தமிழகத்தின் முதல் பெண் தலித் அமைச்சர் இவர், இந்தியாவில் முதல்முறையாக அம்பேத்கர் பெயரில் தமிழகத்தில் கல்லூரி அமைய காரணமானவர், தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவுக்காக நீண்டகாலம் போராடிய திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்களில் முக்கியமானவர் சத்தியாவணிமுத்து.
சென்னை பெரம்பூரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் 1923 பிப்ரவரி 15ந்தேதி பிறந்தவர் சத்தியவாணி முத்து. எழும்பூர் அரசு உயர்நிலைப்பள்ளில் 10 ஆம் வகுப்பு வரை படித்தார். அதன்பின் ஹோமியோபதி மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து மருத்துவரானார். அம்பேத்கார் நடத்திய, அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு என்கிற அமைப்பில் தான் சத்தியவாணிமுத்து செயல்பட்டார். பகுத்தறிவு இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அதனாலயே 1949ல் திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது, கழகத்தின் பெண் தலைவர்களில் முன்னோடியாக சென்னையில் கோலோச்சியவர் சத்தியவாணிமுத்து.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொண்டு, பெண்களை திரட்டி போராட்ட களத்தில் தீவிரமாக குரல் கொடுத்தவர் சத்தியவாணி. 1953ல் குலக்கல்வி திட்டத்தை அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரி கொண்டு வந்தபோது அதனை திமுக எதிர்த்தது. அப்போது நடைபெற்ற போராட்டத்தில் கைதாகி சிறை சென்றவர் சத்தியவாணி. திமுகவில் 10 ஆண்டுகள் கொள்கை விளக்க அணி செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.
சென்னை பெரம்பூர் தொகுதியில் மூன்று முறை நின்று சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர். திமுக அமைத்த முதல் அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோர் நலத்துறை மற்றும் தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார் சத்தியவாணி முத்து. கலைஞர் அமைச்சரவையிலும் இருந்தார். திமுக அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளான இரா.நெடுஞ்செழியன், கே.ராஜாராம், பா.உ.சண்முகம், மாதவன், சத்தியவாணிமுத்து அமைச்சரவை மற்றும் கட்சியில் இருந்து பிரிந்தனர். சத்தியவாணி முத்து தவிர மற்றவர்கள் இணைந்து மக்கள் திராவிட முன்னேற்ற கழகம் என்கிற கட்சியை தொடங்கினர். 1974ல் தனிக்கட்சி துவங்கிய சத்தியவாணி முத்து, தாழ்த்தப்பட்டோர்கள் முன்னேற்ற கழகம் என அதற்கு பெயர் வைத்தார்.
1957ல் சுயேட்சையாக நின்று வெற்றி பெறும் அளவுக்கு இரட்டை வேட்பாளர் தொகுதியான பெரம்பூர் தொகுதியில் அவருக்கு செல்வாக்குயிருந்தது. அதே தொகுதியில் அடுத்து இரண்டுமுறை வெற்றி பெற்றுயிருந்தார். அந்த தெம்பிலேயே அவர் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியை தொடங்கி நடத்தினார். 1977 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அதிமுக வேட்பாளராக எம்.ஜி.ராமச்சந்திரனால் உளுந்தூர்பேட்டை தொகுதியில் நிறுத்தப்பட்டார் சத்தியவாணி முத்து, அங்கு தோல்வியை சந்தித்தார். அதிமுக வெற்றி பெற்று எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வரானதும், தனது கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் உறுப்பினரானார்.
சத்தியவாணிமுத்துவின் திறமை மற்றும் தாழ்த்தப்பட்டோர்களை தன் பக்கம் இழுக்க சத்தியவாணியை 1978ல் மாநிலங்களை உறுப்பினராக்கி டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் சத்தியவாணிமுத்து. காங்கிரஸ் அல்லாத ஒருவர் தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரானது இதுதான் முதல் முறை. சத்தியவாணி முத்து தான் அந்த சாதனையை செய்தார்.
மீண்டும் மாநில அரசியலுக்கு வரவிரும்பி 1984ல் பெரம்பலூர் தொகுதியில் நிறுத்தப்பட்டார் அங்கும் தோற்றுப்போனார். அவரது அரசியல் வாழ்வு அதோடு முடிந்துப்போனது. அவரது வாரிசுகள் தற்போது திமுகவில் உள்ளனர்.
சத்தியவாணியும் அவரது கணவர் முத்துவும் பகுத்தறிவு கொள்கையில் ஊறியவர்கள். இந்த தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் ஆவர். பெரியாருடன் நெருக்கமாக இருந்தனர். தமிழகத்தின் முதல் பெண் தலித் அமைச்சர் என்கிற வரலாற்றில் இடம்பெற்ற சத்தியவாணி முத்து அன்னை என்கிற இதழ் நடத்தினார். அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். எரிக்கப்பட்டாள் என்கிற நூலை எழுதியுள்ளார். வேறு சில நூல்களும் எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்ட மக்கள் மேம்பாடு அடைய தானும் பணியாற்றிக்கொண்டும், பேசிக்கொண்டும், செயல்பாட்டாளர்களை ஊக்குவித்துக்கொண்டும் இருந்தார்.
இந்தியாவில் அம்பேத்கார் பெயரில் முதல் முதலில் கல்லூரி தொடங்கப்பட்டது தமிழகத்தில் தான். அதுவும் அமைச்சராக சத்தியவாணிமுத்து அமைச்சராக இருந்தபோது, அரசிடம் கோரிக்கை வைத்து பெற்று அதனை தனது பெரம்பலூர் பகுதியில் திறந்தார். 1999 நவம்பர் 11ந்தேதி மறைந்தார். இவரது பெயரில் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது தமிழகரசு.
- ராஜ்ப்ரியன்
Published on 15/02/2018 | Edited on 16/02/2018