வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் சிரசு திருவிழா நேற்று(16ம் தேதி) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே ஆண்டுதோறும் அம்மன் சிரசு திருவிழாவில் சிரசு ஊர்வலம் செல்லும் பொழுது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலியிடுவர். அதேபோல், ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்தும் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். குறிப்பாக அதிக அளவில் அம்மனுக்கு புடவை சாத்துவது வழக்கம்.
அதுபோல் கெங்கை அம்மன் சிரசு மீது சாத்தப்பட்ட புடவைகள் இன்று(17ம் தேதி) கோவில் வளாகத்தில் கோவில் நிர்வாகம் சார்பாக ஏலம் விடப்பட்டது. அம்மன் மீது சாத்தப்பட்ட புடவைகளை ஏலம் எடுக்க அதிக அளவில் பெண்கள் ஆர்வம் காட்டினர். குறைந்த விலை புடவைகளையும் அதிக விலை கொடுத்து பெண்கள் வாங்கினர்.
அம்மன் மீது சாத்தப்பட்ட புடவைகளை வாங்கி வீட்டில் வைத்தால் திருமண யோகம், குழந்தை பேறு மற்றும் செல்வம் செழிக்கும், நோய் நொடியின்றி நீண்ட ஆயுள் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதில் சுமார் 250 புடவைகள் ஏலம் விடப்பட்டது.