கோடைக்கால இறுதி மாதமான ஆனி மாதத்தில் சில தமிழகக் கோவில்களில் பழங்களால் பூஜைகள் நடைபெறுகின்றன. திருச்சி உறையூர் திருத்தலத்தில் மேற்கூரையில்லாமல் திறந்தவெளியில் கோவில் கொண்டுள்ள வெக்காளியம்மனுக்கு ஆனி மாதப் பௌர்ணமியன்று மாம்பழங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும். கூடைகூடையாக மாம்பழங்களை அபிஷேகித்து, பூஜைகள் முடிந்ததும் . அதனை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலிலும் ஆனிப் பௌர்ணமியன்று பக்தர்கள் வாழைப்பழத்தாரினை மட்டுவார் குழலம்மைக்கு சமர்ப்பித்து, தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக வாழவேண்டுமென்று பிரார்த்தனை செய்வார்கள். வழிபாடுகள் நிறைவடைந்ததும் வாழைப்பழங்களை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவர்.
ஆனி மாதப் பௌர்ணமியன்று காரைக்காலில் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித்திருவிழா நான்கு நாட்கள் நடைபெறும். பௌர்ணமியன்று இறைவனும் இறைவியும் வீதியுலா வரும்போது, பக்தர்கள் வீட்டின் மேல்பகுதியில் நின்றுகொண்டு கூடைகூடையாக மாம்பழங்களை அபிஷேகிப்பார்கள். (அதாவது மேலிருந்து இறைவன், இறைவிமீது கொட்டுவார்கள்.)
ஆனி உத்திரத்தன்று சிவாலயங்களில் எழுந்தருளியிருக்கும் நடராஜப்பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெறும்போது, பலவித பழங்களைக் கொண்டு (ரசம் பிழிந்து) அபிஷேகம் நடைபெறுவதை தரிசிக்கலாம்.
ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். அதற்கு அடுத்த நாள் திருப்பாவாடை நிகழ்ச்சி என்ற பெயரில், சுமார் 250 படி சுத்த அன்னத்துடன் மாம்பழங்கள், வாழைப்பழங்கள், தேங்காய்த்துருவல், நெய் ஆகியவற்றை கலந்து நம்பெருமாளுக்கு சமர்ப்பிப்பார்கள். இதேபோல் தாயாருக்கும் அடுத்த வெள்ளிக்கிழமையில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றதும், அதற்கு அடுத்த நாள் திருப்பாவாடை வைபவம் பெரிய அளவில் நடைபெறும்.
பழனி திருத்தலத்தில் ஆனி மாத விசாக நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். அப்பொழுது, பலவிதமான பழங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழச்சாறு அபிஷேகம் நடைபெறும். இது மிகச் சிறப்பானது. இதனை பிரசாதமாகவும் வழங்குவர். மேலும், ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று மலையடிவாரத்தில் உள்ள முருகன் கோவிலில் அன்னாபிஷேக வைபவம் நடைபெறும்.