Skip to main content

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி கும்பகோணத்தில் சிறப்பு பூஜை! 

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

Special puja at Kumbakonam to pray for rain in Cauvery catchment areas!

 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் வகையில், காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி, வேப்பத்தூர் காவிரி ஆற்றங்கரையிலுள்ள அகத்தியர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த வேப்பத்தூர் காவிரி ஆற்றங்கரையில், அரச மரத்தின் நிழலில் பழமையான சிவலிங்கமும், அகத்தியர் திருமேனியும் ஒருசேர அமையப்பெற்ற இயற்கை எழில் கொஞ்சும் தெய்வீகச் சூழலில், பல ஆண்டுகளாகக் கிராம மக்கள் தொடர்ந்து  வழிபாடு செய்து வருகின்றனர்.

 

காவிரியில் தண்ணீர் பற்றாக்குறையோ அல்லது வறட்சியோ ஏற்படும் சமயங்களில் இங்குள்ள சிவபெருமான், அகத்தியருக்கும் சிறப்பு வழிபாடு செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் உடனடியாக உரியப் பலன் கிடைப்பதைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

 

"ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டலம்..." என்பது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்.

 

எந்தச் சூழலிலும் குரு பக்தியையும் சிவ வழிபாட்டையும் விடுதல் கூடாது. உள்ளன்போடு ஊன்றி பக்தி செலுத்தும் போது அனைத்து நல்ல விஷயங்களும் கைகூடும். மேற்காணும் திருப்புகழ் இதற்கு எடுத்துக்காட்டு. கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து நூறு அடிக்கு குறையாமல் இருந்து, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்கி வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 57 அடியாகக் குறைந்துள்ள நிலையில், வரக்கூடிய நாட்களில் குடிநீர் தேவைக்கும்  விவசாயத்திற்கும் போதுமான அளவு தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. காவிரி வழக்கு, போராட்டம் என்பது மீண்டும் தொடர்கதை ஆகியுள்ளது.

 

கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்து மேட்டூருக்குத் தண்ணீர் வரவேண்டும் என்கின்ற பிரார்த்தனையை முன்வைத்து, இன்று 08.08.2023 செவ்வாய்க்கிழமை காலையில், வேப்பத்தூர் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சிவலிங்கத்திற்கும் அருட்திரு. அகத்திய முனிவர் மூர்த்திக்கும் காவிரி நீரைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு, திருமுறை பாராயணம் செய்யப்பட்டது.

 

இதில் கும்பகோணம், ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர், தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் கலந்து கொண்டு இந்த பிரார்த்தனையை  முன்வைத்தும் உலக நலன் வேண்டியும் சங்கல்பம் செய்து கொண்டார்கள்.

 

மனித வளம் மற்றும் சுற்றுச்சூழல் மலர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் திரு. சபாபதி அவர்கள், திரு. முருகன் அவர்கள், திரு. ராஜா அவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.