
நாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் சாமி கோவில். இங்கு மண்டல மகரகால பூஜைக்காக கார்த்திகை 1-ம் தேதி நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றால் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு தினம் தோறும் 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டு கோவிலின் மேல்சாந்தி தேர்வு நேற்று (17-ம் தேதி) சபரிமலை சன்னிதானத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் நடந்தது. இதில் ஏற்கனவே திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோவிலில் பணியாற்றி வரும் 9 பேர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். அதில் ஒருவரை மேல்சாந்தியாக குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்தனர்.
பந்தளம் கொட்டாரத்திலே கோவிந்த் வர்மயும் மற்றும் நிரஞ்சன் ஆர் வர்மயும் வெள்ளிக்குடத்தில் போடப்பட்டிருந்த 9 பேர் பெயர்களின் சீட்டில் ஒன்றை எடுத்தனர். அதில் பரமேஸ்வரன் நம்பூதிரியின் பெயர் இருந்ததையடுத்து அவர் மேல்சாந்தியாக அறிவிக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட பரமேஸ்வரன் நம்பூதிரி ஏவூர் ஸ்ரீகிருஷ்ணன் சுவாமி கோயில் மேல்சாந்தியாக இருக்கிறார். இனி இந்த ஆண்டு சபரிமலை மண்டல மகர கால பூஜைக்காக கோயிலின் மேல்சாந்தியாக இவர் இருப்பார்.

மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்ட பரமேஸ்வரன் நம்பூதிரி கூறும் போது, “என்னுடைய லட்சியம் நிறைவேறிவிட்டது. நான் 30 ஆண்டுகளாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு உட்பட பல கோவில்களில் மேல்சாந்தியாக பணியாற்றி உள்ளேன். அதற்காக கடவுள் தந்த அங்கிகாரம் தான் இது. 26 ஆண்டுகளுக்கு முன் இதே ஸ்ரீகிருஷ்ணன் சுவாமி கோவிலில் மேல்சாந்தியாக இருந்த எனது சகோதரர் கோவிந்தன் நம்பூதிரி சபரிமலை மேல்சந்தியாக தோ்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது மீண்டும் அந்த வாய்ப்பு என் குடும்பத்துக்கு கிடைத்துள்ளது என்றார்.
பரமேஸ்வரன் நம்பூதிரிக்கு உமாதேவி என்ற மனைவியும் நாராயண நம்பூதிரி, விஷ்ணு நம்பூதிரி என இரண்டு மகன்களும் உள்ளனர். அடுத்த மாதம் நவம்பர் 16-ம் தேதி மகர மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்படுகிறது.