முனைவர் இரா. இராஜேஸ்வரன்
இதில் இன்பம் வரும்போது மகிழ்ச்சி யடையும் அதே மனம் துன்பம் ஏற்படும் போது, "கடவுளுக்கு கண் இல்லையா?', "எல்லாம் என் தலைவிதி', "என்ன பாவம் செய்தேனோ?' என பலவாறு புலம்புவ துண்டு. தர்மசாஸ்திர நியதிப்படி நாம் தெரிந்தும் தெரியாமலும் புண்ணியம் செய்தால் அதற்குத் தக்க பலனுண்டு. அதே போல் தெரிந்தும் தெரியாமலும் பாவம் செய்தால் அதற்கும் தக்க பலனுண்டு. கர்ம வினைக்கேற்ப பலன் நிச்சயம் உண்டு. இந்த நியதியானது அரசன்முதல் ஆண்டிவரை அனவைருக்கும் பொருந்தும்."நானிலத்தோர் தந்தாய்' (பூமியிலுள்ள எல்லாருக்கும் தந்தைபோன்று இருப்பவனே) என "திருவடிக்கட்டு' படலத்தில் இராமன் தன் தந்தையான தசரதன் (தயரதன்) பற்றி பெருமிதத்துடன் கூறியுள்ளார். அப்பேற்பட்ட தசரத மகாசக்கரவர்த்தி இளைஞனாக இருந்தபோது செய்த பாவச்செயலுக்காக பின்னாளில் அயோத்தியின் அரசனாக இருந்தபோது அந்த கர்ம வினையின் பலனை அனுபவிக்க வேண்டிய தாயிற்று. "புத்திர சோகம்' என்னும் கொடுமையை அனுபவித்து, அந்தத் துயரம் தாங்காமல் இறந்தார் என்பதை இராமாயணத்தின் அயோத்தியா காண்டம் மூலம் அறியலாம். ஆக விதியென்பது எல்லாருக்கும் பொதுவானது.
பங்குனி மாதம், நவமி திதி, புனர்வசு நட்சத்திரம்கூடிய நல்லநாளில், ஐந்து கோள்களும் உச்சநிலையில் இருக்கும் நல்ல நேரத்தில், கர்க்கடக லக்னத்தில் தசரத மகா சக்கரவர்த்திக்கும், கௌசல்யா தேவிக்கும் (கோசலை) மகனாய்ப் பிறந்தார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.அயோத்தியின் அரசனாக இருக்க வேண்டிய தருணத்தில், மரவுரி தரித்து பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இராமன் காட்டிற்குச் சென்ற ஆறாம் நாள் இரவு... துயரம் தாங்க முடியாத தசரதர் தன் மனைவி கௌசல்யையிடம் புலம்பினார். இந்த புத்திர சோகம் ஏன் தனக்கு ஏற்பட்டது என்பதை யோசித்தபோது, இளம்வயதில் தான்செய்த தவறான செயலால் ஒரு வாலிபத் தவசியின் பார்வையற்ற தந்தையின் சாபம் நினைவுக்கு வந்தது. அதை கௌசல்யையிடம் விவரித்தார்.
நான் இளைஞனாக இருந்தபோது வேட்டையாடுதில் விருப்பமுள்ளவனாக இருந்தேன். அதிலும் குறிப்பாக இரவில் மறைந்திருந்து, மிருகங்களின் சப்தம்வரும் திசையை நோக்கி கூரிய அம்பால் குறிவைத்துக் கொல்லும் "சப்ததேவனம்' என்னும் அம்பு வித்தையில் அதிகம் பயிற்சி பெற்றிருந்தேன். ஒருநாள் மிருகங்களை வேட்டையாட சரயுநதியின் கரையில் இருக்கும் காட்டிற்கு மழைக்கால இரவு நேரத்தில் சென்றேன். நீண்ட நேரம் காட்டில் காத்திருந்த போது நதியில் ஏதோ ஒரு காட்டெருமையோ, யானையோ நீர் அருந்துவது போன்ற சப்தம்கேட்டு அந்த திசையை நோக்கி குறிவைத்து அம்பைச் செலுத்தினேன். அடுத்த வினாடி "ஐயோ!' என்கிற மனித அபயக் குரல் கேட்டது. தவறான கணிப்பில் ஒரு மனிதனைக் கொன்று விட்டோமே எனப் பதறி அந்த இடத்திற்குச் சென்றேன். குறுகிய வாயையுடைய குடத்தில் நீரை எடுக்கும்போது ஏற்படும் சப்தம் எனக்கு ஒரு யானை நீரருந்தும்பொழுது ஏற்படும் சப்தமாகத் தெரிந்ததால், அறியாமல் அவசரத் தில் ஒரு வாலிப மனிதனைக் கொன்றுவிட்டேன். ஒரு பாவமும், தவறும் செய்யாத அந்த வாலிபன் பெயர் சிரவணன். (சிரவணகுமார்). தவ வாழ்க்கையுடன் பார்வையற்ற தன் வயதான பெற்றோரை, தராசு போன்று கூடையில் இருபுறம் உட்காரவைத்து தோளில் சுமந்து வருபவன் என்பதை அறிந்தேன். பெற் றோர் தாகமாக இருக்கிறது எனக் கூறியதால் தண்ணீர் எடுக்கவந்த செய்தி யைத் தெரிவித்து விட்டு, அவர்கள் தாகமாக இருப்ப தால் உடனே தண்ணீர்கொண்டு தருமாறு கூறினான். தவறான கணிப்பில் அம்பெய்ததற்கு அவனிடம் மன்னிப்புக் கேட்டேன்.
இறக்கும் தறுவாயிலும் தான் இறப்பதைப் பற்றிக்கூட கவலைப்படாமல், இனி தன் பெற்றோரை யார் பாதுகாப்பார்கள் என்பதில் அந்த வாலிப தவசிக்கு அக்கறை இருந்ததைக் கண்டேன். அவனுடைய பெற்றோரை நாள் கவனமாகப் பார்த்துக் கொள்வேன் எனச் சொல்லி அவனின் தலையைக் கண்ணீருடன் தடவிக்கொடுத்தேன்.ரத்தம் அதிகமாக வெளியேறியதால் சிறிது நேரத்தில் உயிர் பிரிந்துவிட்டது. அந்த வாலிப தவசி சொன்னதுபோல் அவனது பெற்றோர் கள் இருந்த இடத்தைக் கலக்கத்துடன் அடைந்தேன். அந்த முதியவரின் பெயர் சலபோசனன். இறைவழிபாட்டையே முக்கியப் பணியாகக்கொண்டு பல இடங் களுக்குச் சென்று வருபவர்கள். தண்ணீர் எடுக்கச்சென்ற தங்களின் மகன் நீண்டநேரமாக வரவில்லையென்கிற தவிப்பு அவர்களிடம் இருந்ததை அறியமுடிந்தது.