Skip to main content

"திராவிடம் என்றால் என்ன என்பதை பல வடிவங்களில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது" - பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் பேச்சு!

Published on 08/12/2021 | Edited on 09/12/2021

 

 Jeyaranjan

 

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீ எழுதிய ‘இடதுசாரி தமிழ்த்தேசியம்’, பத்திரிகையாளர் திருமாவேலன் எழுதிய ‘திரும்பத்திரும்ப திராவிடம் பேசுவோம்’, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘மார்க்சியமும் பெரியாரும்’ ஆகிய நூல்கள் கருஞ்சட்டை பதிப்பகம் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. மூன்று நூல்களையும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிட, பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் பெற்றுக்கொண்டார்.

 

பின் விழாவில் ஜெயரஞ்சன் பேசுகையில், "இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு நீங்கள் வரவேண்டும் என்று பேராசிரியர் சு.ப.வீ தொலைபேசியில் சொன்னபோது சரி வருகிறேன் என்றேன். நூலை யார் வெளியிடுகிறார் என்று கேட்டதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிடுகிறார் என்றார்.

 

இன்றைக்கு வெளியிட்ட நூல்கள் இன்றைய காலத்திற்கு அவசியமான நூல்கள். இன்றைய அரசியலை எதிர்கொள்ளவும் தேவைப்படுகிறது. இன்று 12ஆம் வகுப்பிற்கு பிறகு மேல்படிப்பு படிக்கக்கூடியவர்களின் விகிதம் 55 விழுக்காடு வந்துவிட்டது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. இந்தியாவின் சராசரி விழுக்காடே 26 விழுக்காடுதான். 55 விழுக்காடு அளவில் பிள்ளைகள் படிக்கிறது என்றால் அவர்களுடைய தேடல் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தேவையானதை இயக்கம் தயாரித்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். 

 

அமெரிக்காவில் இன்று சமூக நீதி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஐரோப்பாவும் இன்று பேச ஆரம்பித்துள்ளனர். புதிய பொருளாதார கொள்கைகள்தான் நம்மை காப்பாற்றும் என்று பேசிக்கொண்டு இருந்தவர்கள் இன்று சமூக நீதிதான் முக்கியம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். காரணம் சமத்துவமின்மை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சமத்துவமின்மை அதிகரிக்கும்போது வலதுசாரிகள் வெறுப்பரசியலை வளர்க்கிறார்கள். வெறுப்பரசியல் நம் ஊரில் மட்டும் இல்லை. இன்றைக்கு நம்மை தமிழ்ச்சமூகத்தின் எதிரிகள் எனக் கட்டமைக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்திற்கு நம்முடைய இயக்கம் அளித்துள்ள பங்களிப்பு பல தளங்களில் உள்ளது. 

 

பெரியாரை வெறும் கடவுள் எதிர்ப்பாளராக மத மறுப்பாளராகச் சுருக்கி பார்க்கிறார்கள். இன்றைக்கு நவீன சிந்தனையில் பேசக்கூடிய விஷயங்களை பெரியார் அன்றைக்கே செய்துள்ளார். சமுதாயத்தை பற்றி தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருந்ததால் அந்த அறிவு அவருக்கு கிடைத்தது. பல இயக்கங்கள் தோன்றியிருந்தாலும் அவர்கள் தங்கள் பார்வையை மதவிடுதலை, இன விடுதலை எனக் குறுகலாக வைத்திருந்தனர். ஆனால், பெரியார் அப்படியில்லை. காலையில் அமர்ந்து மடாதிபதிகளுடன் இந்தியை எதிர்த்துக்கொண்டு இருப்பார். மாலையில் அந்த மாடாதிபதிகளை திட்டி கூட்டத்தில் பேசிக்கொண்டு இருப்பார். இங்கிருக்கும் அனைத்து பேதங்களையும் ஒழிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கு எவையெல்லாம் எதிராக இருக்கிறதோ அவற்றையெல்லாம் விமர்சனம் செய்தார். பெரியார் என்ன செய்தார் என்பதையும் திராவிடம் என்றால் என்ன என்பதையும் பல வடிவங்களில் சொல்லவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.    

 

பெரியார் என்னென்ன வேலைகள் செய்துள்ளார் என்பதை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல வேண்டும். அண்ணன் ராசா டெல்லியில் பெரியார் பற்றி பேசிக்கொண்டு இருக்கையில் பெரியார் பற்றி எதாவது புத்தகம் இருந்தால் கொடுங்கள் என்று யாராவது கேட்டால் நம்மிடம் கொடுக்க என்ன புத்தகம் இருக்கிறது? இந்த அனுபவம் எனக்கே நிகழ்ந்துள்ளது. ஆகவே அந்த தளத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

 

திராவிட இயக்கத்தின் கொள்கை என்பது பிச்சைக்காரராக இல்லாமல் அனைவரையும் மானுடராக மாற்றுவது. தலை நிமிர்ந்து நடக்கும்போதுதான் ஒருவன் மானுடராக மாறுகிறான். தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்றால் அவனுக்கு சமஉரிமை வேண்டும் . கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி குப்பை அள்ளுபவராக இருந்தாலும் சரி ஒருத்தருக்கு ஒரு ஓட்டு என்றார் அம்பேத்கர். அது வழியாகத்தான் அரசியல் அதிகாரம் ஜனநாயகப்படுத்தப்பட்டது. பொருளாதார அதிகாரத்தையும் சமூக அதிகாரத்தையும் ஜனநாயகப்படுத்த முடியாத நாடுதான் இந்த நாடு. இவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை 1967இல் இருந்து செயல்வடிவத்தில் கட்டிக்கொண்டு இருக்கிறோம்" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்