ஒரு பெண் தன் இல்வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கவேண்டுமென்று ஆசைப்படுவாள். ஆனால் சில பெண்கள் தங்கள் கணவனுடன் கருத்துவேறுபாடு கொண்டிருப்பார்கள். அதனால் குடும்பத்தில் அமைதி இருக்காது. அப்படிப்பட்ட சூழல் வருவதற்கு ஜோதிடத்தில் காரணங்கள் உள்ளன. மனைவிமீது கணவனுக்கு சில நேரங்களில் தீவிரமான சந்தேகம் எழும். அதன்மூலம் பல பிரச்சினைகளும் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் விரிசல்கள் உண்டாகும்.
அதற்கு முக்கியமான காரணம்- ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் பாவத்திற்கு அதிபதியான கிரகம். அந்த கிரகம் நீசமாகவோ அஸ்தமனமாகவோ இருந்தால், அப்பெண்ணின் கணவர் விபரீதமான சிந்தனை கொண்டவராக இருப்பார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்தில் சுக்கிரன், கேது இருந்தால், அந்தப் பெண் பலருடன் பேசிப்பழகும் சுபாவம் கொண்டவளாக இருப்பாள். தன் விருப்பப்படி ஆடைகளை அணிவாள். அதனால் அவளை அவளுடைய கணவர் சந்தேகத்துடன் பார்ப்பார். இதன்காரணமாக வாழ்க்கையில் தொல்லைகள் சூழும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன் அல்லது சூரியன், ராகு, சுக்கிரன் இருந்தால், அந்தப் பெண் தேவையற்ற விஷயங்களை தேவையற்ற மனிதர்களுடன் பேசிக்கொண்டிருப்பாள். பல நேரங்களில் கோபமாகப் பேசுவாள். அதனால் அவள்மீது கணவர் சந்தேகப்படுவார். அதன்காரணமாக வீட்டில் சண்டைகள் உண்டாகும்.
பெண்ணின் ஜாதகத்தில் 6-ல் சுக்கிரன், புதன், ராகு அல்லது சுக்கிரன், சூரியன், கேது, புதன் இருந்தால் அந்தப் பெண்ணுக்கு பல தடைகளைக் கடந்துதான் திருமணமே நடைபெறும். அவள் பல ஆண்களுடனும் சுதந்திரமாகப் பேசுவாள். திருமணமான பிறகும், அவள் ஆண்களுடன் எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவாள். இதனால் அவள்மீது கணவருக்கு சந்தேகம் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் வாத, விவாதங்கள் எழும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் 4-ல் இருந்து, அதை இன்னொரு பாவ கிரகம் பார்த்தால், அந்தப் பெண் எப்போதும் தன் குடும்பத்தைப் பற்றியும், பெற்றோரைப் பற்றியுமே பேசிக்கொண்டிருப்பாள். அதன்காரணமாக வீட்டில் சண்டைகள் உண்டாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் லக்னத்திலோ ஏழிலோ இருந்து சனியைப் பார்த்தால், அந்தப் பெண் எப்போதும் கோபத்துடன் பேசுவாள். தேவையற்ற விஷயங்களையெல்லாம் பேசிக்கொண்டிருப்பாள். அவள்மீது கணவனுக்கு பல நேரங்களில் சந்தேகம் உண்டாகும். அதனால் குடும்ப வாழ்க்கை கெடும்.
ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடக்கும்போது ஜாதகத்தைப் பார்ப்பார்கள். பெண்ணின் ராசியிலிருந்து ஆணின் ராசி 6-ஆவது ராசி அல்லது 8-ஆவது ராசியாக இருந்தால் சஷ்டாஷ்டகம் உண்டாகும். அதனால் கணவனுக்கும் மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். அது அதிகமாகும் போது, பெண்ணுக்கு கோட்சாரத்தில் குரு பகவான் 3 அல்லது 6-ல் இருந்தால், அந்த வீட்டில் தேவையற்ற சந்தேகங்கள் உண்டாகும். கணவனும் மனைவியும் பிரியவேண்டிய சூழல்கூட உண்டாகும். ஒரு பெண்ணுக்கு கோட்சாரத்தில் சனி 7 அல்லது 12-ல் இருந்து, அந்த நேரத்தில் ராகு ராசியிலோ 2-லோ இருந்தால், வீட்டில் சந்தேகம் உண்டாகும். அதனால் கணவனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை நடக்கும்.
ஒரு வீட்டிற்கு தென்மேற்கு வாசல் இருந்து அந்த வீட்டின் படுக்கையறை வடமேற்கில் இருந்தால், அங்கு சந்தேகம் அதிகமாக இருக்கும். படுக்கையறையில் வடக்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தாலும் மேற்கில் தலைவைத்துப் படுத்தாலும் சந்தேகம் எழும். வீட்டின் தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்து, வடகிழக்கில் மரங்கள் அல்லது தேவையற்ற பொருட்கள் இருந்தால், அங்குள்ள கணவருக்கு தன் மனைவியின்மீது சந்தேகம் உண்டாகும். அதனால் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி குறையும்.
பரிகாரங்கள்
மனைவிமீது சந்தேகப்படும் கணவர், அது நீங்குவதற்கு தினமும் சிவனுக்கு பால், நீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யவேண்டும்.
வீட்டில் குப்பைகளை சேர்த்துவைக்கக்கூடாது.
படுக்கையறையில் வடக்கு அல்லது தெற்கில் முகம்பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது.
தெற்கில் தலைவைத்துப் படுப்பது நல்லது. தென்கிழக்கில் படுக்கக்கூடாது.
வெள்ளிக்கிழமை துர்க்கை அல்லது மகாலட்சுமியை வழிபடவேண்டும்.
கணவர்- மனைவி இருவருமே கருப்புநிற ஆடை அணிவதைத் தவிர்க்கவேண்டும்.
வீட்டில் பழைய செருப்புகளை சேர்த்து வைக்கக்கூடாது. இரவில் துணி துவைப்பது நல்லதல்ல.
செவ்வாய்க்கிழமை லட்டு, பூந்தி ஆகியவற்றை தானமளிப்பதால் இல்லறத்தில் நிம்மதி நிலவும்.