Skip to main content

எம்.ஜி.ஆர் தமிழரா? - காவ்யா சண்முகசுந்தரம்

Published on 06/04/2018 | Edited on 06/04/2018

ருதூர் கோபாலனின் முன்னோடிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை மாவட் டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் வாழ்ந்துவரும் மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் கள் என்றும், அவர்கள் பிழைப்பை  நாடிக் கேரளத்திலுள்ள மருதூரில் குடியேறியவர்கள் என்றும், அப்போது மேனன் என்று அழைக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆக, பிறப்பால் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் மலையாளி எனக் கருதப்பட்டாலும் பூர்வீகத்தில் தமிழரே என்று ‘புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நூலில் 1982-ல் மணிமேகலை பிரசுர ஆசிரியர் குழு குறிப்பிட்டது. (ப.6)


இதனை அடியொற்றி புலவர் செ.இராசுவும் "செந்தமிழ் வேளிர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு' என்ற நூலை, அதாவது ‘எம்.ஜி.ஆர். ஒரு கவுண்டர்தான்’என்பது இதன் அர்த்தமாகும், எழுதியுள்ளார். இந்த ஆய்வுக்கு மேனாள் சட்ட அமைச்சர் சி. பொன்னையன், அருட்செல்வர் நா.மகாலிங்கம், பழையக்கோட்டை கொங்கு வேளாள சமூக நலமன்றம் தலைவர் நல்லசேனாபதி சர்க்கரை மன்றாடியார் போன்றோர் உதவி செய்திருக்கின்றனர். கோவை செழியன், கோவைக்கிழார், பேரா. கு. அருணாசலக்கவுண்டர் எஸ்.ஏ.ஆர். சின்னசாமிக் கவுண்டர் போன்றோரும் எம்.ஜி.ராமசந்திரனைக் கவுண்டர் ஆக்கி உள்ளனர். சிலம்புச்செல்வரும் சும்மா இருக்கவில்லை. "எம்.ஜி.ஆர். சரித்திர நாயகராகி விட்டார். அவரைப்பற்றி ஒரு காப்பியமே படைக்கலாம். முன்னோடியாக இந்த உரைநடை இலக்கியம் படைக்கப்பட்டுள்ளது'  என்று  இதயப்பூர்வமான வாழ்த்துக்களை அள்ளி வழங்கினார்.


தொல்பொருள் ஆய்வாளர் இரா.நாகசாமியும் எம்.ஜி.ஆர். கொங்குநாட்டுக் குடும்பத்தில் தோன்றிய தமிழரே என்பதை ஏற்றுக்கொண்டு மகிழ்கிறார்.


"கொடையும் விருந்தோம்பலுமே கொங்கு வேளாளர் குலத்தின் சிறப்புத் தன்மைகள். இவற்றை எம்.ஜி.ஆர். மிகுதியும் பெற்று வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்கிறார். 


வேளிர் சிறப்புகள் அனைத்தும் வேளிர்குல வேந்தர் மரபினரான இவரிடம் பெரிதும் குடிகொண்டுள்ளது' என்று அந்த நூலைப் புலவர் பாடி முடித்துள்ளார் (ப.159). வேந்தர்களைப் புலவர்கள் பாடுவது சங்ககாலத்திலிருந்தே வழிவழி வழியும் வழக்கம்தானே.


இதைப் பார்த்த எம் .ஜி.ஆரின் வினையும் எதிர்வினையும் என்னவென்று தெரியவில்லை. ஆனால் எம்.ஜி.சக்கரபாணியும் அவரது மகன் விஜயகுமாரும் மகிழ்ந்தனராம். ஆய்வுக்குறிப்புகளைப் பாராட்டியும் ஆதாரங்களுக்கு ஊக்கமூட்டியும் உபசரித்தும் அனுப்பினார்களாம். 


அன்றைய ரசிகரான இன்றைய முதல்வர் எம்.ஜி.ஆருக்காக ஓடி ஓடி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருவதற்குரிய காரணங்களுள் ஒன்றாக இதுவும் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

mgr


ஆனால் பேரா. அருணனின் ஆய்வு இதற்கு மாறானது. “இவர் பிறப்பால் தமிழரும் அல்ல. தமிழகத்தில் பிறந்தவரும் அல்ல. பாலக்காட்டு மன்னாடியார்  குடும்பங்களில் ஒன்றான நல்லே பள்ளி அங்கநாத் மன்னாடியார் குடும்பம், கொங்கு வேளாளர்களில் பெரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் வேணாடுடையாசிர் வழிவந்தவர்கள் என்பதும், முன்பு விரிவாக விளக்கப்பட்டது. நல்லேபள்ளி அங்காரத்து சங்குண்ணி வலிய மன்னாடியாரின் மூத்த மகன்தான் கோபாலமேனன். கோபாலமேனன் - சத்தியபாமா தம்பதியரின் இளைய மகன்தான் மாண்புமிகு எம்.ஜி.ஆர்.’’ கேரளத்தில் ஒட்டப்பாலம் அருகில் நல்லேபள்ளிதான் கோபாலமேனனது ஊர். கேரளத்தில் பாலக்கட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள வடவனூர் அருகிலுள்ள மருதூர்தான் சத்தியபாமாவின் ஊர். ஆக, தாய் தந்தை இருவருமே மலையாள நாட்டைச் சேர்ந்தவர்கள். என்றாலும் அவர்களின் முன்னோர்கள் கொங்கு வேளாளர்கள் என்று நிரூபிக்க முயன்றிருக்கிறார் செ.இராசு. இதை முழுமையாக நிரூபித்துவிட்டதாகக் கூறமுடியாது. ஒரு பெரிய முட்டுக்கட்டையை எப்படி சமாளிக்கிறார் என்பதிலேயே இவரின் தோல்வியைக் காணலாம் என்பார் அருணன்.


“இப்போது கேரள நாயர்களில் பல பிரிவினர் ‘மேனன்’ என்ற பெயரைச் சேர்த்துக் கொள்கின்றனர். கேரளாவில் வழங்கும் மேனன் என்பது சாதிப்பெயர் அல்ல, பட்டப்பெயரே என்று கூறுகின்றனர். சாதிப்பெயர் வேறு பட்டப்பெயர் வேறு என்று சாதிக்க முயல்கிறார். தமிழ்நாட்டில்கூட ‘பிள்ளை’ என்பது சாதிப்பெயர் அல்ல பட்டப் பெயர். ஆனால் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அப்பெயரை வைத்துக்கொள்வது ஏன் என்பதற்கு விளக்கம் சொல்ல மாட்டார்கள். கேரள நாயர்களில் பல பிரிவினர் தங்களை மேனன் என்று அழைத்துக்கொள்வதாக அவரே கூறுகிறார். பிற சாதியினர் ஏன் இப்படி அழைத்துக் கொள்வதில்லை என்பதற்கு சமாதானம் ஏதுமில்லை. பட்டப்பெயர், சாதிப்பெயர் எல்லாம் ஒன்றாகிப் போயிருந்தன என்பதை மறந்துவிட்டு வாதம் செய்து பயனில்லை. கொங்கு வேளாளர் என்று நிரூபிக்க முயன்று ‘கோபாலமேனன்’ என்ற பெயருக்கு விளக்கம் சொல்ல முடியாமல் தவித்து கேரளநாயர் பிரிவைச் சார்ந்தவர்தான் எம்.ஜி.ஆரின் தந்தை என்பதில் முடிந்தது இந்த ஆய்வு.’’


“சதானந்தவதியின் ஊரான குழல் மன்னத்திலிருந்து செல்லப்பன் நாயர் எம்.ஜி.ஆரைத் தேடிக்கொண்டு கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவுக்கு வந்து "ராமச்சந்திர மேனோன் இருக்கிறாரா?' என்று விசாரித்திருக்கிறார். ‘ராமச்சந்திர மேனோன்’ என்று நான் ஒரு நாளும் என் நண்பர்களால் அழைக்கப்பட்டதே இல்லை. நான் எந்த சாதி என்றுகூட அவர்கள் கவலைப்பட்டதில்லை. அவரும் ஊர் திரும்பிவிட்டார்’’ என்று எம்.ஜி.ஆரே பதிவு செய்துள்ளார். (நான் ஏன் பிறந்தேன், ப.1058)


சத்தியபாமா தனது இரு குழந்தைகளோடு கும்பகோணத்திற்கு வந்தார். அங்கு அவரது உறவினர்களான வேலு நாயரும் நாராயணன் நாயரும் இருந்தனர். ‘வனத்திலே மேஞ்சாலும் இனத்திலே அடைய வேண்டும்’ என்ற பழமொழியை ஒருவர் நினைவூட்டுகிறார். இனம் இனத்தோடுதான் சேர்ந்தது.


“எம்.ஜி.ஆரின் பெயர் ஜி.ராமச்சந்திரன் என்றும், தந்தை பெயர் கோபால மேனன் என்றும் பிறந்ததேதியாக 25-5-1916 என்றும், வகுப்பு மலையாளி என்றும், குறிப் பிட்டிருந்தது என்பார் எஸ்.விஜயன். ஆக பள்ளிச் சான்றிதழ் இவரை மலையாளி என்றே பதிவுசெய்கிறது.

 

மதுரை ஒரிஜினில் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டவர், நாராயண நாயர். அவர் அங்கு பல்வேறு பணிகளைச் செய்து வந்தவர்.


இவரது வீட்டுக் காவல்காரனில் இருந்து வீட்டுக்காவல் அதிகாரி வரை, ஏன் தனது ‘டூப்பைக்கூட மலையாளிகளாகவே பார்த்து வைத்துக்கொண்டார்.


திரைப்படத்தில் இவருக்கு பாலையா முதல் பல வில்லன்கள் இருந்தாலும் இறுதிவரை எம்.என்.நம்பியாரே இவரது ஆஸ்தான வில்லனாக இருந்தார்.


என்றாலும் மக்கள் இவரை மலையாளி என்பதற்காக ஒதுக்கவில்லை. பேரா.கா.சிவத்தம்பி கூறுவது போன்று, “எம்.ஜி.ஆர். தன் கவர்ச்சியின் தளமாக தமிழ்பற்றிய நிலைப்பாட்டினைக் கொள்ளவில்லை. (தமிழ்ப் பண்பாட்டில் சினிமா, ப.13.).


எனினும், தமிழைத் தனது தாய்க்கு இணையாக நேசித்தவர். ஒவ்வொரு செயலிலும் அசைவிலும் தமிழ் இருந்தது. 


தமிழைத் தனது உயிர் மூச்சாகவே கொண்டு வாழ்ந்தார். அமெரிக்கா, ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இங்கிலாந்து, இலங்கை என இன்னும் ஏராளமான உலக நாடுகளுக்குச் சென்று தமிழின் சிறப்பையும் தமிழ்நாட்டின் பெருமையையும் பாரம்பரியத்தையும் பரவச் செய்தார். புரட்சித் தமிழராய் வாழ்ந்த எம்.ஜி.ஆரை ஒரு மக்கள் அதிசயம் என்று அவரது டூப்பும் பாடிகார்டுமான கே.பி.ஆர். பதிவு செய்கிறார் (மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்., ப.105). அதென்ன புரட்சித் தமிழரோ?


1939-ல் இவர் தங்கமணி எனும் பார்க்கவியை மணந்துகொள்கிறார். அவரது தாயார் லட்சுமிகுட்டி எனும் மலையாளி, தந்தையோ விசுவநாத ஐயர். பாலக்காட்டில் வாழ்ந்த வேஷு அம்மா சத்தியபாமாவுக்கு உறவு முறையில் தங்கை. எம்.ஜி.ஆர் குடும்பம் பாலக்காட்டில் வசித்தபோது அடைக்கலம் தந்தது வேஷு அம்மாதான். 


அவர்தான் பெண் பார்த்து தந்தது. சேகரிபுரத்து ‘தெக்கின் கூற்றில்’ என்ற பூர்வீக வீட்டில்தான் திருமணம் நடந்தது. கேரள வழக்கப்படி மணப்பெண்ணுக்கு ‘புடவைமுறி’ வழங்கினார். புடவை முறி என்றால் மணமகள் அணிய பார்டர் போட்ட வேஷ்டி, ரவிக்கை, மேல்வேஷ்டி (முண்டு) ஆகிய உடைகள் அடங்கியது. அத்துடன் தாலிக்குப் பதிலாக மோதிரம் அணிவித்தார். 2 ஆண்டாகியும் எம்.ஜி.ஆருக்குப் போதிய வருமானம்  இல்லாததால் அவரோடு சென்னையில் வாழ முடியாமல் தவிக்க, அவரது பெற்றோர் கேரளாவிற்குப் பெண்ணை அழைத்துப் போயினர். போய் 20-வது நாளில் வறுமையும் மாரடைப்பும் அவரைக் கொன்றுவிட்டன. இவரால், உடனே போய் மனைவி உடலைக்கூடப் பார்க்க இயலவில்லை. நாயர் வழக்கப்படி ஒரு பெண் இறக்கும்போது தாயார் உயிருடன் இருந்தால் புதைப்பர்; உயிருடன் இல்லை என்றால் எரிப்பர். பார்கவியைப் புதைத்து விட்டனர். மூன்றாவது நாளில்தான் போய்ச் சேர்ந்து சேகரிபுரத்தில் புதைகுழியை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பினார் எம்.ஜி.ஆர்.


எம்.ஜி.ஆரின் அண்ணி நாணிக்குட்டியும் 30ஆம் நாளில் இறந்துவிட்டார். அவரது ஊர் பாலக்காட்டுக்குப் பத்து மைல் தொலைவில் உள்ள எத்தனூர்.


எம்.ஜி.ஆர். முதல் மனைவி மாண்ட பின்னும் அவரது குடும்பத்தாருடன்  தொடர்பு வைத்திருந்தார். தங்கமணியின் தம்பி மணி என்கிற சேதுமாதவன் அடிக்கடி சென்னைக்கு வருவார். அவருக்கு  இவர் ஆயிரக்கணக்கில் பண உதவி செய்துள்ளார். மணியின் மகன் ரவீந்தரனுக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளார்.


சத்தியபாமா தன் மகனுக்கு மீண்டும் பாலக்காட்டினருகில் குழல்மன்னம் ‘எரகாட்’ குடும்பத்தில் பெண் பார்த்தார். குஞ்சு கிருஷ்ணன் நாயர்தான் கல்யாண தரகர். 


சதானந்தவதியின் தந்தை கடுங்கநாயர், தாய் மூகாம்பிகை. 100 ஏக்கர் விவசாய நிலம் கொண்ட பணக்காரக் குடும்பம். எரகாட் மூகாம்பிகை சதானந்தவதி இ.எம்.சதானந்தவதி என்று அழைக்கப்பட்டார். 1942-ல் திருமணம் நடந்தது. 10 மாதங்கள் தாய் வீட்டிலேயே இருந்துவிட்டு சென்னைக்கு வந்த பிறகுதான் தான் இரண்டாந்தாரம் என்பதே அவருக்குத் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் பாகவதர் போன்ற நடிகர்களின் அந்தரங்கங்களை அறிய அறிய மேலும் அதிர்ச்சி அடைந்தார். பக்கத்து வீட்டுப் பெண்களும் பயங்காட்டினர். அதனாலேயே அவருக்கு காசநோய் தொற்றி வலுப்பெற்றது. அவர் வயிற்றுவலியாலும் துன்புற்று படுத்த படுக்கையானார். எம்.ஜி.ஆர் அவரை நன்றாகவே கவனித்துக் கொண்டார். எனினும்,  அவர் பயந்தது போலவே ஆயிற்று, வி.என்.ஜானகியின் காதல் கதை.


20 ஆண்டுகள் நோயாளியாகவே வாழ்ந்து 1962-ல்,  மடிந்தார் சதானந்தவதி. எம்.ஜி.ஆர். அவரது நினைவில் குழல் மன்னத்தில் வீடு ஒன்று கட்டிட விரும்பி, மாதிரி வடிவமும் பணமும் கொடுத்தார். அதன்படியே அழகான வீடு அமைந்தது. ‘சந்திரானந்த நிலையம்’ என்று தன்  பெயரையும் சேர்த்து அதற்கு பெயர் சூட்டினார். நாடோடி மன்னனுக்காக தங்கவாள் கிடைத்ததும் நேராக அந்த வீட்டிற்கே சென்றார். தனது இரு படங்களை மாட்டச்சொன்னார். 1985-ல் மனைவியின் நகையைத் திருப்பித்தரவும், பின்னர் வளர்ப்புமகள் ராதாவின் உறவினர் வீட்டுத் திருமணத்திற்காகவும் அந்த ஊருக்கு சென்று வந்தாராம். எரகாட்டின் வீட்டிற்கும் போய் இளமைக் கால படங்களையெல்லாம் பார்வையிட்டார். சதானந்தவதியின்  பெரியம்மா கார்த்திகேயனி 
அம்மாளிடமும் நலம் விசாரித்தார். சதானந்தவதியின் அண்ணன் நாராயணன் நாயர் குடும்பத்துக்குத் தொடர்ந்து உதவி வந்தார்.


எம்.ஜி.ஆரும் அவரது அண்ணனும் தங்கள் இரண்டிரண்டு திருமணங்களையும் கேரளத்திலேயே செய்துகொண்டனர். இவரது மூன்றாவது மனைவியான ஜானகியும் பாலக்காட்டில் பிறந்தவர்தான்.


தமிழ்நாட்டில் ஆபத்து என்றால் எம்.ஜி.ஆர். தன் உறவுகளைக் கேரளத்துக்கே அனுப்பி வைத்திருக்கிறார். இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்த காலத்தில் ஜப்பானியர்களால் மெட்ராஸ் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியபோது, சக்கரபாணி பயந்து போனார். எம்.ஜி.ஆர் அவரோடு அண்ணி, அம்மா, தன் மனைவி ஆகியோரைச் சொந்தக்கிராமத்துக்கு அனுப்பிவைத்தார். (பிம்பச்சிறை ப.139).


எம்.ஜி.ஆர் இறுதிவரை தன் அண்ணனை ‘ஏட்டா’ என்றே அழைத்து வந்தார். அதுபோல் அண்ணன் பிள்ளைகளும் இவரை ‘சேச்சா’ என்றே அழைத்தனர். அண்ணன் மகள் லீலாவதியும் கேரளத்திலேயே மணமுடித்து வாழச் சென்றிருக்கிறார். அவரே இவருக்கு சிறுநீரகதானம் கொடுத்தவர். (குமுதம், லைஃப், எம்.ஜி.ஆர். சிறப்பிதழ், 27-12-2017).


எம்.ஜி.ஆர். கண்டியில் 17-1-1917-ல் பிறந்ததாகக் கூறப்பட்டாலும் வடவனூர் ‘மருதூர்’ வீடுதான் சக்கரபாணி, ராமச்சந்திரன் இருவருக்கும் பிறப்பிடம் என்று அப்பகுதி மக்கள் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள். அங்கு உள்ளோர் கருத்தில் மெனகத் கோபாலமேனன்,  கண்ணச்சி அம்மா என்பதே எம்.ஜி.ஆர். பெற்றோர்களின் பூர்வீகப் பெயர். மெனகத் என்பது கோபால மேனனின் குடும்பப்பெயர்.


பெரிய மருதூர் வீட்டை நிர்வகிக்க முடியாமல் சத்தியபாமா வடவனூர் விட்டு பாலக்காட்டிலும் இலங்கையிலும் வசித்துவிட்டு மீண்டும் பாலக்காட்டிற்கே திரும்ப, அங்கேதான் கோபாலமேனன் மாண்டிருக்கிறார். இங்கிருந்தே வேலுநாயரோடு கும்பகோணத்திற்கு சென்றனர் என்பது வடவனூர் வாய்மொழிகள்.


வடவனூர் வாசுதேவமேனன் பலசரக்குக் கடைக்காரர். எம்.ஜி.ஆரின் இளமைக்கால நண்பர். கொல்லங்கோட்டில் பாகவதரின் ‘சத்தியசீலன்’ திரையிடப்பட்டிருந்தபோது எம்.ஜி.ஆரும் மேனனும் படம்பார்க்க நாராயண நாயருடன் நடந்தே வெற்றிலை போட்ட வண்ணம் சென்றனராம். அதில் இவரும் நடித்திருந்தார். அதற்குப் பின் இவர் இரண்டாண்டு கழித்தும் அங்கு வந்தார் என்கிறார்.


எம்.ஜி.ஆருக்கு வடவனூரில் தங்களுக்கு என்று சொந்தமான வீடு இல்லையே என்ற நினைப்பு நீண்டகாலமாக வாட்ட, ஐம்பதுகளில் ஒரு பழையவீட்டை ரூ.2500/-க்கு வாங்கி புதுப்பித்து ‘சத்யவிலாஸ்’ என்று மலையாளத்தில் பெயர்ப்பலகை வைத்தார். அதனைப் பள்ளிக்கூடமாக மாற்ற வேண்டும் என்றும் விரும்பினார். இப்போதோ (1989) அரசு ஊழியர் ஒருவர் குடியிருக்கிறார். வலிய மருதூர்வீடும் இங்கு செட்டிநாடு வீடுபோல் பிரமாண்டமாக இருக்கிறது. இதனுள் உள்ள நாகராஜா கோவிலில் இவரது குடும்ப வம்சாவழியினர் காலை மாலை இரு வேளைகளிலும் பூஜை செய்கிறார்கள். இது 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வீடு. எம்.ஜி.ஆர். 1963-ல் இங்கு வந்து போயிருக்கிறார்.


இவர்களது குலதெய்வம் பாலக்காட்டு அருகில் பாராகுன்னாச்சியில் உள்ள ‘மாம்புள்ளிக்காவு’ என்னும் அம்மன்கோவில். 


மருதூர் வீட்டில் கோபாலமேனனைப் பணிக்கர் என்றும் கதகளி நடிப்புக்காக அவர் வடவனூர் வந்தவர் என்றும் கூறுகின்றனர். இவர்கள் மணம் காதல் மணம். ஒரே சாதி ஆனால் வேறு பிரிவு என்பதால் சமையலறை உரிமை கூட இவரது தாய்க்கு மறுக்கப்பட்டது. சொத்துக்கள் பிரிக்கப்பட்டபோதும் வஞ்சிக்கப்பட்டாராம்.


எம்.ஜி.ஆர். இங்கு வந்தால் இவரது மாமா நாராயணமேனன் வீட்டிலேயே தங்குவாராம். ‘ஸ்ரீமுருகன்’ படத்தில் இவர் ஆடிய சிவனது ஆடலை வடவனூரில் உறவினர்கள் முன்னாலும் ஆடிக்காட்டினாராம். இன்னொரு முறை இவர் அண்ணனோடு வந்தபோது பெரியவர்கள், "ஆமா, இந்தக் கூத்தாடிப் பசங்களுக்கு வேற வேலை இல்லை' என்று இவர்கள் காதுபடவே சொன்னார்களாம். மனம் நொந்து போன இவர், ‘மகிளசபா’ கட்டிடத்துக்கு அவர்கள் நிதி கேட்டபோது மறுத்துவிட்டாராம். தன் தாயின் பெயரை வைத்தால் தருவதாகக் கூற அவர்களோ மறுத்துவிட்டார்களாம். சபாஷ் பழிக்குப் பழி.


எம்.ஜி.ஆர் பிறந்து இரண்டரை ஆண்டில் அவரது தந்தை இறந்து போக, நிர்கதியாகி வறுமையில் குடும்பம் நசித்துப்போனது. இவரது பிறப்பே இதற்குக் காரணம் என்று இவரது தாய் நம்பியிருக்கிறார். "முடிகாலன் பிறந்து வீட்டினெத் தன்னை முடிச்சு' என்று மலையாளத்தில் திட்டுவார்களாம். "நான் ஏன் பிறந்தேன்' என்ற கேள்வி எழுந்த தருணங்கள்  இதுவாகக்கூட இருக்கலாம். யார் கண்டார்கள்?


மன்னர் பத்மநாபன் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு கேரளாவுக்கு வந்து அஞ்சலி  செலுத்திவிட்டு சென்றார் எம்.ஜி.ஆர். அடுத்தநாள் “மலையாளி எம்.ஜி.ஆர் மலையாளி மன்னர் பத்மநாபனுக்கு அஞ்சலி என்று செய்தியைப் பத்திரிகைகள்  வெளியிட்டன.


ஒருமுறை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை சிக்னலில் மழையில் நனைந்த ரிக்ஷாக்காரர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். இரக்கப்பட்டு மறுநாளே தன் செலவில் 5000 மழைக்கோட்டுகளை வாங்கி சென்னையிலுள்ள அனைத்து  ரிக்ஷாக்காரர்களுக்கும் கொடுத்தார். அதோடு திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய நகரங்களில் உள்ள ரிக்ஷாக்காரர்களுக்கும் 1000 வீதம் மழைக் கோட்டுகளை அனுப்பிவைத்தார். ஒரு தினசரியில் ‘எம்.ஜி.ஆர். கேரள ரிக்ஷாகாரர்களுக்கு உதவி’ என்று செய்தி வந்தது.


எம்.ஜி.ஆர் தி.மு.க.வில் செல்வாக்குப் பெற்று வளரும்போது தேசியம் பேசிய சிவாஜிகணேசன் இவரை ‘எங்கிருந்தோ வந்தவர்’ என்று தன் வசனங்களால் குத்தினார்.


எம்.ஜி.ஆர்.,  அ.தி.மு.க.வைத் தொடங்கி அது வளரும் போது திராவிடம் பேசிய கலைஞரும் ‘மலையாளி’ என்று பிரித்துப் பேசினார்.


எம்.ஜி.ஆரோடு நட்பு பகை என்று இரண்டாட்டம் ஆடிய கண்ணதாசக் கவிஞரும் ஒரு படத்தில் "சேரனுக்கு உறவோ செந்தமிழர் மரபோ' என்று கிண்டியிருந்தார்.


ஒருமுறை மதுரையில் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இருந்தபோது கலைவாணர் எம்.ஜி.ஆரைக் கேலியாக, "ஏய்! பெரிய பயில்வானோ? அங்கே போறே - இங்கே போறே. 


பாடியைக் காண்பிக்கிற! முண்டாவைக் காட்டற. நீ என்ன பெரிய வல்லாடனா!' என்று கேட்டாராம். பின்னர் கோவையில் பார்க்கும்போது "வாப்பா நட்சத்திரம் கண்டோனே' என்றும் பட்டம்  சூட்டினாராம். கேரளத்து பயில்வான்தான் வல்லாடன். அவன் பர்ஃபேக்கருடன் சண்டையிட்டு தோற்று மல்லாந்து விழுந்து வானத்து நட்சத்திரங்களைப் பார்த்துவிட்டானாம். எம்.ஜி.ஆர். மலையாளியாகையால் நாஞ்சில்நாட்டு நக்கலாக கலைவாணர் கிண்டல் செய்திருக்கிறார் (நான் ஏன் பிறந்தேன் ப.134).


‘மரம் சும்மா இருந்தாலும் காற்று 
அதனைச் சும்மா இருக்க விடுவதில்லை’ என்பார்கள். 

 

பாவம் எம்.ஜி.ஆர். என்றாலும், எம்.ஜி.ஆர். ஓணம் பண்டிகையைக் கொண்டாடாமல் பொங்கல்விழாவைத் தொடக்ககாலம் முதல் கொண்டாடி வந்திருக்கிறார். 1955-ல் எம்.ஜி.ஆர் நாடக மன்றம் சார்பில் 50-க்கும் மேற்பட்டோருடன் பொங்கல் விழா கொண்டிடாடிய பதிவு உள்ளது. அனைவருக்கும் வேட்டி, புடவை, பணம், பரிசு என்று வழங்கியிருக்கிறார். 1962-ல் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பிலும் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளும் நிகழ்த்தியிருக்கிறார். பின்னர் நடிகர் சங்கத்திலும் ராமாவரம் தோட்டத்திலும் பொங்கல் கொண்டாடியுள்ளார் என்பதை கே.பி. ராமகிருஷ்ணன் குறிப்பிடுகிறார் (மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்., ப.22-28).


எம்.ஜி.ஆர். மூன்றாவது வகுப்புவரை கும்பகோணம் நகராட்சி யானையடி தொடக்கப் பள்ளியில் படித்ததால் தமிழ் கட்டாயப் பாடமானது. தாய்மொழியான மலையாளத்தை வீட்டு மொழியாகவே வைத்திருந்தார். பேசத்தெரிந்த அளவு எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்று அவரே ஒரு நிகழ்வைப் பதிவு செய்துள்ளார்.


ஒரு முறை இவர் திருவனந்தபுரத்திற்கு ரயிலில் செல்லும் போது தமிழ்ப்பெயர்ப் பலகையை வாசித்துக் கொண்டே வந்தவருக்கு மலையாளப் பெயர்ப்பலகையை வாசிக்க முடியவில்லையாம். எல்லோரும் கேலி செய்தார்களாம். பிறப்பால் மலையாளியாக இருந்தும் மலையாளம் தெரியவில்லையே என்ற கேலி இது. மலையாள மொழியை எங்கு கற்க முடியும்? கேலியை ஏற்றுக்கொண்டேன். என்ன செய்வது?’’ என்று எம்.ஜி.ஆர் தெரிவிக்கிறார்.


கேலியை மட்டுமன்று மலையாளி என்பதையும் ஏற்றுக்கொண்டார். இவரது மலையாளப் பேச்சு கூட தமிழ் ஒலிப்பாக இருக்குமாம். தாயிடம் என்ன மொழியில் பேசினாரோ. தமிழ் தெரியாத மனைவிமார்களுடன் என்ன மொழியில் பேசினாரோ! தாய்மொழியாகத்தானே இருக்கவேண்டும்.


1953-ல் "ஜெனோவா' படத்தைத் தமிழிலும் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் தயாரித்தனர். இரண்டிலும் இவரே கதாநாயகர். மலையாளப்படத்தில் இவரது பேச்சை நீக்கிவிட்டு வேறு மலையாள நடிகரால் டப் செய்தார்களாம். இது இவருக்குப் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. மலையாள மொழியை நன்கு எழுதவும் படிக்கவும் எனக்குத் தெரியாவிடினும் வீட்டில் அவ்வப்போது பேசும் வாய்ப்பிருந்ததால் சுமாராகப் பேசும் தகுதியைப் பெற்றிருந்தேன் என்ற வருத்தத்தை வெளிப்படுத்துகிறார். மலையாளத்தை அறிந்திருந்தாலும் மலையாள ஓசையில் பேச முடியவில்லை என்பது மலையாளிகளின் முடிவு.


இவரது இரண்டாவது மனைவி சதானந்தவதியுடன் இவர் மொழி பற்றி சர்ச்சை நடத்தியுள்ளார். அப்போது இவரது மனைவி, "என்னைப் பொறுத்தவரை ஆங்கிலமோ, தமிழோ, மலையாள மொழியைத் தவிர வேறு எந்த மொழியானாலும் அது எவ்வளவு பெரிய இலக்கியங்களைக் கொண்டதானாலும் அது தொட்டியில் ஊற்றிய தண்ணீர்தான். ஆனால் எனது தாய்மொழி ஊற்றெடுக்கும் நீர் ஊற்றாகும்' என்று சொன்னாராம்.


அதற்கு இவர், "எனக்கும் தாய்மொழி மலையாளம்தான். ஆனால் எனக்கு மட்டும் ஏன் தொட்டித் தண்ணீராகத் தமிழ் இல்லை, ஊற்று நீராகவே இருக்கிறது' என்று திருப்பிக் கேட்டார்.


அவர் பளிச்செனப் பதில் சொன்னார் "நீங்கள் முதல் முதல் படித்ததோ எழுதியதோ, உங்களைச் சுற்றிப் பேசப்பட்டதோ எல்லாமே தமிழ்தானே!'


தனது தாய்மொழி மலையாளமே என்கிற தெளிவான உணர்வோடு எம்.ஜி.ஆர். இருந்தார். இவரது தாய்ப்பாசம் உண்மை என்றால் இவரது தாய்மொழி மலையாளம் என்பதும் உண்மைதானே.


சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் நம்பூதிரிகளின் ராஜ்யம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. அவர்களைக் கேட்பார் யாரும் இல்லை. ஒரு நாள் இரிஞ்ஞாலக் குடாவில் ஒரு நம்பூதிரி குளத்தில் குளித்துவிட்டு வீட்டுக்கு நிர்வாணமாகவே வந்துகொண்டிருக்கிறார். 


பஞ்சகச்சம் வைத்த வேட்டிதான் இடுப்பில் இருந்திருக்கிறது. ஆனாலும் இடுப்புக்குக் கீழே தொங்க வேண்டிய வேட்டி தோளில் கிடந்திருக்கிறது. இது எதற்கு என்றால் எதிரே யாரும் நாயர் பெண் வந்தால் அவளை நிறுத்தி வைத்து ஏதாவது பேசிவிட்டுத்தான் அனுப்புவார்களாம். அப்படி ஒரு கொழுப்பு பிடித்த நம்பூதிரி ஒரு நாயர் பெண்ணை வலுக்கட்டாயமாக நிறுத்தி வைத்து வம்பளந்து கொண்டிருந்தபோது கோபாலமேனன் அதைப் பார்த்து பிரம்பால் நம்பூதிரியின் புட்டத்தில் அடித்து வெளுவெளு என்று வெளுத்து வாங்கியிருக்கிறார்’’ என்பார் சாரு நிவேதிதா. (தீராக் காதலி, ப.124)
(இதே தார்மீக கோபம்தான் எம்.ஜி.ஆர். 


படங்களிலும் சவுக்கடிகளைக் காணமுடியும்) அதனால்தான் மேனனைப் பிடிக்காமல் ஊர் ஊராக மாற்றியிருக்கிறார்கள்.


எம்.ஜி.ஆர். எப்போதும் தாயோடு இருந்திருக்கிறார்; ஆனால் தந்தையாரோ அவரோடு இருந்திருக்கிறார்.


“நான் உங்கள் வீட்டுப்பிள்ளை
இது ஊரறிந்த உண்மை (புதிய பூமி)


என்று இவர் தன்னைப் பிரகடனப்படுத்தினார். தமிழ் மக்களும் அவரை ‘எங்க வீட்டுப்பிள்ளை’தான் என்று ஏற்றுக்கொண்டார்கள். பெற்றால்தானே பிள்ளை. தான் தமிழகத்து தத்துபிள்ளைதான் என்பதை அவரும் உணர்ந்து கொண்டார். மக்கள் இதனை உணர்ந்து கொள்ளக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். தனது படங்களில் தொடர்ந்து தமிழின் புகழைப் பாடினார், பாடவைத்தார்.


“செந்தமிழே வணக்கம் ஆதி
திராவிடர் வாழ்வினைச் சீரொடு விளக்கும்
செந்தமிழே வணக்கம்’’


என்றொரு முத்துக்கூத்தனின் பாடலைச் சேர்த்துக் கொண்டார். இது அவரது சொந்தப் படம். டி.எம். சௌந்திர ராஜனுக்குப்பதிலாக சீர்காழி பாடினால் இன்னும் நன்றாய் இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. அதுதான் ‘டைட்டில் சாங். சீர்காழி கோவிந்தராஜன் ஊரில் இல்லை என்பதால் அமைதியானார். (செ.திவானின் ‘நாடோடி மன்னன்,’ ப.12). அதே படத்தில் ஒரு மலையாளப் பாடலையும் திராவிடப் பாடல் என்ற பெயரில் திணித்திருந்தார்.  அதனைப் பாஸ்கரன் எழுத சாந்தா நாயர் பாடியிருந்தார். மறக்க முடியுமா?


வாரணவாசி பாளையதிபதி துளசி மகாராஜாவிற்கு ஒரு மகன் பிறக்கிறான். மாலை சுற்றிப் பிறந்திருப்பதால் மன்னர் பரம்பரைக்கு ஆகாது என்று தொட்டியத்துக் காட்டில் அப்பிள்ளையைப் போட்டுவிட, காவிரிக்கரையில் வாழ்ந்த சின்னானும் செல்லியும்  அதனை எடுத்து வளர்க்கிறார்கள். இவனே வளர்ந்து மதுரை வீரனாகிறான் என்பது சினிமா கதை. வீரன் சக்கிலிய குடியில் பிறந்து மதுரை வீரன் ஆனான் என்ற நாடோடிக்கதையை மாற்றி சாதிப்பெருமையைத் தக்க வைத்த முயற்சி இது. துளசி மகாராஜாவும் தெலுங்கு அரசன்தான். அப்பிள்ளையை வாழ்த்தி  எம்.எஸ். வசந்தகுமாரி,


“செந்தமிழா எழுந்து வாராயோ - உன்
சிங்காரத் தாய்மொழியைப் பேசாயோ
சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
செல்வமிதே அமுதே தமிழே’’


என்று பாடுவது முரண்நகைதான். இவற்றைச் சாதி சதி, மொழி சதி என்று சொல்லலாமா?


‘கலங்கரை விளக்கம்’ படத்தில் பாரதிதாசனின் பாடலான ‘சங்கே’ முழங்கும்.


“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு’’
“பொங்கும் தமிழர்க்கு இன்னல் செய்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு’’


என்று சரோஜாதேவி ஆடிப்பாடும் போது ‘கன்னடத்துப் பைங்கிளியின் பாடலும் நகை முரணாகவே பட்டது. 


அதுவும் இன்று கன்னடர்கள் தமிழர்க்குத் தொடர்ந்து காவிரி விவகாரத்தில் இன்னல் செய்து கொண்டிருக்கும் போது. இப்பாடலை எம்.ஜிஆர். பார்வையாளராக ரசிக்கலாம் - பங்காளிகளாகப் பாதிக்கப்பட்ட நாம்?


“எம்.ஜி.ஆர் மலையாள மொழி பேசுகிறார். கேரள நாயர் வகுப்பைச் சேர்ந்தவர். இருப்பினும் கேரள மண்ணில் அவர் ஓர் உன்னத நிகழ்ச்சியாக வளர்ந்திருக்க முடியாது. தமிழ் மண்ணில்தான் இது சாத்தியமாகியுள்ளது. ராமுகாரியத்தும் ஷீலாவும் தங்கள் சினிமாப் புகழை முதலீடாகக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்ய முற்பட்டபோது, முதல் கூட்டத்திலேயே அவர்களுக்கு எதிரான கூச்சல் எழுந்தது. "நீங்கள் சினிமாவில் நடிக்கும் வேலையைச் செய்யுங்கள் உங்களிடம் நாங்கள் அரசியல் கேட்க விரும்பவில்லை' எனும் குரல் அவர்களை மேடையிலிருந்து இறக்கி வீட்டுக்கு அனுப்பியது. பிரேம்நசீருக்கும் கூட இதே கதிதான் ஏற்பட்டது.


தமிழ்நாடு எத்தகைய மனிதர்களை, குணாம்சங்களை பிராபல்யத்திற்கும், புகழின் உச்சத்திற்கும் உயர்த்துகிறது என்ற பார்க்கும்போது கிடைக்கும் பதில் அப்படியொன்றும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை. வார்த்தைகளுக்கும் ஜாலங்களுக்கும் சுலபமாக மயங்கிவிடக்கூடிய தமிழ் மக்களின் குணம் பாராட்டக்கூடிய ஒன்றல்ல’’ என்பார் வெங்கட் சாமிநாதன் (வியப்பளிக்கும் ஆளுமைகள், ப.64).

 

ஆக, மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். கேரளம், இலங்கை, தமிழகம் என நாடோடியாக அலைந்து, தமிழ்நாட்டில் சினிமா உலகிலிருந்து அரசியலுக்கு வந்த மன்னனாகி - மன்னாதி மன்னன் ஆனாரே. இவர் மலையாளியா? தமிழரா? இரண்டுமில்லை திராவிடர்; அதுவும் ஆரியத் தொடர்பால், பாதி திராவிடர்.