Skip to main content

பாதுகாப்புத் துறையில் புகழ்பெறுவோர் யார்?

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

பாதுகாப்புத் துறையில் பணிபுரிந்தவர் என்றால் இன்றும் மக்கள் மத்தியில் நல்ல புகழும் மரியாதையும் உண்டு. நாம் ஒவ்வொரு நாளும் நிம்மதியாக வாழ்கிறோம் என்றால் அதற்கு பாதுகாப்புத்துறையின் பங்கு மிகவும் அவசியமாகும். ஒவ்வொரு நாடும் தங்களது பாதுகாப்பிற்காக ராணுவ அமைப்பையும், காவல்துறையையும் உருவாக்கி வைத்துள்ளது. பலதரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். தீவிரவாதங்கள் தலைதூக்காமல் இருக்கவும் மக்கள் மனநிம்மதியுடன் வாழவும் பாதுகாப்புத்துறை மிகவும் முக்கியம்.
 

god



அக்காலங்களில் வீட்டிற்கு ஒருவர் அவசியம் பாதுகாப்புத் துறையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. பாதுகாப்புத் துறைக்கு ஆள்சேர்க்க வீடு வீடாகச் சென்று ஆண்பிள்ளைகளை வற்புறுத்தி சேர நிர்பந்தித்தனர். இதனால் பயந்தவர்கள் "எங்கள் வீட்டில் ஆண்பிள்ளைகளே இல்லை' என்று மறைத்தும் வைத்தனர்.ஆனால் பயத்தைத் துறந்த பலர் பாதுகாப்புத் துறையில் தாங்களாகவே முன்வந்து சேர்ந்துகொண்டனர். அப்படி சேர்ந்தவர்கள் நாட்டிற்காக உழைத்ததுடன், பிற்காலத்தில் பெரிய பெரிய துறைகளில் உயர்பதவிகளை வகிக்கும் வாய்ப்பினையும் பெற்றனர்.

காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணிபுரிவதற்கு சில கிரக அம்சங்கள் இருந்தால் மட்டுமே அந்த யோகம் உண்டாகும். நவகிரகங்கள் நம்மை வழிநடத்தினாலும், செவ்வாய் தைரியம், துணிவுக்குக் காரகனாகிறார். ஜென்ம லக்னத்தைக்கொண்டு ஒருவரது உடலமைப்பு, தைரியம், துணிவு பற்றி அறியலாம். ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி பலம்பெற்றால் தைரியம், துணிவு, தன்னம்பிக்கை யாவும் சிறப்பாக அமையும். செவ்வாய் பலம் பெற்று ஜென்ம லக்னத்தைப் பார்த்தாலும், செவ்வாயின் லக்னம், ராசியில் பிறந்திருந்து செவ்வாய் வலுவாக இருந்தாலும் தைரியம், முரட்டு சுபாவம், மூர்க்கத்தனமாக செயல்படும் குணம், தன்னம்பிக்கை, எதையும் துணிச்சலுடன் செய்யக்கூடிய ஆற்றல் உண்டாகும்.

 

god



ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டைக்கொண்டு மனம், புத்தி, யூகம், நட்புறவு, பொதுநலன் சார்ந்த பணி, எண்ணங்கள் போன்றவற்றை அறியலாம். 5-ல் அமையும் கிரகங்களின் காரகத்துவ இயல்புகளுக்கு ஏற்றவாறுதான் ஒருவருடைய செயல்பாடுகள் இருக்கும். முரட்டு சுபாவத்திற்கும், மூர்க்கத்தனத்திற்கும் காரகத்துவம் வகிக்கும் செவ்வாய் 5-ல் அமைகின்றபோது காவல்துறை, ராணுவத்தில் பணிபுரியும் அமைப்பு, அதன்மூலம் மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு உண்டாகும். செவ்வாயின் மேஷம், விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கும், மேஷம் விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகள் 10-ஆம் வீடாக அமைந்து செவ்வாய் பலம் பெற்றிருப்பவர்களுக்கும் காவல்துறை, ராணுவம் போன்றவற்றில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

ஜனன ஜாதகத்தில் 10-ஆம் வீட்டில் செவ்வாயின் ஆதிக்கம் இருப்பது மட்டுமின்றி 1, 5, 10-ஆம் பாவாதிபதிகளின் சேர்க்கை மற்றும் கூட்டு ஒரு ஜாதகத்தில் அமையப்பெற்றால் காவல்துறை, ராணுவம், ராணுவம் சார்ந்த துறைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு உண்டாகும்.