சூரிய வட்டப்பாதையில் 150 டிகிரிமுதல் 180 டிகிரிவரை கன்னி ராசி அமைந்துள்ளது. இந்த இடைப்பட்ட பாகையில் சூரியன் பயணிக்கும் காலம் புரட்டாசி மாதமாகும். இங்கே நிகழும் சூரியன் மற்றும் சந்திரனின் இணைவானது மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகின்றது. இந்த புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை மகாளய பட்சத்தின் இறுதி நாளாகும்.
நமது சமய, சடங்குகளிலும், வழிபாட்டு முறைகளிலும் அதி முக்கியத்துவம் வாய்ந்தது முன்னோர்களின் வழிபாடாகிய பித்ரு வழிபாடாகும். இந்த வழிபாட்டினை சில முக்கிய திதிகளிலும், நட்சத்திரங்களிலும் மேற்கொள்வது நமது மரபு.ஏனைய மாதங்களில் வரக்கூடிய அமாவாசையில் நமது மூன்று தலை முறைக்கான தர்ப்பணங்கள் மட்டுமே கொடுக்கப்படும். ஆனால் இந்த புரட்டாசி அமாவாசையானது தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோர்களுக்கு மட்டு மின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் தர்ப்பணம் கொடுக்கத் தகுதியான நாளாகக் கையாளப்படுகிறது.
புவியியல்ரீதியாக 23.5 டிகிரி சாய்கோணத்தில் தன்னைச் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றும் பூமியின் உயிர்க்காற்று இந்த 150 முதல் 180 டிகிரி வரையிலான புவிப்பரப்பை ஆக்கிரமிக்கிறது.அதேபோன்று நீள்வட்டப் பாதையில் தன் பயணத்தை மேற்கொண்டு வழிநடத்துகின்ற கிரகங்கள், இந்த புரட்டாசி மாதத்தில் சந்திரன் மற்றும் பூமி ஆகியவற்றுக்கு இடையிலான தூரங்கள் மிகவும் குறைந்து காணப்படுவதாகவும், இதன் பொருட்டு மனித மனங்களிலும், உயிரியல் சார்ந்த நிகழ்விலும், நீர்நிலை சார்ந்த வகையிலும் பல வேதியல் மாற்றங்கள் நிகழும் என்பதையும் நம் முன்னோர்கள் கணக்கிட்டு வைத்துள்ளனர்.
மேலும் இக்காலத்தில் நிகழக்கூடிய கிரக இணைவு களானது மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆன்மகாரகன் சூரியன், மனோகாரகன் சந்திரனின் அஸ்த நட்சத்திரத்திலும், மனோகாரகன் சந்திரன், ஆன்மகாரகன் சூரியனின் உத்திர நட்சத்திரத்திலும் நட்சத்திரப் பரிவர்த்தனை அடைந்து, தாய் மற்றும் தந்தைவழி முன்னோரின் கடனைத் தீர்க்கும் சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கின்றன.அதேபோன்று கேது மற்றும் புதனும் அஸ்த நட்சத்திரத்தில் பயணம் மேற்கொள்ளும் சூழலும் உருவாகும். மனம் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கவல்ல வழிபாடாக இந்த அமாவாசை வழிபாடு அமைந்திருக்கிறது.
மேலும் கேதுவுடன் இணையும் சூரிய- சந்திரர்கள் கிரகணம் என்னும் வளையத்திற்குள்ளும் சிக்குகின்ற சூழல் இந்த புரட்டாசி அமாவாசையில் நிகழ்கிறது. இது மேலும் சிறப்புவாய்ந்த ஒரு நிகழ்வாகும்.கிரகணம் என்பது கிரகங்களின் செயலிழப்புத் தன்மையைக் குறிக்கும்பொழுது, இது எப்படி சிறப்பு வாய்ந்ததென்று கூறமுடியும் என்றால், ராகு மற்றும் கேது, தாய் மற்றும் தந்தைவழி மரபணுவைக் குறிக்கும். எனவே இந்த அமாவாசை நமது தாயாதி மற்றும் தந்தைவழி பித்ருக்களின் வழிபாட்டிற்கு மிக உன்னதமான காலம் என்பதில் ஐயமில்லை.
ஒரு ஜாதகத்தில் பெண்வழி சார்ந்த தோஷங்கள் இருக்குமானால்- அதாவது சுக்கிரன் மற்றும் கேது லக்னத்திற்கு 12-ல் இருந்தாலும் அல்லது மீன ராசியில் சுக்கிரன், கேதுவின் இணைவு ஒரு ஜாதகத்தில் இடம்பெற்றிருந்தாலும், இது பெண் தோஷத்தை வலுவாக எடுத்துரைக்கும் கிரக நிலையாகும். இப்படி அமைந்துள்ள ஜாதகரின் குடும்பங்களில் பெண்களுக்கு எண்ணிலடங்கா துயரங்களும், உடல் சார்ந்த பிரச்சினைகளும், இடைஞ்சல்களும் இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. மேலும் இவர்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சினைகள் இருப்பதற்கான சூழலை பல ஜாதகங்களில் அறியமுடிகிறது.இப்படி அமைந்துள்ள நபர்கள் இந்த அமாவாசையில் தங்களின் குடும்பத்தில் பிறந்து இறந்தவர்களுக்கான திதி தர்ப்பணங்களை சரியான முறையில் செய்துவர, இந்த தோஷங்களும் குறையும்.
பித்ரு தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள்:
ஒரு ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவர்களுக்கு முன்நின்று வழிகாட்டக்கூடிய ஒரு நபர் நிச்சயமாக இருக்க மாட்டார். அதே போன்று கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கக்கூடிய எந்த சுகமும் இவர்களை வந்தடைவதில்லை.பித்ரு தோஷங்கள் இருக்கும் ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் கெடும் சூழலைக் காண முடிகிறது.எல்லா வகையிலும் இன்னலைக் கொடுக் கிற இந்த பிதுர் தோஷத்தை நீக்கும் ஒரு அற்புதமான வழிபாடு இந்த அமாவாசை வழிபாடாகும்.
அமாவாசை வழிபாடு
அவரவர் வழிமுறைப்படி தர்ப்பணங்கள் அளிப்பது மற்றும் புனிதத் தீர்த்தத்தில் நீராடி அங்குள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்குவது, காகத்திற்கு உணவளிப்பது, பசு மாட்டிற்கு உணவளிப்பது போன்றவை இதன் தாக்கத்திலிருந்து விடுபட வைக்கும்.மேலும் கேரளாவில் அமைந்துள்ள திருவள்ளம் பரசுராமர் ஷேத்திரம் சென்று திதி தர்ப்பணங்கள் செய்துவந்தால் இவர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள அனைத்து வகையான தோஷங் களும், அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளும் குறைவது நிச்சயம்.
எங்குமே செல்ல முடியாதவர்கள் ஒரு மரத்தடியில் மூன்று இலைகளைப் பரப்பி, அதில் ஒவ்வொரு இலையிலும் சாதம், சாம்பார், ஏதாவதொரு பொரியல் மற்றும் ஒரு இனிப்பு ஆகியவற்றை வைத்து, முதல் இலை தங்களின் குடும்பத்தில் பிறந்து இறந்தவர்களுக்காகவும், இரண்டாவது இலை இந்த உலகத்தில் பிறந்த மகான்கள், ரிஷிகள் ஆகியோர்களுக் காகவும், மூன்றாவது இலை இந்த உலகத்தில் பிறந்து ஈமக்காரியங்களைச் செய்யமுடியாமல் இறந்த ஆன்மாக்களுக்காக எனவும் மனதார வேண்டிக்கொண்டு, ஒவ்வொரு இலையில் உள்ளவற்றையும் பிசைந்துவிட்டு, கற்பூரம் ஏற்றிவிட்டு, பிரபஞ்சத்தை நோக்கித் தங்களின் கோரிக்கைகளை சொல்லிவிட்டு வீடு திரும்ப, எல்லா வளங்களும் பெறமுடியும்.