சொற்களை அறிவதில் பெயர்ச் சொற்களை அறிந்தபடியே செல்வது ஒரு முறைமை. அதற்கு மாற்றாக வினைச்சொற்களை ஒவ்வொன்றாக அறிந்து செல்வது இன்னொரு முறைமை என்று கூறினேன். வினைச்சொற்களை அறிவதற்கும் பல்வேறு முறைமைகள் இருக்கின்றன. பேச்சுத் தமிழை ஊன்றி நோக்குவது நல்ல பயன் தரும். பாமரர் பேசுகையில் செவிப்புலனைக் கூர்தீட்டிக் கேளுங்கள். அவர்கள் பேச்சுப்போக்கில் அடிக்கடி அருஞ்சொற்களை இறைத்துக்கொண்டே செல்வார்கள்.
அகராதியின் ஒரு பக்கத்தில் ஐம்பது சொற்களுக்குப் பொருள்கள் தரப்பட்டிருந்தால் அவற்றில் நாற்பது சொற்கள் பெயர்ச்சொற்களாகவே இருக்கும். நான்கைந்து சொற்கள்தாம் வினைச்சொற்களாக இருக்கும். அப்படியானால் அகராதியைப் போன்ற பெருந்தொகை நூலிலேயேகூட வினைச்சொற்களை இனங்கண்டபடியே சென்றால் ஐயாயிரம் சொற்களைத்தான் தேடிப் பிடிக்க முடியும். பல இலட்சக்கணக்கான சொற்கள் தமிழில் இருப்பதாகக் கூறித்திரிந்தவர்களாயிற்றே நாம்! இப்போது வெறும் ஐயாயிரம் வினைச்சொற்கள்தாம் பட்டியலில் வந்தடைந்தனவா? சொற்களில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களுமே பெரும்பான்மையானவை என்று கூறிவிட்டு அவற்றில் ஐயாயிரமே வினைச்சொற்கள் என்றால் ஏமாற்றமாக இராதா? பல இலட்சங்களில் ஒரு இலட்சமேனும் வினைச்சொற்களாகவே இருக்க வேண்டுமே. இருபெரும் சொற்பிரிவுகளில் வினைச்சொற்களும் ஒன்று எனில் அதுதானே சரிநிலையாக இருக்கவேண்டும்? இப்போது வருகின்ற கணக்கு சிற்சில ஆயிரங்கள் எனில் பொருந்தவில்லைதானே? இந்த முரண்பாட்டைப் பற்றி நாம் இன்னும் தெளிவாக அறியப்போகிறோம். அதன் தொடக்கப்புள்ளியை இங்கே தெரிவித்துவிடுகிறேன் - அகராதிகளில் இல்லாத எண்ணற்ற அருஞ்சொற்கள் வினைச்சொற்களாகவே இருக்கின்றன. அவை பேச்சு மொழியின் வாயிலாகவே ஒவ்வொரு வட்டாரத் தமிழிலும் இம்மண்ணின் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றன. சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் “பேச்சுத் தமிழில் எண்ணற்ற வினைச்சொற்கள் பயின்று வருகின்றன.”
பேச்சுத் தமிழை ஊன்றிக் கற்றபோதுதான் அகராதிகளில் இல்லாத எண்ணற்ற பல தமிழ்ச்சொற்களை இனங்கண்டேன். அச்சொற்கள் யாவும் மொழி இலக்கணச் செம்மையோடு விளங்கின. அவற்றில் பலவும் வினைச்சொற்கள் என்பதும் வியப்பூட்டியது. ஏனோ அகராதியைத் தொகுத்தவர்கள் அத்தகைய சொற்களைப் பட்டியலுக்குள் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள். நம்முடைய பேரகராதி முயற்சிகள் யாவும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளோடு முடிந்து நிற்கின்றன. அக்கால வரம்புக்குப் பிறகுதான் வட்டார இலக்கியத்துக்கேகூட அச்சு வாய்ப்பு ஏற்பட்டது. ஊர்ப்புறத்து மண்ணின் மணம் கமழத் தொடங்கியது. கடைநிலை வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் படைப்பிலக்கியத்தின் பக்கம் வந்தனர். அவர்களுடைய எழுத்துகளில் இயற்கையாகவே வட்டாரத் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றன. கொடுந்தமிழ் என்று கருதியமையால் எழுதப்படாமல் விலக்கப்பட்ட பேச்சுத்தமிழ்த் தொடர்கள் மேற்கோள் குறிகளுக்குள் எழுதப்பட்டன. கதையில் உரையாடும் பாத்திரங்களின் மொழியாக அவை எழுதிக் காட்டப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே வட்டார வழக்குகளுக்கு எழுத்துப் பதிவுகள் தோன்றின.
எழுத்தில் ஏறவில்லை என்பதற்காக பேச்சுத்தமிழில் மட்டுமே வழங்கப்பட்ட அச்சொற்கள் அழிந்து போய்விடவில்லை. அருஞ்சொற்களைப் பேசுகின்ற பாமர மக்கள் ஒவ்வொருவரும் தமிழகராதியின் சில பக்கங்கள் என்று கருதத் தக்கவர்கள். அவருடைய பிள்ளைகளான நாம் அந்தப் பேச்சு முறையிலிருந்து வழுவாமல் நிற்க வேண்டும். வட்டாரத் தமிழைப் பேசுவதற்கு வெட்கப்படாவே கூடாது. சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்ற பெருமை நம்மிடம் தோன்றவேண்டும். வட்டாரத் தமிழில் பேசினால் நம் பேச்சு மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பது தானாகக் குறைந்துவிடும். நாம் மறந்த சொற்கள்கூட ஆழத்திலிருந்து நீர்க்குமிழிபோல் எழுந்துவரும். ஒவ்வொருவரின் இளமையை எண்ணிப் பார்க்கும்போதும் நம் தாத்தனும் பாட்டியும் கற்றுக்கொடுத்த பற்பல சொற்கள் நினைவுக்கு வரும். அந்தச் சொற்களைப் பயன்படுத்தாமல் அடையாளமற்றவர்களாக நிற்கிறோம்.
முந்தைய பகுதி:
அடுத்த பகுதி:
மாட்டேனும், மாண்டேனும் ஒன்றா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #14