டி.ஆர். பரிமளரங்கன்
குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு உபதேசித்தது பகவத் கீதை. கீதை பிறந்தது மார்கழி மாதம், வளர்பிறை பதினோறாம் நாள் என்று புராண வரலாறு கூறுகிறது. வடநாட்டில் ஒவ்வொரு வருடமும் இந்த நாளை கீதா ஜெயந்தி என்று மிகச்சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மார்கழி மாத சுக்ல பட்ச ஏகாதசியை "மோட்ச ஏகாதசி' என்றும் போற்றுவர். அதாவது கீதை பிறந்தது வைகுண்ட ஏகாதசி நாளில்!
குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் முதல்நாள் கௌரவர் படைகளைப் பார்த்ததும் அர்ஜுனனுக்கு குழப்பம் ஏற்பட்டது. "நமது உற்றார்- உறவினர், குரு ஆகியோருடன் போரிட்டு, அவர்களைக்கொன்று, இழந்த ராஜ்ஜியத்தைப் பெறுவது அவசியம்தானா?' என்று சிந்தித்தான்; மனம் வருந்தினான்.காண்டீவத்தைக் கீழே வைத்தவன் தேரோட்டியான கிருஷ்ணரின் முகத்தைப் பார்த்தான். அர்ஜுனன் மனதில் உள்ளதை அறிந்த பகவான், அவனுக்கு உபதேசம் செய்தார். அதுவே "பகவத் கீதை' என்று போற்றப்படுகிறது. மேலும், அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டியும் அருளினார். பகவத் கீதையானது "18' அத்தியாயங்களில் "701' சுலோகங்களாக அமைந்துள்ளது. இவற்றில் மானிடர்கள் அமைதியாக வாழ, கடைப்பிடிக்கவேண்டிய கர்மம் மற்றும் தர்மம் ஆகியவற்றை பகவான் அருளியுள்ளார்.
"பகவத்' என்றால் இறைவன்; "கீதா' என்றால் நல்லுபதேசம். இதற்கு இன்னொரு பொருள் சொல்வதும் உண்டு. "கீதா' என்ற சொல்லை வேகமாகச் சொல்லிலிக்கொண்டே வந்தால் "தாகீ' என்று மாறும். "தாகீ' என்றால் "தியாகம்' என்று பொருள். வாழ்வில் வரும் சுகதுக்கங்களையும், இன்பதுன்பங்களையும் பகவானிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்பது இதன் தத்துவமாகும். "துறவு கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் விட்டு விடுங்கள்' என்பதும் "கீதா'விற்குரிய ஆழமான பொருளாகும்.
அர்ஜுனன் தன் உற்றார், குருமீது அம் பெய்யத் தயங்கியபோது, "தர்மத்தைக் காக்க அவர் களை அழிப்பதில் தவறில்லை. அதற்குரிய பலன்கள் என்னையே சேரும்' என்று கிருஷ்ணர் அருளினார். எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்துவிடவேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவேதான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாகப் போற்றப்படுகிறது. பகவான் அர்ஜுனனுக்கு உபதேசித்தபின், எந்த பிரதிபலனையும் பற்றிக் கருதாமல் தன் கடமையைச் செய்தான். எதிர்திசையிலிருக்கும் கௌரவர்கள்மீது சரமாறி அம்புகள் எய்தான். கௌரவர்கள் வீழ்ந்தார்கள். "பகவத் கீதை' பிறந்த குருக்ஷேத்திரப் போர்க்களமான அந்தத் திருத்தலம் டில்லிக்கு வடக்கே சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் ஹரியானா மாநிலத்தில் உள்ளது. குருக்ஷேத்திரா ரயில் நிலையத்திலிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம்.குருக்ஷேத்திரம் தலத்தில் அமைந்துள்ள பிரம்மசரோவர் எனும் தீர்த்தக்குளம் சுமார் 3,600 அடி நீளம், 1,200 அடி அகலம், 15 அடி ஆழம் கொண்டது. இந்த குளத்தின் நடுவே, மிக அழகான ஸ்ரீசர்வேஸ்வர மகாதேவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தக்குளத்தில் ஒரே சமயத்தில் ஐந்து லட்சம்பேர் புண்ணிய நீராட முடியுமாம்.
பிரம்மசரோவரின் எதிர்புறத்தில் ஸ்ரீஜெயராம் வித்யாபீடம் அமைந்துள்ளது. இது 1973-ல் நிர்மாணிக்கப்பட்டது என்று கூறப் படுகிறது. இதனுள் அழகிய பீடத்தில் சதுர்வேதங்களும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. மேலும் இங்கு ஸ்ரீஜெயராம் வித்யா பீடத்தின் முன்னே உள்ள பீஷ்மரின் அம்புப் படுக்கை வணங்கக் கூடிய ஒன்று. பகவான், வேதியராக வந்து கர்ணனிடம் யாசகம் பெறும் திருவுருவங்க ளும் உள்ளன. பஞ்சமுக ஆஞ்சனேயர், சரஸ்வதி, விநாயகர் ஆகிய திருவுருவங் களையும் ஜெயராம் வித்யா பீடத்தில் தரிசிக்கலாம்.குருக்ஷேத்திரத்தில் ஒரு பெரிய ஆலமரம் உள்ளது. அந்த மரத்தடியில்தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. இந்த ஆலமரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது. இங்கு கிருஷ்ணரின் கீதோபதேசக் காட்சியும் உள்ளது. மேலும், ஆலமரத்தடியில் கிருஷ்ணரின் திருப்பாதச் சிற்பமும் உள்ளது.
இந்த பெரிய ஆலமரம் தவிர, மேலும் ஐந்து ஆலமரங்கள் உள்ளன. இவை பஞ்ச பாண்டவர்களால் நடப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. மேலும், பிதாமகர் பீஷ்மருக்கும் இங்கே கோவில் உள்ளது. அங்கே அம்புப்படுக்கையில் பீஷ்மர் சிற்பம் உள்ளது. சுற்றிலும் பாண்டவர்கள் நிற்கிறார்கள். அந்த இடத்தில் பக்தர்கள் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்கிறார்கள்.குருக்ஷேத்திரம் திருத்தலம் மார்கழி மாதத்தில் விழாக்கோலம் காண்கிறது. யுத்தம் நடந்த இந்த இடத்தில் வீழ்த்தப்பட்ட வீரர்கள் அனைவரும் வைகுண்டம் சென்றார் கள் என்று புராணம் கூறுகிறது. வைகுண்டம் செல்ல வழிகாட்டிய குருக்ஷேத்திர பூமியில் மார்கழி ஏகாதசியன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகை தந்து அந்தப் புண்ணிய பூமியை வணங்குகிறார்கள். அத்திருத்தலத் தின் மண்ணைப் பிரசாதமாகத் தங்கள் ஊருக்கு எடுத்துச் செல்கிறார்கள். இங்குள்ள சன்னீகட் சரோவர் மற்றும் பிரம்மசரோவர் தீர்த்தத்தில் நீராடி, குருக்ஷேத்திரக் கோவிலுக்குச் செல்கிறார்கள். அன்று விரதம் மேற் கொண்டு, அங்கு நடைபெறும் பூஜையிலும் பஜனையிலும் கலந்துகொள்கிறார்கள்.