பாண்டிச்சேரியை சேர்ந்த ஜோதிடர் வாராகி சித்தர், நக்கீரனின் ஆன்மிக யூடியூப் சேனலான 'ஓம் சரவண பவ'வில் ஆன்மிகம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நரபலி என்றால் என்ன என்பது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால் காளி மீது மிளகாய் அரைத்து தடவுவது, கோவிலில் துட்டு வெட்டிப்போடுவது மாதிரியான செயலில் சிலர் ஈடுபடுகிறார்கள். இது மிகப்பெரிய தவறு. கோபத்தில் நாம் செய்யும் இத்தகைய செயல் சம்மந்தப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், பின்னாட்களில் நம்முடைய சந்ததியையும் பாதித்துவிடும். இந்த மாதிரி செய்தவர்கள் தொழில் நலிவடைதல், குழந்தை ஊனமாக பிறத்தல் எனப் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அதேபோல காளி கோவிலில் சத்தியம் செய்தால் ஏவல் நம்மை தொற்றிக்கொள்ளும். அதனால் காளி கோவிலில் சென்று சத்தியம் செய்யாதீர்கள். தாய், தந்தையை வணங்க கற்றுக்கொள்ளுங்கள். அதைச் சரியாக செய்தாலே எந்தப் பரிகாரமும் இல்லாமல் எல்லா பிரச்சனைகளும் சரியாகும்.
தேவையில்லாத பரிகாரங்களை செய்வதற்குப் பதிலாக இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். சிலர் நரபலியெல்லாம் கொடுக்கிறார்கள். நரபலி என்றால் ஆட்களை பலி கொடுப்பதல்ல. முதலில் நரபலி என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள். தலைச்சம்பிள்ளை, பத்தினி, கரு ஆகியவற்றை வைத்து கொடுப்பதுதான் நரபலி. தலைச்சம்பிள்ளை என்றால் பூசணிக்காய், பத்தினி என்றால் எலுமிச்சம் பழம், கரு என்றால் முட்டை. பூசணிக்காயை நடுவில் அறுத்து அதில் முட்டை, எலுமிச்சை, குங்குமம், மஞ்சள் வைத்து அதைத்தான் கொடுக்க வேண்டும். எந்தச் சாமியும் எனக்கு மனிதனை பலி கொடு என்று கேட்கவில்லை. அதேபோல ஆடு, கோழி பலி கொடுக்கிறீர்கள் என்றால் ஆறு பல்லு முடிந்த ஆட்டையும், ஐந்தாவது கால் நன்றாக முளைத்து நகம் நீட்டியிருக்கும் கோழியையும் கொடுங்கள். அவைதான் வாழ்ந்து முடித்தவை. அதைவிடுத்து இளம் ஆட்டையோ, கோழியையோ கொடுத்தீர்கள் என்றால் அது பெரிய பாவமாக நமக்கே திரும்பிவிடும். தயவுசெய்து நரபலியெல்லாம் கொடுக்காதீர்கள்".