கஷ்டப்படும் எளிய மனிதர்களின் கடைசி நம்பிக்கை கடவுள் தான். அப்பா அம்மாவிடம் கூட பகிர்ந்துகொள்ள முடியாத பல விஷயங்களைக் கடவுளுடன் நாம் பகிர்ந்துகொள்ள முடிகிறது. நம்முடைய சுமைகளை இறக்கி வைக்க ஒரு துணை தேவைப்படுகிறது. அப்படியான சுமைகளை இறக்கி வைக்கும் இடமாகப் பலருக்கும் இருப்பவை கோயில்கள். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள அச்சுதமங்கலத்தில் அமைந்துள்ள சோமநாதர் கோயிலின் சிறப்புகள்; பக்தர்களுக்கு அது ஏன் நெருக்கமாக இருக்கிறது என்பது பற்றிப் பார்க்கலாம்.
சிவபெருமானை வழிபட ஒவ்வொரு ஊரிலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவை தளங்கள் என்று போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட தளங்களில் முக்கியமான ஒன்று தான் இந்த சோமநாத சுவாமி ஆலயம். அச்சுதன் இங்கே இருந்து மங்கலம் பெற்ற காரணத்தினால் இந்த ஊருக்கு அச்சுதமங்கலம் என்கிற பெயர் கிடைத்தது. திருமணமாகாத பெண்களும் ஆண்களும் இங்கு வந்து அர்ச்சனை, அபிஷேகம் செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை.
இந்தக் கோவில் 11 விநாயகரும் 3 முருகரும் இருக்கும் சிறப்பு பெற்றது. திருமணம் ஆகாதவர்கள் இங்கு உள்ள கல்யாண சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் மூன்று மாதங்களில் அவர்களுக்குத் திருமணம் நடக்கும் என்கின்றனர் நேரடி அனுபவம் பெற்ற பக்தர்கள். இங்குள்ள ஜுரஹரேஸ்வரரை வழிபட்டால் எவ்வளவு ஜுரம் இருந்தாலும் குணமாகும் என்கிற நம்பிக்கையும் உண்டு.
இங்குள்ள சிற்பங்கள் மிகவும் அழகானவை. கடவுள் சிலைகள் பிரமாண்டமாக இருக்கின்றன. சௌந்தரநாயகி அம்மனுக்கு அமாவாசை, பௌர்ணமி சமயங்களில் பூஜை செய்து வந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராகுவும் கேதுவும் பின்னிப் பிணைந்திருக்கும் சிற்பமே இது சேக்கிழார் கட்டிய கோயில் தான் என்பதை உறுதிப்படுத்துகிறது என்கின்றனர் கோயிலில் பணிபுரிபவர்கள். இது இந்தக் கோயிலில் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி.
சிவபெருமான் மூன்று அசுரர்களையும் அழித்தபோது அவர்களில் இருவரை துவார பாலகர்களாகவும், ஒருவரை அதிகார நந்தியாகவும் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் என்ன கேட்டாலும் கொடுக்கும் வல்லமை கொண்டவர் சோமநாதர் என்று அடித்துக் கூறுகின்றனர் இந்தக் கோயிலை அறிந்தவர்கள். கேட்டதைக் கொடுக்கும் ஒரே ஒரே சிவபெருமான் இந்த அச்சுதமங்கல சோமநாதர் தான் என்றும் கூறுகின்றனர்.