Skip to main content

நூறு கதவுகளைத் திறக்கும் ஒற்றைத் திறவுகோல் -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #8

Published on 15/06/2018 | Edited on 09/07/2018

மொழியைப் பயில்வது என்பது தொடர்வினை. அது ஒருநாள் இருநாள்களில் அடைந்துவிடக்கூடியதன்று. இடையறாது செய்யப்படவேண்டிய முயற்சி. மொழியைத் தன்வயப்படுத்திக்கொள்வதைப் போன்ற அருஞ்செயல் வேறொன்றில்லை. நன்கு பேசவும் நன்கு எழுதவும் கற்றுக்கொண்டுவிட்டால் போதும், அதன் பின்னர் நாமடையும் பேறுகள் ஆயிரம். 


 

soller  uzhavu


 

 

 

பேச்சுத்திறன் என்பது சொற்களை ஆளும் திறன். எழுத்துத்திறமை என்பது வாக்கியங்களை நடனக்காரனின் உடல் மடிப்புகளைப்போல் துடிக்க விடும் திறமை. அன்றாட வாழ்க்கைக்கும் பேச்சாற்றலே துணைக்கருவி. நூறு, நூறு கதவுகளைத் திறக்கும் ஒற்றைத் திறவுகோலின் பெயர் பேச்சாற்றல். பேச்சும் எழுத்தும் வாய்க்கப்பெற்றவன் அடையும் முன்னேற்றங்களுக்கு எல்லையே இல்லை. அதை உணராதவர்கள் மொழியைக் கற்பதில் தேங்கி நின்றுவிடுகின்றனர். சொல்லாற்றலைப் பெருக்கிக்கொள்ளாமல் தடுமாறுகின்றனர்.

சொல்லாற்றலைப்பெருக்கிக்கொள்வதற்கு சொற்களோடு விழுந்து புரள வேண்டும். நல்முத்தைத் தேடி நீர்மூழ்குவோனைப்போல் நாள்தோறும் பத்திருபது சொற்களைத் தேடிப்  பயின்று நினைவில் இருத்த வேண்டும். படைப்பாளர்களாக விளங்குபவர்கள் புதுச்சொற்களையும் புதுத்தொடர்களையும் தொடர்ந்து ஆக்கி அளிக்க வேண்டும். மொழி மக்களாக வாழ்பவர்கள் தம் மொழியின் புத்துயிர்ப்பை உணர்த்தும் சில பக்கங்களையேனும் படிக்க வேண்டும். நாம் விரும்பிப் படிக்கும் எழுத்தாளரோ கவிஞரோ இம்முனைப்பு உடையவரா என்று தேர்தல் வேண்டும். இப்படிப் பற்பல வினைத்தொடர்களின் வழியாகச் செய்யும் கூட்டுழைப்பே மொழியைச் செம்மாந்து வாழச் செய்யும்.

 

சொற்களைப் பயில்வது என்னும் முனைப்பின் முதல் எட்டுவைப்பாக அகராதி ஒன்றை வாங்கிவிட்டோம். அகராதியை முதற் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரைக்கும் கண்ணெடுக்காமல் படித்துவிடுவது என்று தொடக்கூடாது. அகராதி என்பது படித்து முடித்துவிட்டு ஓரங்கட்ட வேண்டிய நூலன்று. 

 

அகராதியை எடுத்து வைத்து வரிவரியாகப் படித்து முடித்தால் எல்லாச் சொற்களையும் அறிந்ததாக ஆகுமே என்றும் எண்ணாதீர்கள். என் இளமையில் நான் அப்படிப் படிக்க முயன்றிருக்கிறேன். அப்போதைக்கு எல்லாச் சொற்களையும் அறிந்த உணர்வு தோன்றுமேயன்றி, நாளடைவில் நாமறிந்த சொற்கள் பலவும் மறதிக்குள் புதைந்துபோய்விடுகின்றன. அகராதிகளை நமக்கு வேண்டிய எந்தப் பக்கத்திலிருந்தும் தொடங்கலாம். பக்கங்களின் ஏறு வரிசைப்படியும் செல்லலாம், இறங்கு வரிசைப்படியும் செல்லலாம். 

 

 

 

ஓர் அகராதியை எடுத்து வைத்து எப்போது படித்து முடிப்பது, எப்போது எந்தச் சொல்லுக்குப் பொருள் வேண்டுமோ அப்போது அதை மட்டுமே பார்த்துவிட்டு நகர்வதை விடுத்து எதற்கிந்தத் தேவையற்ற வேலை என்று கேட்பீர்கள். நானும் அப்படித்தான் அகராதியை அணுக வேண்டும் என்று சொல்கிறேன். ஆனால், உங்களுக்கு வேண்டிய ஒரு சொல்லின் பொருளைக் கண்டதும் அகராதியை மூடி வைத்துவிடுவீர்கள். நான் அச்சொல்லோடு தொடர்புடைய பத்திருபது சொற்களுக்கான பொருள்களையும் பார்த்துவிட்டு அகராதியை மூடிவிடுங்கள் என்று சொல்கிறேன். அவ்வாறு பார்ப்பதனால் நீங்கள் அறிய விரும்பிய சொல்லின் பொருள் பசுமரத்தாணிபோல் மனத்தில் பதிந்துபோகும். மேலும் அறிந்த பல சொற்களின் பொருள்களையும் மறக்க மாட்டோம். 

 

 

 

திருமணத்திற்குச் செல்கிறீர்கள் என்று கொள்வோம். ஓர் உறவினரை அறிமுகப்படுத்தினால் எப்படி அறிமுகப்படுத்துவீர்கள்? “இவர் என்னோட தம்பி. ஈரோட்டுல மண்டி வெச்சிருக்காரே அந்தப் பெரியப்பாவோட கடைசிப் பையன். உங்க தங்கச்சியும் இவரும் ஒரே இடத்திலதான் வேலை செய்யறாங்க. அம்மா சொல்லியிருப்பாங்களே…” என்று சொல்வோம். ஓர் உறவை அதனோடு தொடர்புடைய பற்பல உறவுகளோடும் சேர்த்து அறிவித்தல்தான் முறையான அறிமுகம். அவ்வாறு அறிமுகப்படுத்துவதுதான் நினைவில் ஊன்றி நிறுத்தும் வழி.

 

சொற்களையும் அம்முறைப்படியே பொருளறிய வேண்டும். ஒன்றோடொன்று தொடர்புடைய அனைத்தையும் சேர்த்து அறிய வேண்டும்.  

 

 

முந்தைய பகுதி:

தண்டனை வழங்குவதற்கு நிகரான தமிழ்ச்சொல் தெரியுமா??? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 7
 

 

அடுத்த பகுதி:

"நத்திப் பிழைக்கிறான்" என்பதன் அர்த்தம் தெரியுமா??? -கவிஞர். மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #9