நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை- கும்பகோணம் பாதையில் திருவாவடுதுறை அமைந்துள்ளது. தேவாரப் பாடல்பெற்ற ஒப்பிலாமுலையம்மை சமேத கோமுக்தீஸ்வரர் திருக்கோவில் இங்குதான் அமைந்துள்ளது. தேவார மூவரான திருஞான சம்பந்தர், "காந்தார பஞ்சமம்" ராகத்தில் 11 பாடல்களையும், திருநாவுக்கரசர் "திருநேரிசை'யில் முதலில் 10 பாடல்களையும், பிறகு 10 பாடல்களையும், சுந்தரர் "தக்கேசி' ராகத்தில் 10 பாடல்களையும் பாடியுள்ளனர். இதுதவிர மாணிக்கவாசகர் உள்ளிட்ட சைவ சமயப் பெரியவர்கள் திருவாய் மலர்ந்தருளி பதிகங்களைப் பாடியுள்ளனர்.
திருஞான சம்பந்தர் தம்முடைய தந்தையார் சிவபாதவிருதயர் நடத்திய வேள்வியின் (யாகம்) செலவுக்காக ஆயிரம் பொற்காசுகளை இறைவனிடமிருந்து இத்தலத்தில் பெற்றார். திருமூலர் இத்தலத்திலுள்ள அரசமரத்தின்கீழ் அமர்ந்து நீண்டநாட்களாகத் தவம்புரிந்தார். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்' எனக் கூறிய திருமூலரின் சமாதி இங்குதான் அமைந்துள்ளது. திருமாளிகைத்தேவர், போகர், கருவூரார், கொங்கணச் சித்தர் எனப் பல சித்தர்கள் வழிபட்ட புனிதத் தலமாக திருவாவடுதுறை அமைந் துள்ளது. இந்த தலத்திற்கு நவகோடி சித்தபுரம் எனும் மற்றொரு பெயரும் உண்டு. எனவேதான் இத்தலத்தில் நமசிவாய மூர்த்தி திருவாவடு துறை ஆதீனத்தை 14-ஆம் நூற்றாண்டில் நிறுவனார்.