நாட்டில் ஓடும் நதிகள், வானுயர் கோபுரங்களோடு காட்சி தரும் திருத்தலங்களுக்கு பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற விழாக்கள், கும்பமேளாக்கள் ஆகியவை நாம் வாழும் நாட்களில் வருகிறதென்றால், நாம் புண்ணியம் செய்த ஆன்மாக்கள் என்றே நினைத்துக்கொள்ள வேண்டும்.
அப்படி ஒரு விழா அக்டோபர் 11 முதல் 22 வரை நெல்லைப் பகுதியில் ஆர்ப்பரித்து ஓடுகிற தாமிரபரணி ஆற்றில் கொண்டாடப்படுகிறது. ஆம்! தாமிரபரணி புஷ்கரம்! வாஸ்து பகவான் ஆண்டிற்கு எட்டுமுறை விழித்து வீடு கட்ட அருள்வழங்குவதுபோல, இந்த உடலில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாவைப் புனிதப்படுத்தி நீண்ட ஆயுளுடன், நிறைசுகத்துடன் வாழவைக்க புஷ்கர தேவதை இந்த 12 தினங்களில் தாமிரபரணி ஆற்றில் தங்கி நமக்கு ஆசி வழங்கிட எழுந்தருள்கிறார்.
குரு பகவான் அசைவை முன்வைத்தே பாரத நதிகளுக்குப் புஷ்கர விழா நடத்தப்படல் வேண்டும். அவர் தாமிரபரணியின் ராசியான விருச்சிகத்திற்கு எழுந்தருள்கிறார். அந்தக் காலகட்டத்தில் இந்த மகாநதியின் கரைக்கு வந்து ஒருமுறை புனித நீராடிவிட்டுச் செல்லுங்கள்.
மகாமுனிவரின் மகளாய்
கலியுகத்தில் மனிதர்களைத் தொற்றும் பாவங்களை அகற்றும் கங்கை நதி தான் சேர்த்த புண்ணியத்தில் பாதியை ஜீவநதியாகிய தாமிரபரணிக்கு வழங்கிவிட்டதாக மத்ஸய புராணத்திலுள்ள தாமிரபரணி மகாத்மியம் கூறுகிறது.
தவங்கள் பல செய்து இறைவனது அருட்காட்சியைக் கண்ட ஆங்கீரச முனிவர் தன் மனைவி சிரத்தாவுடன் கங்கைக்கரையில் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார். பல ஆண்டுகளாகியும் அவருக்கு வாரிசு பிறக்கவில்லை. அதனால் தனக்கு புத்திர லாபம் வேண்டி மனைவி சிரத்தாவுடன் மும்மூர்த்திகளை நோக்கித் தவம் செய்தார். அதன்பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அக்குழந்தைக்கு "ரிஷிகுல்லா' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். பருவமடைந்து 18 வயதைக் கடந்த அப்பெண் மனதில் மிகப்பெரிய ஆசை துளிர்த்தெழுந்தது. "இப்பூவுலகில் கங்கை நதியைப்போலப் புனிதம் பெறவேண்டும்' என்று, ஒரு மலை உச்சியில் அமர்ந்து மும்மூர்த்திகளை நோக்கிக் கடுந்தவம் இயற்றத் தொடங்கிவிட்டாள். எண்திசைக் காவலர்கள் அவள் தவத்தை கலைக்க முற்பட்டபோதும் முடியவில்லை. உடனே மும்மூர்த்திகள் தோன்றி, "நீ என்ன கேட்கிறாய் வரமாக' என்றதும், "கங்கை நதிக்குரிய புனிதத்துவம் எனக்கும் வேண்டும்' என்றாள்.
"அது முடியாத செயல் பெண்ணே! கங்கையானவள் தன்னலம் இல்லாமல் ஏழு உலகங்களிலும் கங்கா மாதாவாக அவள் ஒருத்தி மட்டுமே இருக்க முடியும். உனக்கு எப்படி அவளது சாந்நித்யத்தைக் கொடுக்க முடியும்?' என்று கேட்டனர்.
"குறுமுனிவர் அகத்தியரது கமண்டலத்திலிருந்து காவிரி நதி ஆசி பெற்று வந்ததைப்போல, ஆங்கீரச முனிவரின் தவப்புதல்வியான எனக்கும் அந்த வரத்தைத் தந்துவிட வேண்டும். இல்லை என்றால் நான் இங்கேயே உயிர் துறப்பேன்' என்று அவர்கள் முன்பு மண்டியிட்டாள்.
கண நேரம் யோசித்தவர்கள், தென்தமிழ்நாட்டை வளப்படுத்துகிற காவிரி நதியைப்போல பொதிகை மலையிலிருந்து மேற்குப் பகுதியை வளப்படுத்திட ஒரு நதி தேவைப்படுகிறது. எனவே அவளது விருப்பத்தை நிறைவேற்றுவதாகக் கூறி, அகத்திய முனிவருடன் அனுப்பி மலைய பர்வத ராஜனிடம் ஒப்படைத்துவிடும்படி கூறினர்.
அவதரித்தாள் தாமிரபரணி
தவத்தால் வெற்றி கண்ட ரிஷிகுல்யாவைப் பேரழகியாக அலங்காரம் செய்து, ஸ்வீகரண மந்திரம் கூறி மலையரசனிடம் ஒப்படைத்தார் அகத்திய முனிவர். அவன் தான் பெற்ற மகளைப்போலப் போற்றி வளர்த்துத் தேவ சிற்பியாகிய விஸ்வகர்மா நிர்மாணித்த சக்கரபுரம் என்கிற தெய்வீகப் பட்டணத்தில் அனைத்து தேவர்கள், மகரிஷிகளை அழைத்து, வேத பண்டிதர்கள் மந்திரங்களை முழங்க, மங்களகரமான வேளையில் சமுத்திர ராஜனுக்குத் திருமணம் செய்துவைத்தார்.
திருமண வைபவம் முடிந்தவுடன், விஸ்வகர்மா அருகில் உருவாக்கிய சக்ரசரஸ் என்னும் குகைக்குள் நீர்வடிம் எடுத்து, "தாமிரபரணி' என்ற பெயரைப் பெற்று, பொதிகை மலை உச்சியிலிருந்து பிரவாகமெடுத்து நெல்லை பூமியை வட்டமிட்டு, கங்கை முதலான புகழ்பெற்ற பாரத நதிகளோடு குகையிலேயே கலந்து சென்றாள்.
பரணி நதியின் பாவம்தீர் தீர்த்தங்கள்
பாபநாசம் முதல் புன்னக்காயல் என்னும் கடல் முகத்துவாரம் வரை சுமார் 200 படித்துறைகள் கொண்ட தாமிரபரணி நதி தான் பூமியில் தவழ்கின்ற இடங்களில் எல்லாம் பல தீர்த்தக் கட்டங்களை உருவாக்கிச் சென்றிருக்கிறாள். இந்திர தீர்த்தம், பாண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், பாபநாச தீர்த்தம் போன்ற தீர்த்தக்கட்டங்கள் அவள் பூமியில் தவழும் போது தோன்றின. இப்படியே தாமிரபரணி நதி ஓடி நிறைவாக ஆத்தூர் என்னும் சிற்றூருக்கு அருகே தன் கணவனாகிய கடலரசனுடன் சங்கமமாகிவிடுகிறாள்.
மகான்கள் போற்றிய மகாநதி
மகாகவி காளிதாசர் ரகுவம்சத்தைப் படைக்கின்றபோது அதன் நான்காவது சருக்கத்தில், "சூரிய பகவானுடைய ஒளியைக்கூட மங்கச் செய்கின்ற ஆற்றல் படைத்த மன்னர்கள் ஆட்சி செய்த அரியணைக் கூடங்கள் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளன' என சொல்லிஇருக்கிறார்.
நீலகண்ட தீட்சிதர் தான் அருளிய நதித்தோத்திரத்தில், "அனைத்து நதிகளும் கடலில் கலக்கின்றபோது மீன்களையும் தவளைகளையும் மட்டுமே உண்டாக்குகின்றன. ஆனால் தாமிரபரணி கடலில் கலந்து மணிகளையும் முத்துக்களையும் படைத்துவிடுகிறாள்' என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
மகாபாரதத்தை உலகுக்குத் தந்த வேதவியாசர், "தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நாதாம்புஜ க்ஷேத்திரத்தில் பத்மப்ரியர் சந்நிதிக்குள் சென்று தான் தவம் இயற்றியதால் பிரம்ம ஞானத்தை அடைய முடிந்தது' என்கிறார்.
கல்கி அவதாரம் தாமிரபரணி நதிக்கரையில் நிகழப்போவதாக ஸ்ரீமத் பாகவதம் தன் சர்க்கத்தில் கூறுவது அறிய வேண்டியது. "மாலா மாதா' என்ற பெயரில் தாமிரபரணி தேவி வழிபாட்டுக்குரிய தெய்வமாக இருந்ததாக கால வரலாற்று ஏடுகளால் அறிந்துகொள்ள முடிகிறது.
இந்த மகாபுண்ணிய நதியிடம் சங்கமமாகின்ற பிற நதிகளைக் காணும்போது கடனாவும் தாமிராவும் முக்கூடலில் கலந்துவிடுகின்றன. சியாமளா நதி தருவையிலும், சீவலப்பேரியில் சித்ரா நதியும், பாசவத நதியும் இத்துடன் சேர்கின்றன.
தெய்வ சங்கமமாய் தாமிரபரணி!
பாவங்களை நீக்குகிற நதி மட்டுமல்ல; அறிவு தரும் நீர் வடிவம் என்றும் கூறலாம். தாமிரபரணியின் பெருமைகளைப் பற்றி ஹயக்ரீவர் துதி, யமகீதை, கங்கா ஸ்துதி, அத்திரி தோத்திரம், சங்க ஸ்துதி, கத்தி நாமம், பிரம்மச்சர்ய ஸ்துதி, வேத வியாச துதி, கசாவதீ ஜெபம், விஸ்வதேவர்கள் துதி, கௌதமர் நாமத்துதி ஆகியன மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளன. தன்னிடம் பாவிகள் விட்டுச்சென்ற பெரும் பாவங்களைப் போக்கிக் கொள்ள கங்கை நதியானவள் ஒவ்வொரு வருடமும் தாமிரபரணியில் ஸ்நானம் செய்திட வருவதாக ஐதீகம்.
தலைப்பாகத்தில் பரமேஸ்வரனும், திருநெற்றியில் மகாவிஷ்ணுவும், இதய பாகத்தில் பிரம்ம தேவனும், கைகளில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளும், தொடைப்பாகத்தில் பொதிகைமலை, திருக்கயிலாயம் மற்றும் புஷ்கர மலைகளும், கண் பாகத்தில் சூரியன் மற்றும் புஷ்கர மலைகளும், நேத்திரங்களில் சூரிய சந்திரர்களும், காதுகளில் அஷ்டவசுக்களும், கன்னங்களில் பாரத நதிகள் பலவும், நாக்கில் ராஜமாதங்கியான கலைவாணியும், மார்பினில் மகாலட்சுமி தேவியும், கால்மூட்டுகளில் ஆதிசேடன் முதலிய நாகதேவ தைகளும், உரோமக்கால்களில் தவம் செய்யும் முனிவர்களும் வாசம் செய்வதாக சாஸ்திரம் உள்ளது.
நம் நாட்டில் உள்ள நதிகள் அருகே காணமுடியாத அபூர்வமான சக்தியுடைய தலங்களைத் தாமிரபரணி நதிக்கரையில் தரிசிக்கமுடியும். நவதிருப்பதிகளான ஸ்ரீவைகுண்டம், திருவரகுணமங்கை, திருப்புளியங்குடி, இரட்டைத் திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய பெருமாள் தலங்களும்; நவகயிலாயங்கள் எனப்படுகிற பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, இராசபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய சிவபுண்ணியத் தலங்களும் உள்ளன.
தன்னையே நீராட்டும் பரணி
திருநெல்வேலி நகரில் நடுநாயகமாகக் கோவில் கொண்டுள்ள நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் அம்மன் சந்நிதிமுன் துவாரபாலகிகளாக, கங்கை, யமுனை ஆகிய நதிகள் பெண் வடிவத்தில் காட்சி தருகின்றனர். இங்கே நாயன்மார் சந்நிதி அருகில் தாமிரபரணித் தாய் சிலை வடிவத்தில் காட்சி தருவதைபக்தர்கள் தினமும் தரிசிக்கின்றனர். சித்திரைப் பௌர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இந்த தேவியை அலங்காரம் செய்து தாமிரபரணி நதிக்கு எடுத்துச்சென்று புனித நீராட்டு செய்வார்கள். இந்நிகழ்வு ஏனெனில், இந்த நதியில் நீராடினால், பாவங்கள் அகன்று புண்ணியங்கள் சேரும் என்ற தத்துவத்தை உணர்த்தவே.
தாமிரபரணி நதியில் எப்போதுமே தண்ணீர் வற்றாததற்கு ஒரு காரணம் உள்ளது. இந்தப் புனித நதியை அகத்தியரே உண்டாக்கினார் என்று ஒரு காரணம் சொன்னாலும், வேத சாஸ்திர விற்பன்னர்கள் இப்படியும் ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள். கோவில்களில் சுவாமி அபிஷேக நீர் வடபாகத்தில் கோமுகி அமைக்கப்பட்டு அதன்வழியாக வெளியேறும். இத்தலத்தில் வருண திசையான மேற்கில் நீர் விழும்படி அமைக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் மழைபொழிய வைக்கும் வருண பகவான் எப்போதும் தண்ணீர் பொங்கும் நிலையில் வைத்துள்ளார்.
ஒரு புண்ணிய நதி வடதிசை நோக்கிப் பாய்ந்தால் அது அனைத்து விதமான பாவங்களையும் தீர்க்கின்ற உத்தரவாஹினி என்று போற்றப்படுகிறது. காசி மாநகரத்தைப்போலவே இங்கும் பாணதீர்த்தம், பாபநாசம், திருப்புடைமருதூர், சிந்துபூந்துறை ஆகியவற்றில் வளைந்தோடும்போது அந்தப்பெருமை தாமிரபரணிக்குக் கிடைக்கிறது.
புஷ்கர தேவதை வரும் தினங்கள்
திருநெல்வேலி குறுக்குத்துறை படித்துறையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிற தாமிரபரணி புஷ்கர விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள், சிருங்கேரி சாரதா பீடாதிபதிகள், பண்டார சந்நிதிகள், மடாலய குருமார்கள், தவசீலர்கள் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்து ஆசி வழங்குகிறார்கள். தொடர்ந்து உலகநலன் பொருட்டு சாதுக்கள் மாநாடு' சதுர்வேத பாராயணம், கலைநிகழ்ச்சிகள், ஹோமங்கள் நடைபெறுகின்றன. தினமும் தாமிரபரணி நதியை தேவியாக பாவித்து மாலையில் மங்கள ஆரத்தி பூஜை நடத்தப்படுகிறது.
புஷ்கரகாலத்தில் விழாவைக் காணச்செல்லும் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று, தாமிரபரணி நதி ஓடும் ஏதாவது ஒரு படித்துறையில் அமர்ந்து மகாசங்கல்பம் செய்து, கன்யா பூஜை, சுமங்கலிப் பூஜை, தீப பூஜை, பித்ருக்கள் வழிபாடு ஆகியவற்றைச் செய்து, 16 வகை தானங்களை முடிந்தவரை கொடுக்க வேண்டும். இயலாதவர்கள் புனித நீராடல் செய்துவிட்டு, நெல்லையப்பர் கோவில், நவதிருப்பதிகள், நவகயிலாயங்களையும், சுற்றியுள்ள தலங்களையும் தரிசனம் செய்துவரவேண்டும்.
புஷ்கர புனித நீராடல் பலன் என்ன?
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படுகிற ஒரு பில்வதளம் ஈரேழு பதினான்கு உலகங்களிலும் செய்துவந்த பாவங்களை உடனே களைந்துவிடுகிறது என்று "பில்வ மகிமை' துதி விவரிக்கிறது. ஆனால், புஷ்கர காலத்தில் நாம் நதி நீராடலைச் செய்வதால் மூன்றரை லட்சம் தீர்த்தங்களில் நீராடிய பலனும், 12 கும்பமேளாக்களிலும், 12 குடமுழுக்குப் பெருஞ்சாந்திப் பெருவிழாவிலும் கலந்துகொண்ட புண்ணியப் பலனும் கிடைத்துவிடுகிறது. ஏழு தலைமுறைப் பாவங்களும் அகன்று இனி வரப்போகிற ஏழு தலைமுறைகளுக்கும் புண்ணியப் பலன்களும் கிடைத்துவிடுகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறையே வருகின்ற மகாபுஷ்கர விழாக்காலங்களில் ஒரு நாள் சென்று, அந்த நாளின் பஞ்சாங்கக் குறிப்புடன் மகாசங்கல்பம் செய்து
"அதிக்ரூர மகாகாயா
கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம்
அனுக்ஞாம் தாதுமர்ஹஸி'
என்ற மந்திரத்தை மூன்றுமுறை சொல்லி நதிநீரில் மூழ்கி எழுந்து அவரவர் சம்பிரதாயப்படி விபூதி, திருமண் இட்டுக்கொண்டு ஆலயங்களை தரிசித்து அருள்பெற வேண்டும்.
செல்: 91765 39026