Skip to main content

புரட்டாசி மகிமை !

Published on 25/09/2018 | Edited on 26/09/2018

மிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பல சிறப்புக்களை உடையது. நம் பூர்வாச்சார்யார்களில் ஸ்வாமி நிகமானந்த தேசிகனும், அகோபில மட முதல் பட்டத்தை அலங்காரம் செய்த ஜீயர் ஸ்வாமியும், திருமலை நம்பியும் வானமாமலை ஜீயரும் இம்மாதத்தில் வந்துதித்து வைணவ உலகத்திற்கு அரும்பெரும் தொண்டாற்றி உள்ளனர். திருமலையில் ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுவதும் இம்மாதத்தின் சிறப்பாகும்.

நாயன்மார்களில் ஏனாதி நாயனார் (உத்திராடம்), நரசிங்கமுனையறையர் (சதயம்), ருத்ர பசுபதி நாயனார் (அஸ்வினி), திருநாளைப்போவார் (ரோகிணி), அருணந்தி சிவாச்சாரியார் (பூரம்) மற்றும் அருட்பிரகாச இராமலிங்க சுவாமிகள் இம்மாதத்தில் தோன்றியவர்கள்.

perumal



புரட்டாசி சனிக்கிழமைகளில் பூரண உபவாசமிருந்து, தூய பக்தியுடன் திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமாளைப் பூஜிக்க வேண்டும். அதிகாலையில் குளித்து, தூய ஆடை அணிந்து, பூஜையறையில் கோலமிட்டு தீபம் ஏற்றி, அலர்மேலு மங்கை சமேத வேங்கடேசப் பெருமாளின் படத்தை வைத்து, துளசி, பூமாலை சாற்றி, சுப்ரபாதம், வேங்கடேச ஸ்தோத்திரம், அஷ்டோத்திரம் செய்வது சிறப்பு. பெருமாளுக்கு சிலர் மாவிளக்கு ஏற்றுவர். விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லலாம், பால், பழம் திருக்கண்ணமுது, வடை, பாயசம் நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி காட்டவேண்டும்.

புரட்டாசி பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து மஹாளய பட்சம் ஆரம்பம். அந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு ஏற்றதாகும். மஹாளய அமாவாசை தர்ப்பணம் (தந்தை இல்லாதவர்கள்) அவசியம் செய்யவேண்டும்.

அம்பிக்கைக்கு நவராத்திரியும் புரட்டாசியில் ஆரம்பம். இந்நாட்களில் வீடுகளில் கொலு (பொம்மை) வைப்பார்கள். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியைக் கொண்டாடுவார்கள். பத்தாம் நாள் வெற்றித் திருநாள்; வித்யாரம்பத்துக்கு ஏற்ற நாள்.

நடராஜர் அபிஷேகம் வருடத்திற்கு ஆறுமுறை நடக்கும். அதில் புரட்டாசி மாதம் சதுர்த்தசியில் (மாலை) நடைபெறும். திருவோண நட்சத்திரத்தில் வாமன ஜெயந்தி வரும்.

பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை, பித்ருக்களுக்கு ஏற்ற மஹாளய பட்சம், அம்பிக்கைக்கு ஏற்ற நவராத்திரி, வாமன ஜெயந்தி போன்றவற்றைக் கொண்டாடி மகிழ்வோம்.