‘சென்னை அண்மையில் இப்படியொரு இலக்கிய விழாவைப் பார்த்ததில்லை’ என்று சொல்லும் அளவிற்கு, அமெரிக்க வாழ் தமிழ்ப்படைப்பாளர் தாழை. இரா.உதயநேசனின் முன்னெடுப்பில் ஏழு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் அரங்கேறியது.
அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையும், கலை உதயம் பதிப்பகமும் இணைந்து நடத்திய இந்த விழாவில், வெளியிடப்பட்ட தமிழே விதையாய், செவத்த இலை, கலைக்கப்பட்ட கனவுகள், மர்மங்களின் மறுபக்கம், தொடுவானம் ஆகிய நூல்கள் உதய நேசனின் படைப்புக்களாகும். இவற்றோடு கவிச்சுடர் கல்யாணசுந்தரம் எழுதிய ’பூக்கள் பூக்கும் தருணம்’, பைந்தமிழ்ப் பாவலர் சரஸ்வதி பாஸ்கரன் எழுதிய ‘ஊஞ்சலாடும் உறவுகள்’ ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.
சரஸ்வதி பாஸ்கரன், இணைய வழியாகவும் தமிழ் அமெரிக்காத் தொலைக்காட்சி வழியாகவும் அயலகத் தமிழர்களுக்கு மரபுக் கவிதை பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முனைவர் செந்தில்குமார் வரவேற்புரையாற்ற, நிகழ்ச்சியை முனைவர் சம்பத்குமார் சிறப்புறத் தொகுத்து வழங்கினார். மழலை இலக்கியச் செம்மல் கன்னிக்கோயில் ராஜா, படைப்பாளர்களை அறிமுகப்படுத்தி, நகைச்சுவை ததும்ப உரையற்றி சபையைக் கலகலப்பாக்கினார்.
கவிஞர்கள் அமுதா தமிழ்நாடன், வட சென்னைத் தமிழ்சங்கம் இளங்கோவன், ஷக்தி, முனைவர் சம்பத், லதா சரவணன், சிவமணி, சாம்பவி சங்கர், நீலகண்டத் தமிழன், முனைவர் பேச்சியம்மாள், கனகா பாலன், அன்புச்செல்வி சுப்புராஜ், வெ.பாஸ்கர் ஆகியோர் நூலை வெளியிட்டும், நூலின் படிகளைப் பெற்றுக்கொண்டும் வாழ்த்துரை ஆற்றினர்.
முனைவர் ஆதிரா முல்லை, சின்னத்திரை ரேகா, முனைவர் மணிமேகலை சித்தார்த்தன், கவிஞர் இரா.எபினேசர், கவிஞர் மு.ஞா.செ.இன்பா, எழுத்தாளர் ஜெயக்குமார் சுந்தரம் உள்ளிட்டோர் பாராட்டுரை வழங்கினர். கவிச்சுடர் கல்யாணசுந்தரமும், சாரா பாஸ்கரனும் ஏற்புரை நிகழ்த்தினர்.
இணைய வழியில் வாழ்த்துப் பேருரை நிகழ்த்திய மகாகவி ஈரோடு தமிழன்பன் “ஏழு பண் கொண்ட இசைபோல இந்த விழாவில் ஏழு நூல்கள் வெளியிடப்படுவது சிறப்பு. அதிலும் படைப்புத்திறன் மிக்கவர்களின் நூல்கள் இங்கே வெளியிடப்படுவதில் மகிழ்ச்சி. அமெரிக்க வாழ் அன்பர் உதயநேசன், இந்த விழாவின் நாயகராக இருந்து, இந்த விழாவை நடத்துகிறார். குடியாத்தத்தில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய உதயநேசன், இங்கிருந்து தமிழ்ப்பண்பாடு என்ற மரத்தையும் எடுத்துச் சென்று அங்கே ஊன்றியிருக்கிறார். அவரது 5 படைப்புகளில், ’கலைக்கப்பட்ட கனவுகள்’ என்ற தொகுப்பில் உள்ள கதைகளைப் படித்துப் பூரித்தேன். அதில் அவர் எழுதிய முதல்கதையே ஆணவக்கொலை பற்றியதாகும். சாதித் திமிரால் நடத்தப்படும் கொலைகளை விமர்சித்து, அவர் எழுதிய கதை சரியான நெற்றியடி. இது போன்ற சாதித்துவ அவல நிலை இங்கே பெருகுவதைத் தடுக்க, சமூகச் சிந்தனையாளர்கள் சரியான விதைப்பைச் செய்ய வேண்டும். சாதித் திமிருக்கு எதிரான போரில் நாம் எல்லோரும் அணிவகுக்க வேண்டும். பெண்ணியத்தையும் தனது படைப்புகளில் உதயநேசன் போற்றுகிறார். கதை எழுதுவது வேறு. கதை சொல்வது வேறு, கதை விடுவது வேறு. உதயநேசன் ஆழ்ந்த சிந்தனைகளைக் கதைகளாக எழுதுகிறார். அதற்காகவே அவரைப் பாராட்டுகிறேன்.
பத்து மலையை பார்த்தவன் மலையாக முடியாது. பத்து நதியைப் பார்த்தவன் நதியாக முடியாது. பத்து வனத்தைப் பார்த்தவன் வனமாக முடியாது. பத்து கடலைப் பார்த்தவன் கடலாக முடியாது. ஆனால் பத்து நூல்களைப் படித்தவன் பதினோராவது நூலாக ஆகிவிடுவான். அதுதான் நூல்களின் சிறப்பு. அதனால் நூல்களைப் படியுங்கள். அவை உங்கள் வாழ்வை உயர்த்தும்” என்றார் உற்சாகமாக. அவரது இணையப் பேச்சை, அவையே அமைதியாகக் கேட்டுவிட்டு, முடிவில் ஆரவாரித்தது.
நிறைவாகத் தனது அன்புரையை வழங்கிய தாழை.இரா. உதயநேசன் “தமிழால் கூடியிருக்கும் உங்களை எல்லாம் அன்போடு வணங்குகிறேன். நாமெல்லாம் தமிழால் உறவாகி இருக்கிறோம். ஒரு குடிசை வீட்டில் இருந்து என் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினேன். வறுமையோடு போராடினாலும் படித்தேன். படிப்பு படிப்பு என்று நான் அதைப் பிடித்துக்கொண்டதால், அது என்னைக் கைவிடவில்லை. இன்று இந்த நிலையை நான் படிப்பால்தான் அடைந்திருக்கிறேன். நான் சந்தித்த வறுமைத் துயரத்தை என் கிராம மக்கள் சந்திக்கக் கூடாது என்றுதான், என்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது இலக்கியத்திலும் என்னால் ஆன பங்களிப்பைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன். அதற்காகத்தான் கலை உதயம் பதிப்பகத்தையும் ஆரம்பித்திருக்கிறேன். இப்போது வெளிவட்டம் முடிந்திருக்கிறது. அடுத்து உள்வட்டம். என் பணி தொடரும். தமிழுக்காக என்னால் ஆனதைச் செய்வேன்” என்றார் நெகிழ்ச்சியாக. கடைசிவரை அரங்கம் நிறைந்து வழிந்தது. தமிழ் மழை, அனைவரையும் இனிதாய் நனைத்தது.