திருநெல்வேலியில் உள்ள இவரது வீட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையானால் இலக்கியவாதிகள் சங்கமிப்பார்கள். வட்டவடிவில் அமர்ந்து இலக்கியம், அரசியல் பேசுவார்கள். அதுவே பிற்காலத்தில் தொட்டிக்கட்டு இலக்கிய அமைப்பு என்கிற பெயரில் பிரபலமானது. அக்காலத்தில் பிரபலமாக இருந்த இலக்கியவாதிகள் வையாபுரப்பிள்ளை, சேதுப்பிள்ளை, சங்கரபாணி, பாஸ்கரத்தொண்டைமான் போன்ற சிலர் வாரந்தோறும் வருவார்கள். நேரம் கிடைக்கும்போதுயெல்லாம் வட்டத்தொட்டி கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் இராஜகோபாலாச்சாரி, கல்கி.கிருஷ்ணமூர்த்தி, அப்புசாமி போன்றோர் குறிப்பிடதக்கவர்கள்.

தமிழ்கவிதையை புரிந்துக்கொள்வது எப்படி, தமிழ் கவிதைகளை ஆராய்வது எப்படி, கவிதையை உள்வாங்கி மகிழ்வது எப்படி என்கிற விளக்கத்தை தமிழ் ரசிகர்களுக்கு விளக்கிய முதல் இலக்கிய திறனாய்வாளர் டி.கே.சி தான். தமிழ் கவிதைகளில் மறைந்து கிடந்த கருத்துக்களை வெளிக்கொணர்ந்ததால் இவரை ரசிகமணி என அழைத்தனர் இலக்கிய உலகில்.

கச்சேரிகளில் கர்நாடக இசை கச்சேரிகளில் தமிழ்பாடல்களை பாடவேண்டும் என அக்காலத்தில் இசைக்கச்சேரிகளை நடத்திய செட்டிநாட்டரசர் என அழைக்கப்படும் அண்ணாமலை செட்டியாருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தினார். அதன்படி 1941ல் தமிழிசைக்காக தேவக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக்கொண்டு தமிழ் கவிதைகளின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அவரைப்போல் தமிழ் அன்பர்கள் பலரும் வலியுறுத்தினர். அதன்பின்பே தமிழசை மன்றம் தொடங்கப்பட்டு இசை கச்சேரிகளில் தமிழ்பாடல்கள் பாடுவது வழக்கமானது. கம்பராமாயணத்தில் உள்ள செய்யுள்கள் பலவற்றை கம்பர் எழுதியத்தல்ல என்பது இவரது வாதம். இதயஒலி, அற்புதரசம், கம்பர் யார் உட்பட பல இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

இலக்கியவாதிகள் நாட்டின் ஏதோ ஒரு மூளையில் வாழ்பவர்கள், அவர்கள் தங்கள் சக இலக்கியவாதிகளின் இலக்கிய எழுத்துக்களை அறிந்துக்கொள்ள கடித இலக்கியம் என்கிற ஒரு வழியை உருவாக்கியர் டி.கே.சி.

1927ல் சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 1930ல் சென்னை மாகாண இந்து சமய அறநிலையத்துறையின் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றினார். சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூர் ராமசாமி இருந்தபோது சென்னை மாகாண முத்திரை சின்னமாக எதை வைக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது. பலரும் பலவிதமான கருத்துக்களை கூறினர். அப்போது தமிழகத்தில் நெடிந்த கோபுரங்கள் அதிகம். அதில் ஏதாவது ஒரு கோபுரத்தை தேர்வு செய்யலாம் என டி.கே.சி சொன்னபோது எந்த கோபுரத்தை தேர்வு செய்வது என்கிற கேள்வியும், விவாதமும் எழுந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரத்தை தேர்வு செய்யலாம், அதன் அழகே தனி எனச்சொல்லி முதல்வருக்கு பரிந்துரை செய்து அதை பலரும் ஏற்றுக்கொள்ள கோபுரச்சின்னம் தமிழக சின்னமாக உருவாக காரணமாக இருந்தவர் டி.கே.சி.

அக்காலத்தில் வெளிவந்த கலைமகள் என்கிற பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இருந்தார். வசந்தம் என்கிற மாத பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.

1954 பிப்ரவரி 16ந்தேதி தனது 73வது வயதில் மறைந்தார். அவரது மகன் தீபன் இளம் வயதிலேயே மறைந்துவிட்டார். அப்போது அவரது சக இலக்கியவாதி ஒருவர் கவிதை மூலம் இரங்கற்பா எழுதி அனுப்ப தன் மகனின் மரண துக்கத்திலும் கவிதை வரிகளை சிலாகித்தவர். அவர் மறையும் போது கவிதை பேசியபடியே மறைந்தார்.

- ராஜ்ப்ரியன்