தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை 2018-க்கான விருதுகளில் ’நக்கீரன்’ இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் ‘இனிய உதயம்’ இதழின் இணை ஆசிரியருமான ஆரூர் தமிழ்நாடனுக்கு ‘புரட்சிகவிஞர் பாரதிதாசன் நினைவு விருது’ வழங்கி சிறப்பித்திருக்கிறது. மேலும் பல்வேறு படைப்பாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடனை வாழ்த்தி இயக்குநர் பிருந்தாசாரதி வெளியிட்ட வாழ்த்துசெய்தி இது;
பாரதிதாசன் விருது பெறும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களுக்கு வாழ்த்து. கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களை வாழ்க்கையில் மிகத் தாமதமாகவே சந்தித்தேன். கவிஞர் ஜெயபாஸ்கரன் மூலம் அறிமுகமானார். இரண்டு மூன்று வருடப் பழக்கம்தான். ஆனால் இரண்டு மூன்று ஜென்மகளுக்கான அன்பைப் பொழிந்துவிட்டார். நாள்தோறும் முகநூலில் அவர் எழுதிவரும் கவிதைகளை வாசித்துவருகிறேன். அற்புதமான கற்பனைகள், வளமான சொல்லாட்சி, திட்டவட்டமான திராவிட இயக்கச் சித்தாந்த அணுகுமுறை என அவற்றில் தன் முத்திரையைப் பதித்து வருகிறார். மரபுக் கவிதைகளைப் படித்துவிட்டு இவர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர் எனக் கருதிக் கொண்டிருக்கும்போது தத்துவ ஆலாபனை செய்யும் புதுக்கவிதைகளால் கவிக்கோவின் வழித்தோன்றலோ என எண்ணவைப்பார்.
சங்க காலம் முதல் புதுக்கவிதைக் காலம் வரை தமிழ்க் கவிதைகளின் பரவலாக அறியப்பட்ட பகுதிகளை மட்டுமல்ல அதன் மூலைமுடுக்கெல்லாம் அறிந்தவர். ஆனால் அந்தக் கல்வியின் செருக்கு சிறிதும் இல்லாதவர். வளரும் எழுத்தாளர்களுக்குத் தேடிச் சென்று உதவுபவர். திறமைகளைத் தேடி ஊக்குவிக்கும் அவரது இந்தப் பண்புக்கு இனிய உதயத்தின் பக்கங்கள் சாட்சி சொல்லும். கவிதையின் சாயலின்றி உரைநடை எழுதுவார். கதை, கட்டுரை என வெளுத்து வாங்கும் இவருக்கு நேரம் எங்கிருந்து கிடைக்கிறது எனப் பல சமயங்களில் வியந்திருக்கிறேன். எந்தத் தலைப்பிலும் நொடியில் பேசவும் எழுதவும் முடியும் இவரால். நலம் விசாரிக்க அலைபேசியில் அழைக்கும்போது நேரம்போவதறியாமல் உரையாடிக்கொண்டிருப்பேன் அவரோடு. இந்தப் பிறந்த நாளில் அவரிடம் எனக்கொரு கோரிக்கையுண்டு. எழுதிய கவிதைகளைத் தொகுத்து இவ்வாண்டில் நூல்கள் வெளியிடவேண்டும்.
மரபு ஒன்று, குறுங்கவிதை ஒன்று, நெடுங்கவிதை ஒன்று, காலநதி என்ற தலைப்பில் அவர் எழுதிய (தத்துவ) வசன கவிதை ஒன்று , இன்னும் எனக்குத் தெரியாமல் அவரிடம் பதுக்கிக் கிடக்கும் புதையல்கள் அனைத்தும் நூலாக்கம் பெறவேண்டும்." என்று கடந்த ஆண்டு அவரது பிறந்த நாளில் அவரை வாழ்த்திப் பதிவிட்டிருந்தேன். இவ்வாண்டுப் புத்தகக் கண்காட்சியில் அவரது 'காலநதி' கட்டுரைகள் மற்றும் 'காற்றின் புழுக்கம் ' என்ற மரபுக் கவிதைத் தொகுதி வெளிவந்துவிட்டன. சூரியனைப் பாடுகிறேன்' என்ற கலைஞர் வெண்பா நூலும் மறுபதிப்பு வந்துள்ளது. என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. (மற்ற நூல்களும் விரைவில் வரவேண்டும்.)
இன்று தேனியில் அவருக்கு 'தமிழ் நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடை' அமைப்பு, பாரதிதாசன் விருது தருகிறது. ஏற்கெனவே தமிழக அரசால் பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டில் பரிசு பெற்றவர்தான் ஆரூர் தமிழ்நாடன். பல்வேறு பரிசுகளைப் பெற்றிருந்தாலும் இன்று மீண்டும் பாரதிதாசன் பெயரில் ஒரு விருது பெறும் அவரை மனதார வாழ்த்துகிறேன். நான் மிகவும் ரசிக்கும் அவரது அற்புதமான கவிதை ஒன்று:
காலத்தை அளப்பேன்:
*
என்னூர் என்பது உலகப் பெருவெளி
என்னுற வென்பது மானுடக் கூட்டம்
என்மகிழ் வென்பது உலகின் மகிழ்வு
என்துய ரென்பது பிறர்படும் துயரம்
*
என்கன வென்பது பசியறு உலகம்
என்சுக மென்பது சூதறு மனிதம்
என்னிசை என்பது இயற்கையின் பாடல்
எந்தவ மென்பது வியர்வையின் வெகுமதி
*
இரவும் பகலும் என்னிரு கைகள்
வரவும் செலவும் வாழ்வின் சுவாசம்
சிறகுகள் இருப்பது சிகரங்கள் அளக்க
உறவுகள் இருப்பது உயிர்வரை சேர்க்க
*
பறவைகள் இசைக்குப் பாடல்கள் புனைவேன்
கறையிலாப் பொழுதால் காலத்தை அளப்பேன்
உறக்கத்தில் கூட உயிர்ப்பாய் இமைப்பேன்
திறவாத் திசையிலும் பூக்கள் வளர்ப்பேன்.
*
ஆரூர் தமிழ்நாடன்
பாரதிதாசன் விருதுக்குப் பொருத்தமானவர் ஆரூர் தமிழ்நாடன் என்பது தெரிகிறதா?